எங்கும் இருப்பவரே
ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.
யோபு 23-10.
யோபுக்கு அவர் வாழ்க்கையில் நடப்பது எதுவுமே புரியாமலிருந்தது. ஏன் இந்த துன்பம்? ஏன் இத்தனை இழப்புகள், இப்படியே சென்றால் முடிவு என்ன, என்றெல்லாம் அவர் குழம்பி போயிருந்தார்.
கடைசியில் எல்லாவற்றையும் ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, நான் போகும் வழியை அவர் அறிவார். அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்ளுவார். அவர் எனக்கு தீமை செய்ய மாட்டார். எல்லாம் என்னுடைய நன்மைக்கே. ஆண்டவர் என்னை புடமிடுகிரார் . இறுதியில் நான் பொன்னாக விளங்குவேன் என்கிறார்.
ஆம் நாம் நடந்து செல்லுகிற பாதை ஆபத்தான, மரண இருளின் பாதையாயிருக்கலாம். கண்ணீரின் பள்ளத்தாக்காயிருக்கலாம். நம் வாழ்க்கை எந்த நிலையில் இருந்தாலும் அதை ஆண்டவர் அறிவார். அவர் நம்மோடு இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகுவதில்லை. நம்மை கைவிடுவதில்லை. வாழ்வின் எல்லா நேரங்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார். பூமியின் எல்லைகளுக்கு சென்று தங்கினால் ,அங்கேயும் அவர் கண்கள் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறது. வான மண்டலங்களில் ஏறினாலும் அங்கேயும் அவர் கண்கள் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறது.
ஜெபம் : ஆண்டவரே, ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும். நீர் என்மீது வைத்துள்ள அன்புக்கு நன்றி ஆண்டவரே. ஆமென்.