உலக காச நோய் தினம் | March 24
காசநோய் ஒரு தொற்றுநோய், உயிர்க்கொல்லி நோய் என்பதை ராபர்டு கோச் என்பவர் 1882 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. இது உலக சுகாதார அமைப்பினால் அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாள்களில் ஒன்றாகும் (ஏனையவை: உலக சுகாதார நாள், உலக குருதிக் கொடையாளர் நாள், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா நாள், உலக புகையிலை எதிர்ப்பு நாள், உலகக் கல்லீரல் அழற்சி நாள், உலக எயிட்ஸ் நாள் ஆகியவை ஆகும்).
இது ஒரு தொற்று நோய். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ். நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும்கூட ஏற்படலாம். காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. அறிகுறிகளைக் கண்டு, அதற்கான சிகிச்சையை உடனுக்குடன் பெற்று பயன்பெறுவோம்.