அடையாளம்

இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம். ஏனெனில் ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்” என்றார். 

விடுதலைப் பயணம்31-17.

ஆண்டவர் படைப்பு வேலைகள் அனைத்தையும் முடித்ததும் ஓய்வு எடுத்தார். நம்மையும்  ஓய்வுநாளைக் கடைபிடிக்க வேண்டும்,  தலைமுறைதோறும் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

ஆண்டவராகிய நானே உங்களைப் புனிதமாக்குகிறவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்படி அது எனக்கும் உங்களுக்கும் இடையில் உங்கள் தலைமுறைதோறும் ஓர் அடையாளமாக இருக்கும் என்று ஆண்டவர் சொல்கிறார். அதை புனிதமான நாளாக கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் 

அது ஆண்டவருக்குப் புனிதமான நாள். அது குடித்து களியாட்டம் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட நாள் அல்ல. ஆண்டவரை தொழவும்,  அவரை மகிமை படுத்தவும் ஆண்டவரால் உருவாக்கப்பட்ட நாள்.  

ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வு நாள் ‘மகிழ்ச்சியின் நாள்’ என்றும் ‘ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்’ எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால்,அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம்வரச் செய்வேன்;  என ஆண்டவர் கூறுகிறார் என  இறைவாக்கினர் ஏசாயா நூலில் கூறப்பட்டுள்ளது.

 

ஆண்டவரே உமக்கு நன்றி.  உம்முடைய ஓய்வு நாட்களை  பரிசுத்தமாக அனுசரிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் மீண்டும் உம் ஆலய முற்றங்களில் கூடி உம் பரிசுத்த நாளை மகிமை படுத்த எங்களுக்கு வரம் தாரும். வேற்றிடங்களில் ஆயிரம் நாட்கள் வாழ்வதை பார்க்கிலும் உம் ஆலய முற்றங்களில் வாழும் ஒரு நாள் மேலானது.  ஆண்டவரே எங்களை பாதுகாத்தருளும். ஆமென்