நீரின்றி அமையாது உலகு

World Water Day - March 22

        1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22 ஆம் நாள் உலக நீர்வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
        நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
        நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை கொடுக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. உலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் 33 சதவீதம்தான் பயனளிக்கிறது. மீதமுள்ள தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
        தண்ணீர் மாசுபாடு காரணமாக உலகளவில் தினமும் 5 வயதிற்குட்பட்ட 800க்கும் அதிகமான குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 3,850,431 லிட்டர் தண்ணீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளவில் 5:1 ஒரு குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். ஆசியாவில் 15.5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான பகுதிகளில் வசிக்கிறார்கள். நாட்டில் 6.85 கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். உலகில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 570 கோடி மக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
        இனியும் தண்ணீரைச் சேமிக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சில ஆய்வாளர்கள் உரைத்தது போன்று, அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக நடந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், 'உயிர்போல் காப்போம்' என்ற உறுதி மொழியை மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.