இயேசுவைப் போல் பிறரை அன்பு செய்வோமா? | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா - 5ஆம் வாரம் வெள்ளி 
மு.வா: திப:15: 22-31
ப.பா: திபா :57: 7-8. 9-11
ந.வா:யோவான் :15: 12-17

 இயேசுவைப் போல் பிறரை அன்பு செய்வோமா? 

இரு பள்ளிச் சிறுமிகள் மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஒருவர் பெயர் ராணி. மற்றொருவர் பெயர் கீதா. ஒருமுறை கீதாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே இரண்டு மூன்று நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. உடனே ராணி மிகவும் அடம்பிடித்து கீதாவைக் காணத் தன் அம்மாவையும் கூட்டிச் சென்றார். ஒருநாள் முழுவதும் தன் தோழியின் அருகிலேயே இருந்து நன்றாகக் கவனித்துக்கொண்டாள். அப்போது கீதாவின் அம்மா " இவ்வளவு அழகாக அக்கறையாக கவனித்துக்கொள்கிறாயே? எங்கிருந்து கற்றுக்கொண்டாய் எனக் கேட்டார்?" . அதற்கு ராணி "எனக்கு முடியாத நாட்களில் என் அம்மா என்னை இப்படித்தான் பார்த்துக்கொள்வார். நானும் என் அம்மாவைப் போல என் தோழியைக் கவனித்துக்கொள்வேன்" என தன் மழலைமொழியில் பதிலளித்தார்.

இன்று இயேசு நமக்குக் கூறும் செய்தி என்னவென்றால்" நான் உங்களை அன்புசெய்தது போல் நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள் "என்பதே. இது அவரது கட்டளை. 

இயேசுவின் அன்பு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அன்பு. பிழைகளை மன்னிக்கும் அன்பு.வழிகாட்டும் அன்பு. பணிவான அன்பு. தேவையில் இருந்தவர்களைத் தேடிச் சென்று அன்பு செய்தார் அவர். உயர்ந்தவர் தாழ்ந்தவர், படித்தவர் படிக்காதவர் என ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை அவர்.கானாவூர் திருமணத்தில் மகிழ்வாரோடு மகிழ்ந்தார். தன் நண்பன் லாசரின் இறப்பை எண்ணி அழுதார். தன்னைக் காட்டிக் கொடுத்தவனை நண்பா என்று அழைத்தார். தன்னை வதைத்தவர்களுக்காக இறைவனின் மன்னிப்பை வேண்டினார். இன்னும் இயேசுவின் அன்பின் சிறப்புக்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

நமது அன்பு இயேசுவின் அன்பைப் போல் உள்ளதா என ஆராய்ந்தோமானால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் மறுக்கமுடியாது. பல வேளைகளில் நமது அன்பு பாரபட்சமானது. நமது தேவையின் அடிப்படையில் அது அமைகிறது. நமக்கெதிராக நம் நெருங்கிய நண்பனே சிறு தவறு செய்தால் கூட மன்னிக்க மனமில்லை. அந்தஸ்து பார்த்துப் பழகுதல் என்று நம்முடைய அன்பெல்லாம் இயேசுவின் அன்பை விட முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.

இயேசுவைப் போல பிறரை நாம் அன்பு செய்யாவிட்டால் நிச்சயம் நம்மால் அவருடைய சீடர்களாக இருக்க முடியாது. நம் வாழ்வு கனிகொடுக்காது என்பதில் சந்தேகமில்லை. நாம் எப்படியிருந்தாலும் இயேசு நம்மை ஏற்றுக்கொண்டு நண்பர்கள் என்கிறார். நம்மால் முடிந்தவரை நம்மோடு வாழ்கின்றவர்களை இயேசுவைப் போல அன்பு செய்ய முயற்சிப்போம். அப்போது தான் நாம் இயேசுவுக்கு நண்பர்களாய் வாழ முடியும்.

 இறைவேண்டல்
எங்களை எப்போதும் அன்பு செய்யும் இயேசுவே! உம்மைப் போலவே நாங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யும் வரம் தாரும். ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்