சவப் பெட்டி... | அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி | Veritas Tamil
முதியவர் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டார். ஏழ்மையான குடும்பம். சவப்பெட்டி செய்ய வேண்டிய வசதி கிடையாது. அவருடைய உற்றார் உறவினர் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. குடும்பத்தின் ஏழ்மையை அறிந்த அவரின் பங்கிலுள்ள புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் சவப்பெட்டி ஒன்று செய்து தந்து இறந்த முதியவரை நல்லடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியைக் கண்ட இறந்தவருடைய நண்பர் தான் உயிரோடு இருக்கும்போதே, தனக்காக ஒரு சவப்பெட்டியைச் செய்தார். அச்சவப்பெட்டியைத் தான் தங்கியிருந்த படுக்கை அறையில் வைத்துக் கொண்டார். வீட்டிலுள்ள அனைவரும் சவப்பெட்டியை அங்கிருந்து அகற்றுமாறு கூறினர். அதற்கு பெரியவர் பின்வரும் விளக்கத்தைக் கொடுத்தார். "எனது பிள்ளைகளுக்கு அழகான புதிய வீட்டைக்கட்டி வைத்திருக்கிறேன். எனது இரண்டு மகள்களுக்கு திருமணத்திற்குத் தேவையான நகைகள், பொருட்களை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன். எனது மனைவியின் வங்கியில் சேமித்து எதிர்காலத்துக்காக, தேவையான பணத்தை வைத்திருக்கிறேன். இப்போது எனக்காக இந்த சவப்பெட்டியைச் செய்து வைத்திருக்கிறேன். இதுதான் என்னுடைய சொத்து. சவப்பெட்டியானது கல்லறை வரை மட்டுமல்ல, கல்லறைக்குள்ளேயும் வந்து எனது உடலைப் பாதுகாக்கும், வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை கடைசிவரை சவப்பெட்டி" என்றார்.
சில மாதங்களுக்குப்பின் பெரியவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு அவரைப் பார்க்க வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. தனிமையில் வாடினார். ஆனால் ஒருவர் தினந்தோறும் அதிகாலையில் தவறாமல் வந்து பெரியவரைப் பார்ப்பார். அவருடைய வருகை பெரியவருக்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது. அதனால் அவரின் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பார்.
ஒருநாள் தன்னைச் சந்திக்க வந்தவரைப் பார்த்து பெரியவர்,"ஐயா, நீங்கள் தினந்தோறும் தவறாமல் சந்திக்க வருகிறீர்கள். அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி. நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்வது என்று தெரியவில்லை. நீங்கள் யார்?" என்று கேட்டார். அதற்கு அந்த நபர், "நான்தான் இந்த மருத்துவமனையில் இறக்கிறவர்களுக்கு சவப்பெட்டி செய்கிறவன். உங்களுக்கு வயதாகிவிட்டது. நோயுற்று இருக்கிறீர்கள். நீங்கள் இறந்துவிட்டீர்களா என்று பார்த்து, சவப்பெட்டி செய்வதற்காகத் தினந்தோறும் அதிகாலையில் வந்து உங்களைப் பார்க்கிறேன்" என்றார்.
வீட்டிலும் சவப்பெட்டி!
மருத்துவமனையிலும் சவப்பெட்டி!
அனைவருக்கும் வேண்டியது சவப்பெட்டி!
ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது. ( நீமொ 19:23)
எழுத்து,
அருள்பணி. முனைவர் அந்தோணிசுவாமி.
