கடமைகளைச் செய்வோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம்,32 வாரம் செவ்வாய்
I: சாஞா: 2: 23 - 3: 9
II: திபா 34: 1-2. 15-16. 17-18
III: லூக்: 17: 7-10
"மொழிகளில் உள்ள எல்லா வார்த்தைகளிலும் மிக உயர்வான வார்த்தை கடமை ' " வின்சன்ட் சர்ச்சில் என்பவர் கூறியுள்ளார். "கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது. கடமைகளைச் சரிவர செய்தவர்கள்தான் வாழ்வில் பல சாதனைகளைச் செய்து மாமனிதர்களாக மாறியுள்ளனர். அதுவும் கடமைகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர்கள் புனிதர்களாகவும் மாறியுள்ளனர்.அதற்கு மிகச் சிறந்த உதாரணம் புனித அன்னை தெரசா. எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் கடமைகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதோடும்,மனித நேயத்தோடு செய்யும்பொழுது நாமும் சிறந்த மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற முடியும்.
நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யக்கூடிய செயல்களை கடமை உணர்வோடு செய்ய கடமைப்பட்டுள்ளோம். அதன் பலனை எதிர்பார்த்து நாம் நம் கடமைகளைச் செய்வோமானால் வாழ்வில் வெற்றியை அடைய முடியாது. பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நான் கடமையைச் செய்வேன் என்ற மனநிலையோடு பயணிப்பதே வெற்றிக்கான வழியை காட்டும்.
நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மிகச்சிறந்த திறமைசாலி. எல்லா மாணவர்களும் அவரைக் கண்டு வியக்கும் அளவுக்கு தன் கடமையைச் சிறப்பாக செய்பவர். மாணவர்களிடத்தில் அன்பாகப் பழகக் கூடியவர். பல மாணவர்கள் அவரைக் கண்டு வியப்பர். அவரால் ஒரு மிகச்சிறந்தப் பேராசிரியராக கல்லூரியில் பணி செய்ய முடிந்தது. இவரைக் கண்டு வியந்த மாணவர்களில் ஒருவர் "எவ்வாறு உங்களால் மிகச்சிறந்த பேராசிரியராக பணிபுரிய முடிகின்றது ?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பேராசிரியர் "நான் என்னுடைய கடமைகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மனசாட்சிக்கு பயந்து செய்வதே எனது சிறந்த பணிக்குக் காரணம் "என்று கூறினார். இவ்வாறாக பல சாதனைகளைப் புரிபவர்கள் பலனை எதிர்பார்த்து தங்கள் கடமைகளைச் செய்யவில்லை ; மாறாக, எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி தங்கள் கடமைகளைச் செய்கின்றனர். எதிர்பார்ப்பில்லாத மனநிலையோடு நம் கடமைகளைச் செய்கின்ற பொழுது , நிச்சயமாக நாமும் நம் வாழ்வில் பல சாதனைகளைப் புரிய முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
"செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தபின் நாங்கள் பயனற்ற ஊழியர்கள் செய்ய வேண்டியதைத் தான் செய்தோம் " என்ற செய்தி நம் கடமைகளைச் சிறப்பாகச் செய்ய அழைப்பு விடுக்கின்றது. இன்றைய உலகத்தில் சுயநலப்போக்கு அதிகமாக இருப்பதற்குக் காரணம் பலனை எதிர்பார்த்து தங்கள் கடமைகளைச் செய்வதாகும். உதாரணமாக, ஒரு மரக்கன்றை நடுகிறோமென்றால் அது வருங்காலத் தலைமுறையினருக்கு வாழ்வு கொடுக்கும் என்ற மனநிலையில் நடும்பொழுது, நிச்சயமாக நம் வாழ்வு ஒரு முழு அர்த்தம் நிறைந்ததாக மாறுகிறது. ஆனால் நாம் நடுகின்ற மரமானது குறுகிய காலத்தில் நமக்கு மட்டுமே பலன் கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் நடுகின்ற பொழுது, நம் வாழ்வு முழு அர்த்தம் நிறைந்ததாக மாறாது. எனவே இந்த நாளில் நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்ட விரும்புவது எதிர்பார்ப்பில்லாமல் நம் கடமைகளைச் செய்வதாகும்.
நம்முடைய கத்தோலிக்கத் திருஅவை 2000 ஆண்டுகளாகச் சிறப்பாக பயணித்து வருவதன் காரணம் நம் முன்னோர்கள் தாங்கள் செய்த நற்செய்திப் பணியை எந்த ஒரு கைமாறும் எதிர்பார்க்காமல் கடமை உணர்வோடு செய்தனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த திருத்தூதர்கள் ஆவர். திருத்தூதர்கள் தூய ஆவினுடைய ஆற்றலை பெந்தெகோஸ்தே நாளில் பெற்றுக்கொண்ட பிறகு, பொன்னையே பொருளையோ எதிர்பார்க்காமல், முழு மனதோடும், ஈடுபாட்டோடும் நற்செய்திப் பணியைச் செவ்வனே செய்து வந்தனர். அன்று அவர்கள் விதைத்த இந்த இறைநம்பிக்கைதான், இன்றளவும் நம் திருஅவை செழுமையோடு உயர்ந்து நிற்கின்றது. ஒருவேளை அவர்கள் இவ்வுலகம் சார்ந்த பொன்னையும் பொருளையும் எதிர்பார்த்து நற்செய்திப் பணியை செய்திருந்தார்கள் என்றால், நிச்சயமாக திருஅவை இவ்வளவு பெரிய திருஅவையாக உயர்ந்திருக்க முடியாது. எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடையக் கடமைகளைச் செய்வோம். "விதைப்போம், முளைத்தால் மரம் இல்லை என்றால் உரம் " என்ற மனநிலையோடு நம்முடைய கடமைகளைச் செய்ய முயற்சி செய்வோம். அவ்வாறு நம் கடமைகளை எந்த ஒரு பலனும் எதிர்பார்க்காமல் செய்யும்பொழுது நாம் ஒரு மாமனிதராகவும் புனிதராகவும் வாழ முடியும். எதிர்பார்ப்பில்லாமல் நம் கடமைகளைச் செய்யும் மனநிலையை இறைவனிடம் வேண்டுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் எங்களுக்கு பல கடமைகளைக் கொடுத்திருக்கிறீர். அந்தக் கடமைகளை நாங்கள் பலனை எதிர்பார்த்து செய்யாமல், முழு உள்ளத்தோடு தொடர்ந்து எங்கள் கடமைகளை நிறைவாகச் செய்யும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்