வெளிப்படுத்துவார்

அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார். லூக்கா 8-46. பன்னிரண்டு ஆண்டுகளாக பெரும்பாடுள்ள பெண்  எப்படியாவது சுகத்தை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி,மக்கள் கூட்டம் என்றும் பாராமல், முந்தியடித்துக்கொண்டு அவருடைய ஆடையின் ஓரத்தைத் தான் தொட்டாள்.  என்ன ஆச்சரியம்! .யேசுவின் ஆடையிருந்து ஒரு வல்லமை வெளிப்பட்டு அந்த பெண்ணை குணமாக்கியது.

அந்த பெண் உடல் ரொம்ப பலவீனமாகி இருந்திருக்கும்.  உதிரமெல்லாம் போய் பலமற்ற நிலையில் இருந்திருப்பார். மேலும் உதிரப் போக்கு  என்பது அந்த நாட்களில் தீட்டாக எண்ணப்பட்டது. எனவே வீட்டை விட்டு விலக்கி வைத்திருப்பார்கள். ஒரு பெண் பன்னிரண்டு ஆண்டுகள் வீட்டை விட்டு தனிமை படுத்த பட்டிருந்தால் அவருடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்.

ஆனாலும் அந்த தனிமை படுத்துதலை தாண்டி, உடல் பலவீனத்தை பொருட்படுத்தாது, ஆண்டவருடைய ஆடையையாவது தொட்டால் நான் குணமடைவேன் என்று நம்புகிறார் . பெருங்கூட்டத்தை பற்றி நினையாது, முயற்சி செய்து இயேசுவின் ஆடையை தான் தொடுகிறார்.  உடனே நலம் பெறுகிறார். இயேசுவும் அத்தோடு விட வில்லை.  அந்த பெண்ணின் நம்பிக்கையை உலகுக்கு காட்ட விரும்பினார். “யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்; என்னிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்” என்றார்.

இயேசுவை நாம் தொடும்படி நம் விசுவாசம் இருந்தால் இயேசு அதை வெளிப்படுத்துவார். நம்மை உலகுக்கு காட்டி நம்மை பெருமைப் படுத்துவார்.  நம் உடல் நோயில், தனிமை படுத்துதலில், நம் பலவீனத்தில் ஆண்டவரை தேடுவோம். அவரை நாம் தொட்டாலும் அவர் நம்மை தொட்டாலும் ஆசீர்வாதம் நமக்கு தானே.

ஜெபம்: ஆண்டவரே இந்த அதிகாலையில் எங்களையும் எங்கள் குடும்பங்களையும், உற்றார் உறவினர் நண்பர்களையும், இவ்வுலக மக்களையும் உம் சிறகுகள் நிழலில் வைத்து பாதுகாத்துக் கொள்ளும். இந்த உலகுக்கே பெரும் சவாலாக இருக்கும் கொள்ளை நோயிடமிருந்து எங்களை காத்து வழி நடத்தும். எல்லோருக்கும் அன்றாட தேவைகள் கிடைக்கப்பெற்று  அமைதியோடு வாழ அருள் செய்யும் . ஆசீர்வதியும் . ஆமென்