அழியும் இயற்கை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.03.2025

அழியும் இயற்கை...!

அய்ந்திணையும் நைந்தினை
அரும் இயற்கையெலாம்
இயற்கைக்கும் எதிரான 
உங்கள் அரசியலால்
அழிந்தினை!

ஆற்றையெல்லாம் அழித்தீர்கள்
ஊற்றுக்கண்ணையும் நோண்டி கருமணல் கருவறையின்
உயிர் மணலையும் ஒழித்தீர்கள்!

செடி கொடிகளையும் களவாண்டன 
உங்கள் கட்சிக் கொடிகள்.
கொசுக்களை மட்டுமா?
உங்கள் குணத்தையும் வெறுக்கின்றன 
நொச்சிச் செடிகள்!

பங்களா நாய்கள் உலா வரவும் கடற்கரைகள்;
பரதவர் வலை காயவும்
அவர் நிலை கொள்ளவும் 
மெல்ல மெல்ல உரிமையின்றி
பறிக்கப்படும் நெய்தல் நிலங்கள்!

மலைகளை விழுங்கிடும் ரிசார்ட்டுகள்;
குறிஞ்சியின் மக்கள் 
கால்களை இறுக்கும் சட்டங்கள்.
தேயிலைக் கொழுந்தில் ரத்தங்கள்
அதை தேக்கிச் சுரண்டிட 
லைன் வீடெனும் 
தகரக் குப்பிகள்!

தமிழ்நாட்டுக்குள்ளேயே 
உங்களுக்கொரு 
தனி கொடநாடு
உங்கள் தனியார்மய தாராளமயக் கொள்ளையால்,
தமிழ் நிலமே சுடுகாடு!

துத்திப் பூக்களின் வேர்மண்ணையும்
தட்டிப் பறிக்கும் கார்ப்பரேட்டுகள்.
மக்களுக்கு 
இருபது கிலோ அரிசிகள்;
குக்கல் மூலதனம் 
குழைவாய் செரிக்க
உயிர் விலை நிலங்கள்!
விவசாயி விளைவித்தாலும்
விலை இல்லை;
ஓட்டுக்கு நெற்றிக் காசுகள்!

எங்களை வாழ வைப்பது இருக்கட்டும்!
எத்தனை எத்தனை தேர்தல்கள்?
இயற்கையும் மிஞ்சியதா கூறுங்கள்!

“எண்ணங்களை 
விதி முறையாக 
சட்டப்படி பத்திரத்தில் 
எழுதிக் கொடுங்கள்
ஈடேறாவிட்டால் 
எமது சொத்து அனைத்தும் ஊருக்கே என! 
மக்களிடம் 
புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுங்கள்!

பிறகு நாங்கள் 
சின்னங்களை 
தேர்வு செய்கிறோம்!”

ஆல இலைகளும்
வாழை இலைகளும்
வாழ வழி கேட்டு
நாவை அசைக்கின்றன!

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி