உலக சிட்டுக்குருவிகள் தினம் | March 20


         நவீன கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. தெருக்களில் தேவையான தானியங்கள் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக்குருவிகள்மீது விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சிட்டுக்குருவிகள் தினம் 2010 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
        உருவில் சிறியதாக இருப்பதாலேயே சிட்டுக் குருவி என்ற பெயர் வந்தது. சிட்டு போல பறந்தான் என்னும் சொல்லாடல் இவற்றின் பறக்கும் திறனை கொண்டே உருவாகிறது எனலாம். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்ட இந்த வகைப் பறவை 13 ஆண்டுகள் வரை வாழும் தன்மை பெற்றவை. ர்ழரளந ளுpயசசழற என்றழைக்கப்படும் இவை சிறியதானாலும் தொன்மையான உலகப் பறவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்கள் சிட்டுக் குருவியை மனையுறை குருவி என்று குறிப்பிட்டுள்ளன. மனிதர்கள் வாழும் வீடுகளில் கூடுகட்டி பயமின்றி வாழ்ந்த காரணத்தாலேயே மனையுறை குருவி என்று அழைக்கப்பட்டது. சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவு தானியங்களே. நெல், சோளம், மக்காச் சேளம், பயிறு வகைகள், கோதுமை, புல்லரிசி போன்றவற்றை விரும்பி உண்கின்றன. கிராமப்புறங்களில் வீட்டுவாசலில் கட்டி தொங்கவிடப்படும் நெற்கதிர்களை மனிதர் பயமின்றி உண்கின்றன.
        இன்று அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கருவளர்ச்சி அடையாமல் வீணாகிறது. வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி வீடு முழுவதும் குளிரூட்டப்பட்ட அறைகளை உருவாக்குவதால், அதில் குருவிகள் கூடுகட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைட் ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து பூச்சி இனங்கள் அழிகின்றன. வீட்டு தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. பலசரக்கு கடைகள் மூடப்பட்டு, பல்பொருள் அங்காடிகள் பெருகி வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
        அரிய வகையாக மாறி வரும் சிட்டுக்குருவிகளைக் காக்க, தினமும் வீட்டின் முன்பாகவோ, மாடியிலோ, சிறிதளவு தண்ணீரும், உணவும் வைத்தாலே இவற்றின் வாழ்க்கையில் புத்துயிர் பிறக்கும்.

 

Add new comment

6 + 6 =