தாழ்ச்சியால் இகழ்ச்சி அல்ல, மகிழ்ச்சி! | ஆர்.கே. சாமி | VeritasTamil

29 மார்ச்  2025                                                                                                                  
தவக்காலம் மூன்றாம் வாரம் – சனி
ஓசேயா 6: 1-6
லூக்கா 18: 9-14


தாழ்ச்சியால் இகழ்ச்சி அல்ல, மகிழ்ச்சி!

முதல் வாசகம்.

பணிவும் தாழ்ச்சியும் இன்றைய வாசகங்களின் மையச் செய்தியாக உள்ளன. முதல் வாசகத்தில் கடவுளின் அன்பை இறைவக்கினர் ஒசேயாவை  விட  வேறு எவரும் அழகுற விவரிக்க இயலாது என்று துணிந்து கூறலாம். இவர் இஸ்ரயேல் மக்களுக்கும் கடவுளுக்குமிடையிலான உறவை துணிவுடன் கணவன் மனைவி உறவோடு ஒப்பிட்டு இறைவாக்குரைத்தார். 
இன்றைய வாசகப் பகுதியில், இறைவாக்கினர் ஒசேயா  இஸ்ரயேல் மக்கள் கொண்ட  கடவுளுக்கு எதிரான நேர்மையற்ற வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறார். அவர்கள்  “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்” என்று சொன்னார்களேயொழிய  அவர்களது வாழ்வில் மனமாற்றம் ஏற்படவில்லை என்று அறிகிறோம்.
“ஆண்டவர் எப்படியும் நம்மை நலமாக்கிப் புத்துயிர் அளிப்பார். அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்” என்று சொல்லிக்கொண்டு போலியாக, பாவத்திற்காக மனம் வருந்தி, திருந்தாத உள்ளத்தோடு அவர்கள் இருந்தனர்.   எனவே, கடவுள் அவர்களைப் பார்த்து, “உங்கள் அன்பு காலைநேரப் மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனி போலவும் மறைந்துபோகின்றதே!” என்று   வருந்தினார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இருவர் ஆலயத்தில் இறைவேண்டல் செய்யும் உவமையை இயேசு விவரிக்கிறார். ஒருவர் பரிசேயர் மற்றொருவர்  வரி வசூலிப்பவர்.  பரிசேயர் கடவுளைப் போற்றிப் பேசுவதை விட தன்னைப் பற்றியே புகழ்ந்துரைக்கிறார். மாறாக,  பாவியான வரி வசூலிப்பவரோ மனம் நொந்து, தூர நின்று, தன்னைத் தாழ்த்திக் கடவுளின் அன்பான இரக்கத்தை நாடுகிறார். 
இந்த உவமையைக் கூறியதும், ஆண்டவராகிய இயேசு,  “பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று முடிக்கிறார்.

சிந்தனைக்கு, 

முதல் வாசகத்தில், இஸ்ரயேலரில் பலர்   கடவுளின் உதவி தேவைப்படும்போது மட்டுமே கடவுளிடம் திரும்பினதை ஓசேயா சுட்டிக்காட்டினார்.  கடவுளிடமிருந்து ஏதாவது பெறுவதற்காக அவர்கள் தாழ்ச்சியுள்ளவர்கள் போல் காட்டிக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.  பஞ்சோந்தி வாழ்க்கை வாழ்ந்தனர். கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அவர்கள் சமயச்சடங்குகளை நிறவேற்றுபவர்காளாக இருந்தனர். அவர்களின் பணிவு போலியானது என்பதை கடவுள் அறிவார்,
இன்றைய நற்செய்தியில் பரிசேயர்  தனது அனைத்து சாதனைகளையும் பட்டியலிடுகிறார். அவர் தன்னை வரி வசூலிப்பவருடன் ஒப்பிடுகிறார்,  "நான் மற்ற மனிதகுலத்தைப் போல இல்லை” என்ற  இறுமாப்பு உள்ளத்தோடு,   எப்போதும் "நான், நான், நான்" என்று கூறுகிறார். அவர் உண்மையில் ஒரு சுயநலவாதி.  அந்த  பரிசேயரைப் போலவே, நாம் சுயநலவாதிகளாக  பிறர் மெச்ச வாழ நினைத்தாலோ, கடவுள் முன் நின்றாலோ , நமது இறைவேண்டலால் பயனிருக்காது. 

வரிதண்டுபவர்  தன்னை உயர்த்திக் கொள்ளவில்ல்லை.  அவர் தலை குனிந்து மார்பில் அடித்துக்கொண்டது,  கடவுளுக்கு முன்பாக தனது தகுதியின்மை மற்றும் பாவத்தன்மையை அவர் ஏற்றுக்கொண்டதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் ஒரு அடையாளமாக இருந்தது.   அந்த வரி வசூலிப்பவரைப் போலவே, நாம் அனைவரும் பாவிகளே. கடவுளின் இரக்கமும் தயவுமில்லாமல்  நம்மில் யாரும் மீட்கப்பட முடியாது.

தற்பெருமை எப்போதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் தொடங்குகிறது என்பதை நாம் அறிந்திட வேண்டும்.  இது மனத்தாழ்மைக்கான ஒரு செய்முறையாகும். கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்று மன்றாடுவதில்தான் நாம் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்.

தாழ்ச்சியுள்ள மனதை வளர்த்துக்கொள்ள அவமானங்களையும் தாங்க வேண்டியிருக்கும் என்பதை மறுக்க இயலாது. அத்தகைய அவமானத்தை இயேசு கிறிஸ்துவைப் பொருட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் நமது அனைத்து பக்தி முயற்சிகளும், ஏன், வழிபாடும் வீண்தான்.

இறைவேண்டல்.

இரக்கத்தின் ஊற்றாகிய ஆண்டவரே,  என் வாழ்க்கையில் என் பாவச் செயல்களை  ஒப்புக்கொள்வதை மறுத்து,  எனது சாதனைகளைப் பட்டியலிட்டு எனது பெருமைகளை தப்பட்டம் அடிக்கும் தீய குணத்திலிருந்து விடுபட நான் எடக்கும்  முயற்சியை ஆசீர்வதிப்பீராக.  ஆமென்.

 


 ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Rajaratnam A/R… (not verified), Mar 28 2025 - 8:17pm
l appreciate your job sir eventhough your age is getting old but your mind is still fresh to teach us. My heartfull thanks to you.may God bless.
Rajaratnam A/R… (not verified), Mar 28 2025 - 8:17pm
l appreciate your job sir eventhough your age is getting old but your mind is still fresh to teach us. My heartfull thanks to you.may God bless.
Rajaratnam A/R… (not verified), Mar 28 2025 - 8:17pm
l appreciate your job sir eventhough your age is getting old but your mind is still fresh to teach us. My heartfull thanks to you.may God bless.
Rajaratnam A/R… (not verified), Mar 28 2025 - 8:17pm
l appreciate your job sir eventhough your age is getting old but your mind is still fresh to teach us. My heartfull thanks to you.may God bless.