பிள்ளையாக வாழ
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் - 1 கொரிந்தியர் 13-7. அன்பு சகலத்தையும் பொறுத்து கொள்ளும் என்றால், வேறு வழியின்றி பொறுத்து கொள்ளும் என்று அர்த்தம் இல்லை. துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அவற்றை தாங்கி கொள்ளும் என்பதுதான் இதற்கு அர்த்தமாகும்.
ஆம், "அன்பு சகலத்தையும் ஏற்று கொள்ளும்.அழகு , படிப்பு, பதவி, பணம் என எதையும் பார்க்காது. எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தாலும் தொடர்ந்து அன்பு செய்யும்.
பவுலும், சீலாவும் சிறைச்சாலையிலிருந்தபோது, அவர்களுடைய உடைகள் கிழிக்கப்பட்டு, பல அடிகளால் உடம்பெல்லாம் வலி எடுக்க, கால்கள் தொழுமரத்திலே மாட்டப்பட்டிருந்த நிலையிலும், அவர்கள் யேசுவின் மீது வைத்திருந்த அன்பு சிறிதும் மாறவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடும், பாடல்களோடும் இயேசுவை போற்றி புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.
நம் ஆண்டவர் இயேசு பாவிகளான நம் மீது வைத்த அன்பினால் தான், சாட்டை அடிகள், அவமானங்கள், சிலுவை பாடுகள், சிலுவை மரணம் என அனைத்தையும் ஏற்று கொண்டார்.
நமக்கு வரும் துன்பங்கள், வேதனைகளை நடுவிலும் நாம் இயேசுவை அன்பு செய்கிறோம் என்றால் அது தான் உண்மையான அன்பு. அதை நம் வாயால் சொன்னால் போதாது. வாழ்ந்து காட்ட வேண்டும். எந்தப் பாடுகளானாலும், எந்த கடுமையான சோதனைகளானாலும், ஆண்டவரின் அருள் எங்கள் மேல் இருக்கிறது. அவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார் என்ற நம்ப வேண்டும்.
ஜெபம்: ஆண்டவரே நான் உம்மை அன்பு செய்கிறேன். உமது கல்வாரி காட்சியை நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் இன்னும் உம்மை அதிகமாகவே அன்பு செய்கிறது. ஒப்பு உயர்வற்ற உம் அன்புக்கு பதில் அன்பு செய்து என்றும் உம் பிள்ளையாக மட்டுமே வாழ அருள் தாரும். ஆமென்.