இதுதானா மகிழ்ச்சியான குடும்பத்திற்கு காரணம்? | Naesam
அது பார்வைக்கு அழகான குக்கிராமம். மிகவும் செழுமையாக செடி, கொடிகள், மரங்கள் நிறைந்த கிராமம். பார்க்கப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கே பூக்கள் நிறைந்த தாமரைக்குளம், குளத்தையடுத்து ஒரு கோயில், கோயிலை அடுத்து ஒரு பள்ளி, விடுமுறை நாள்களில் சிறார்களுக்கு அதிகமான கொண்டாட்டம் இந்தக் குளத்தில் குளிப்பதற்கு, குளித்து முடித்து பெற்றோர்களிடம் அடி வாங்கியதும் உண்டு.
நிழல்கள் நிறைந்த மரங்கள் மிகவும் ரம்மியமான காற்றை வீசிக்கொண்டிருந்தன. அக்காலை நேரத்தில் பெரும்பான்மையான சுற்றுவட்டாரக் குழந்தைகள் பள்ளிக்குக் கூட்டம் கூட்டமாக நடந்தே குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுவார்கள். பிள்ளைகள் வருகை நன்றாகவும், சக ஆசிரியர்களின் கற்பிப்புத் திறன் மிகவும் நன்றாக இருந்தாலும் பல தலைவர்கள் இப்பள்ளியிலிருந்து உருவாகி இருப்பது பாராட்டுக் குரியதே.
இக்கிராமத்தில் முன்மாதிரியான ஒரு குடும்பம் இருந்தது. அதிகாலையில் நடக்கும் திருப்பலிக்குக் குடும்பமாகச் சென்று வருவார்கள். பின்தான் வீட்டு வேலை தொடங்கிச் செய்வார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். இளையவன் படிப்பில் சிறந்து விளங்கினான். ஆதலால் அவன் என்ன படிக்க விரும்புகிறானோ, அதைப் படிக்கட்டும் என்பது பெற்றோர்களின் பச்சைக்கொடி. ஆதலால் இளைய மகன் இறைவனுக்கு அடுத்தப்படியாக பெற்றோரை மதித்து அன்பு செய்தான். பெற்றோரின் நிறை ஆசீர் அவனோடு இருந்தது. பிள்ளைகள் இருவரும் வளர்கிறார்கள். மூத்தவன் படிப்பை விட்டான். வாலிபத்தில் தீய நண்பர்களினால் குடியில் மூழ்கினான். அவன் செயலை ஊர் மக்களே வெறுத்தார்கள் இந்நிலையில் இளையவன் ..ஐ. ஏ.எஸ் படித்து தங்கள் மாவட்டத்திற்கே கலெக்டராக ஆனான். அவன் படித்த கிராமத்துப் பள்ளியில் வரவேற்று பாராட்டு விழா நடத்த ஆவன செய்தபோது பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லா நிகழ்வுகளும் நேர்த்தியாக நடந்தேறின. கலெக்டர் பேச ஆரம்பித்தார். தான் குழந்தையிலிருந்து நடந்த நிகழ்வுகளைச் சொல்லும்போது சில நிகழ்வுகள் சிறார்களின் கைத்தட்டலைப் பெற்றன. "என் வளர்ச்சிக்கு ஆணி வேராக இருந்தவர் இறைவன். அவருக்கு என் முதல் நன்றி. இரண்டாவது என்னை வளர்த்து ஆளாக்கிய என் பெற்றோரை நினைத்து பெருமையடைந்து நன்றி பாராட்டுகின்றேன். அவர்களின் அக்கறை, கடின உழைப்பு இவையே என்னை பொறுப்புடன் படிக்கத் தூண்டின. காலம் சொல்லும் பாடத்தை கருத்தாய் பயன்படுத்துவோருக்கு உயர்வு உண்டு என்று எண்பிக்கிறது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்கிற பழமொழி நம் வாழ்க்கைக்கு மெருகு கொடுக்க வேண்டும். பெற்றோரை மதித்து வாழும் போது நிச்சயம் இறைவனின் இறையாசீர் உண்டு என்று பேசி தன் பெற்றோரைப் பெருமைப்படுத்தினான். "ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்".
பெற்றோர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள் கிராமமே மகிழ்ச்சியடைந்தது.... அந்த மகிழ்ச்சியானக் குடும்பத்தைப் பார்த்து!
சகோ. நேசம்
இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.