சர்வதேச மகிழ்ச்சி தினம் | March 20

        உலகில் அதிக ஆயுள் வாழ்ந்தவர்களில் ஒருவர் ஆலிஸ் ஹெர்ஸ். இவர் 108 வயது வரை வாழ்ந்தார். அவரிடம் ஒருமுறை கடினமான வாழ்க்கைக்கு இடையே மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி என்ற கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் நல்லதையே தேடுகிறேன். நல்லதையே தேர்வு செய்கிறேன். இங்கு பல கெட்டவைகள் இருந்தாலும், நான் நல்லதையே தேடி ஏற்றுக்கொள்வதால் எனது மகிழ்ச்சி நிலைக்கிறது” என்றார். அவரது அனுபவம், நமக்கும் மகிழ்ச்சியின் வேரை நினைவுபடுத்துகிறது.
        உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20 ஆம் தேதியைச் சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு முதல் இது கொண்டாடப்பட்டது. 
        எது மகிழ்ச்சி என்று கேட்டால் ஒவ்வொரும் ஒவ்வொரு பதிலைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என்கிறது ஐ.நா. சபை. விருதுகள், சாதனைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி தரக்கூடியவைதான். ஆனால் அவை தற்காலிகமானது. ஒருபோதும் முடிவடையாத கடின உழைப்புதான் நிரந்தர மகிழ்ச்சியைத் தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் உங்களால் முடிந்த அளவு கடினமாக உழைத்து, மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.