இரத்த தான முகாம். | Veritas tamil
இரத்த தான முகாம்.
தேதி: 28.03.2026
இடம்: புனித பிரான்சிஸ் ஆலயம் & சாகய அன்னையின் திருத்தலம், பிராட்வே பங்கு, சென்னை உயர் மறைமாவட்டம்
சென்னை உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் ஆலயமும் சாகய அன்னையின் திருத்தலமுமாகிய பிராட்வே பங்கில், குருத்து ஞாயிறை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் இரத்த தான முகாம் இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை வழக்கம்போல் பங்கின் மரியாயின் சேனை ஆண்கள் ஒழுங்குபடுத்தினர்.
இரத்த தான முகாம் அருட்தந்தை பிரான்சிஸ் சுந்தர்ராஜ் அவர்கள் சிறு செபத்துடன் தொடங்கி வைத்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட மருத்துவக் குழு அன்போடும் அர்ப்பணிப்போடும் சேவையாற்றினர்.
முகாம் காலை 9.15 மணிக்கு துவங்கியது. மரியாயின் சேனையின் தலைவர் திரு. அருளாந்து அவர்கள் முதல் நபராக இரத்த தானம் செய்து முகாமைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து ஒரு அருட்தந்தையையும் சேர்த்து 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர்.
பங்கேற்றவர்களில் சிலர் பகிர்ந்த கருத்துகள் நிகழ்வை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றின:
-
“இரத்த தானம் செய்வதற்காக மாமிசம் உண்பதைத் தவிர்த்துள்ளேன்.”
-
“இயேசு நமக்காக இரத்தம் சிந்தியதை நினைத்து, நான் இரத்த தானம் செய்கிறேன்.”
-
“விபத்தில் பாதிக்கப்பட்டு உயிர் துடிக்கும் பலருக்கு உதவ வேண்டும் என்பதால் இரத்த தானம் செய்கிறேன்.”
-
“முதல் முறையாக இரத்த தானம் செய்தேன்; பயம் இருந்தது, ஆனால் இதனால் மற்றவர் வாழ்வார் என்ற நம்பிக்கையில் தானம் செய்தேன்.”
இவ்வாறு பலர் அடுத்தவர் வாழ்வைப் பாதுகாக்கும் உயர்ந்த நோக்கத்துடன் பங்கேற்றது பாராட்டத்தக்கது. இரத்த தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாம் மதியம் 2.00 மணியளவில் நிறைவடைந்தது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மரியாயின் சேனை சார்பில் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.