சூழலைக் காக்க 1000 கிமீ மிதிவண்டியில் பயணித்த AICUFன் இளம் பெண் ஆளுமை: தோழர் பௌஸ்டி வின்சி | Veritas Tamil
பௌஸ்டி வின்சி, முதல் தலைமுறை பட்டதாரியான இவர், முதுகலை கணிதவியல் முடித்துவிட்டு தற்போது தமிழ்நாடு அய்க்கஃப் இயக்கத்தின் மாநில முழுநேரப்பணியாளராக பணியாற்றி வருகிறார். சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்த மிதிவண்டிப் பேரணியில் முழுமையாகப் பங்கேற்ற ஒற்றைப் பெண்தான் இந்த பௌஸ்டி வின்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம்,தென்பெண்ணை ஆற்றங்கறையில் அமைந்துள்ள மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி, சவேரியார் பாளையம் கிராமம் இவரது சொந்த ஊர். சராசரியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் இடையே அமைந்துள்ள மிக சிறிய அமைதியான கிராமம். குடும்பத்தின் கடைக்குட்டியான இவரது அம்மா ஹெலன் மேரி, வீட்டின் ஆணிவேர். இரு அண்ணன்களும் தாயுமானவராக குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்கள். ஒரு தலைமுறைக்கு முன் விவசாய குடும்பமாக அறியப்பட்ட இவர்கள் குடும்பம், அப்பாவின் மறைவுக்கு பின் விவசாய கூலியாக வாழ்வாதாரத்தை கொண்டுள்ளனர்.
அம்மாவிற்கு திருமணமாகி நான்கே ஆண்டுகளில் கணவனை இழந்தாலும் (அப்போது வின்சி பத்து மாதக் கைக்குழந்தை) அம்மாவின் கடின உழைப்பாலும் மன வலிமையாலும் பிள்ளைகளின் மீதான பேரன்பாலும் இன்றுவரை தொடர்ந்து உழைத்து வருகிறார்.
தமிழ்நாடு அய்க்கஃப் ஆலோசகரான அருள்பணி பார்த்தசாரதி சே.ச அவர்கள் "வின்சி தமிழ்நாடு AICUF-ன் முழு நேர பணியாளராக ஆன பிறகு, அவர் சமுதாயம் பற்றிய தெளிவான பார்வையுடன் ஒரு சக்திவாய்ந்த பெண் தலைவராக வளர்ந்து வருகிறார். விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டின் மீது மிகுந்த உத்வேகம் கொண்ட ஒரு துணிச்சலான இளைஞர் அவர். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சுமார் 1000 கி.மீ தூரம் மிதிவண்டியில் பயணம் செய்ததன் மூலம் அவர் தனது ஆற்றலால் எங்களுக்கு ஊக்கமளித்தார். அவர் இந்த உலகத்தை அனைவருக்குமான ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்பும் பெண்களுக்கு 'நம்பிக்கையின்' சின்னமாக இருக்கிறார்" என்று கூறினார்.
வின்சியிடம் கத்தோலிக்க கனெக்ட் நிரூபர் நடத்திய பேட்டி இதோ:
நீங்கள் எவ்வாறு அய்க்கஃப் (AICUF) ல் இணைந்தீர்கள்?
நான் இளங்கலை கணிதவியலை தொன் போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி ஏலகிரியில் படித்தேன். கல்லூரிக் காலத்தில் அய்க்கஃப் இயக்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் அய்க்கஃப் செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அய்க்கஃப் இயக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது எனது ஆருயிர் தோழி வைஷ்ணவி. அவள் கல்லூரி காலத்தில் அய்க்கஃப் இயக்கத்தின் மாநில இலக்கியப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்துள்ளார். கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைகழகத்தில் முதுகலை கணிதவியல் முதலாமாண்டு படிக்கையில் ஒரு நாள் அய்க்கஃப் அமைப்பிலிருந்து, மாநிலம் தழுவிய அளவில் இந்திய அரசியல் சாசனம் குறித்த வீதிநாடக பரப்புரை ஒரு மாத காலம் நடைபெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பை தவற விட விருப்பாத நாங்கள் இருவரும் அந்த பரப்புரை பயணத்தில் எங்களை இணைத்துக்கொண்டோம். அதன் பிறகு அய்க்கஃப் இயக்கத்தின் முழுநேரப்பணியாளராக பணியாற்ற அருள்தந்தை. பார்த்தசாரதி அவர்கள் வாய்ப்பளித்தார்.
சமூகம் அரசியல் மற்றும் வாழ்க்கை குறித்த எந்த புரிதலும் இல்லாத விழிப்புணர்வற்ற ஒரு சாதாரண பெண்ணாக நான் அய்க்கஃப் குடும்பத்தில் இணைந்தேன். தற்போது மூன்றாவது ஆண்டாக அய்க்கஃப் இயக்கத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
சமீபத்தில் நீங்கள் மேற்கொண்ட மிதிவண்டி பேரணி பற்றி அறிய ஆவலாய் உள்ளோம்.
அய்க்கஃப் இயக்கம் மற்றும் தமிழக துறவியர் பேரவை இணைந்து ஒருங்கிணைத்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெற்ற 'இயற்கையை காப்போம் வாழ்வுரிமையை மீட்போம்' எனும் மிதிவண்டி பயணத்தில் நான் இணைந்தது ஒரு பெரிய கதை. இந்த பசுமைப் பயணம் குறித்த திட்டமிடல் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 05 ம் தேதி முதல் 20 வரை இறுதி செய்யப்பட்டது. தங்குமிடம், தொலை தூர பயணம், கடின உடல் உழைப்பு, உடல் நலம், காலநிலை உள்ளிட்ட காரணங்களால் முதலில் மிதிவண்டி பயணக்குழுவில் பெண்களை இணைப்பதில் தயக்கம் இருந்தது. பிறகு இது ஒரு வரலாற்று நிகழ்வு பெண்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். என முடிவு செய்யப்பட்டு இரண்டு பெண்கள் குழுவில் சேர்க்கப்பட்டனர். அதில் நானும் ஒருவள். முதலில் நகர்புறங்களை அடையும்போது குறைவான தூரத்திற்கு மட்டும் மிதிவண்டி மிதிக்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது. உடலை வருத்திக்கொள்ள வேண்டாம் என என்னை கேட்டுக்கொண்டனர். ஆனால் பயணம் தொடங்கியதும், எல்லோரையும் போல நானும் தொடர்ந்து மிதிவண்டியிலேயே பயணிக்க வேண்டும் என்ற எனது ஆசையை எங்கள் குழு மதித்ததால் நான் ஏறத்தாழ 850 கி.மீ பயணித்தேன்.
ஒரு பெண்ணாக இந்த பயணத்தில் உங்களுக்கு ஏற்பட்ட கடினமான சூழல்களை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்?
எங்கள் குழுவில் மொத்தம் பன்னிரண்டு பேர் முழுமையாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை பயணித்தோம். ஆண் தோழர்களுடன் தனி ஒரு பெண்ணாக அவர்களுக்கு இணையாக மிதிவண்டி மிதித்தது இப்போது நினைத்தாலும் பிரம்மிப்பாக உள்ளது. சவால்கள் என்று சொல்லப்போனால், முன்கூட்டிய பயிற்சி இல்லாமல் சென்றதால் முதல் இரண்டு நாட்கள் கால் வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது. மாதவிடாய் நாட்களில் மிதிவண்டி மிதிப்பது கொஞ்சம் சிரமமாகத் தோன்றியது. தண்ணீர் குடித்து வலியை சற்று இயல்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் குழுவினரின் வேகத்தை ஈடு செய்ய சற்று தடுமாற்றமாக இருந்தது. பின்னர் வேகமும் இயல்பாகிப் போனது. ஏற்கனவே இரண்டுமுறை வீதி நாடக பரப்புரை பயணத்தில் பங்கேற்ற அனுபவமும் இப்பயணத்தை சாத்தியமாக்கியது.
இந்த பயணத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
இப்பயணம் என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக “சிறு குழந்தைகள் எதிர்பார்க்கலாம், முதியவர்கள் வழிகாட்டலாம், ஆனால் இளைஞர்களால் மட்டுமே செயல்பட முடியும்" என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டேன். பசுமைப்பயணம் என்பதை நிகழ்வாக மட்டும் இல்லாமல் வாழ்வாகவும் ஆக்கிக்கொண்டோம். பயணங்களின் போது தண்ணீர் பாட்டில் விலைக்கு வாங்கி பிளாஸ்டிக் குப்பையை பெருக்காமல் வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்துச்செல்வது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துவது. திண்பண்டங்களில் வரும் நெகிழி பைகளை கூட கீழே போடாமல் குப்பை தோட்டியில் போடுவது போன்ற பழக்கங்கள் என் வாழ்வில் தொற்றிக்கொண்டன. மேலும் கல்வியறிவு பெற்ற நமக்கு இவ்வுலகை காக்க வேண்டிய பொறுப்பு சற்று கூடுதலாக இருப்பதை உணர்ந்தேன். நேர மேலான்மையின் முக்கியத்துவம், குழு ஆற்றல் மற்றும் விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற நம்பிக்கை போன்றவற்றை நெடுஞ்சாலைகளும் மேம்பாலங்களும் உச்சி வெயிலும் எதிர் காற்றும் நன்றாகவே புரிய வைத்தன. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை அகலப்படுத்தப்படாத கிராம சாலைகளில் புளிய மரங்களின் நிழலில் குறுகிய தூரம் பயணித்தபோது உணர்ந்தேன்.;ஏங்கினேன். இவ்வாறு பல வாழ்க்கைப் பாடங்களை அய்க்கஃப் இயக்கத்திலும் பசுமைப்பயணத்திலும் கற்றுக் கொண்டேன்.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களின் செயல்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?
நான் கிளம்பி வந்த போது வழக்கமான அய்க்கஃப் முகாம் போல தான் அவர்கள் நினைத்திருந்தார்கள். மிதிவண்டி பயணம் என்பது மட்டும் தெரியும். நான் முழுமையான தூரம் மிதிவண்டி மிதிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியாது.
அது களத்தில் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தால் எடுக்கப்பட்ட முடிவு. நான் மிதிவண்டி ஓட்டிய காணொளி மற்றும் துணை முதல்வரிடம் விருது வாங்கிய புகைப்படம் உள்ளிட்டவற்றை பகிர்ந்த போது அம்மா மற்றும் அண்ணன்கள் மிகுந்த மகிழ்சியடைந்தனர். எங்கள் உறவினர் வட்டம் மற்றும் எங்கள் ஊரில் இதுபோன்ற நிகழ்வுகளில் பெண்கள் பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே அனைவரும் ஆச்சரியமாகவும் மகிழ்வுடனும் பார்த்தனர். கல்லூரி முடித்தவுடன் திருமணம் செய்துவைக்கும் எங்கள் ஊரில் பலருக்கு கனவாக உள்ள இதுபோன்ற பயணங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் நான் பெற்று வந்த போது பல நல்ல உள்ளங்கள் அவர்கள் சாதித்தது போல எண்ணி ஆராத்தி எடுத்து வரவேற்று பாராட்டி மகிழ்ந்தனர்.
அய்க்கஃப் இயக்கம் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்?
என் வாழ்க்கையை அய்க்கஃப் -க்கு முன் அய்க்கஃப் -க்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். அய்க்கஃப் இயக்கத்தில் சேர்வதற்கு முன் நான் பெரும்பாலும் பிறரிடம் பேச தயங்குகிற, குடும்பம், சமூகம், உலகம் குறித்த எந்தவித கருத்தும் இல்லாத ஒரு சாதாரண பெண். அய்க்கஃப் என்னை எனக்கு அடையாளம் காட்டியது.
வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைத்தது. அய்க்கஃப் முழுநேரப் பணியாளரான பிறகு தமிழகம் முழுவதும் பல நண்பர்கள் மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எனக்கு தோழர்கள். அய்க்கஃப் எனது உலகை விரிவுபடுத்தியது. பல மாணவ மாணவியர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் செயல்படும் வாய்ப்பை வழங்கியது. எனது முதல் சர்வதேச பயணம் மற்றும் விமான பயணம் ஆகியவற்றை அய்க்கஃப் வழங்கி அழகு பார்த்தது. அய்க்கஃப் என் வாழ்வில் இல்லை என்றால் சினிமாவோ நாடகமோ பார்த்து அதனுள் வாழ்க்கையை நகர்த்தும் விட்டில் பூச்சியாக, பெண்களுக்காக இந்த சமூகம் வகுத்து வைத்த வறையறைக்குள் என் வாழ்க்கை சுழன்று கொண்டு இருந்திருக்கும்.
உடல் மற்றும் சமூகத்தின் பார்வை குறித்து பயந்து அல்லது காரணங்கள் கூறி தனக்கான வாய்ப்புகளை பயன்படுத்த தயங்கும் பெண்களுக்கு உங்களின் செய்தி என்ன?
பெண்கள் தற்போது தான் முதல் முறையாக ஒவ்வொரு துறைகளில் தடம் பதித்து வருகிறார்கள். இது ஆண்களின் வேலை இது பெண்களின் வேலை என சமூகம் ஆண்டாண்டு காலமாக வறையறுத்துள்ள விடயங்களை புதிதாக செய்யும்போது சில தடுமாற்றங்கள் ஏற்படலாம். இருவருக்கும் தனித்துவம் உண்டு. ஆனால் யாரையும் சாராமல் இருக்க வேண்டும் என்றால் சில அடிப்படை திறன்களை பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
பெண்களின் உடல்நிலை குறித்த கருத்தில் பெண்கள் மீது எனக்கு வருத்தம் உண்டு. ஆண்களுக்கு நிகரான ஊட்டச்சத்து மிகுந்த உணவு பெண்களுக்கு கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பெண்கள் அதை தவிர்த்துவிடுகிறார்கள். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்கு தான் ஊட்டச்சத்து தேவை அதிகமாக உள்ளது. உடலை நாம் கவனித்து கொண்டால் தானே நாம் செய்யும் பணிகளுக்கு உடல் நமக்கு ஒத்துழைக்கும். இதுபோன்ற பொது நிகழ்வுகளில் பெண்கள் பங்கெடுத்து தங்கள் அனுபவங்களை பெருக்கிக்கொள்ள வேண்டும். சமூகப்பார்வை காலம் தோரும் மாறக்கூடியது, நூறு வருடத்துக்கு முன் கணவனை இழந்த பெண்களை உடன் கட்டை ஏற்றினர், மூளையில் உட்கார வைத்தனர். ஆனால் இப்போது செய்ய முடியுமா? சமூகம் காலத்திற்கு ஏற்றவாறு தன் கருத்தை மாற்றிக்கொள்ளும். நம் மனசான்றுக்கு ஏற்றவாறு யாருக்கும் துன்பம் தராமல் பயணித்தாலே போதும் சமூகத்தின் பார்வை குறித்தெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தினரின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுதல் அவசியம். நாம் முயற்சியை துவங்கினால் உடன் பயணிக்கும் தோழர்களின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும். நம்மை முதலில் நாம் நம்ப வேண்டும்.
தங்களது எதிர்கால திட்டங்கள் யாவை?
தற்போது இளங்களை கல்வியியல் இரண்டாம் ஆண்டு பகுதிநேரமாக படித்து வருகிறேன். என்னுடைய குறிக்கோள் கணிதவியல் பேராசிரியராக வேண்டும். கணிதவியலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது தான். அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். இதை அடைந்தால் எங்கள் குடும்பத்தின் முதல் முனைவராக இருப்பேன். நான் எங்கு இருந்தாலும் அய்க்கஃப் விழுமியங்களை கொண்டிருப்பேன். என்னால் முடிந்த சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வேன். பாதிக்கப்பட்ட குரலற்ற பெண்களுக்கான நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணமாக உள்ளது. தொலை தூர திட்டமாக நஞ்சற்ற இயற்கை வழி வேளாண்மை செய்ய வேண்டும் உரம் பூச்சிக்கொல்லி இல்லாத உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. விரைவில் நனவாக்கி காட்டுவோம்.
யாருக்கேனும் நன்றி கூற வேண்டுமா?என்னுடைய வாழ்வின் எல்லாமுமான எனது அம்மா ஹெலன் மேரி அவர்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. மூன்று பிள்ளைகளை தனி ஒரு பெண்ணாக உருவாக்கி இன்று வரை ஓயாமல் உழைக்கும் அவரது அளவற்ற பாசமும் எங்கள் மீதான நம்பிக்கையும் ஈடு செய்ய இயலாதது. அடுத்து எனது அண்ணன்கள் டோனி மற்றும் டேவிட்க்கு எனது நன்றிகள். 'பெண் பிள்ளை இதெல்லாம் செய்யலாமா என கேட்கும் போது அவளுக்கு எது விருப்பமோ சந்தோசமோ அதை செய்வதில் என்ன சிக்கல்' என எனக்கு பக்க பலமாக இருப்பார்கள். அடுத்து எனது தோழி வைஷ்ணவி அய்க்கஃப்பை எனக்கு அறிமுகப்படுத்தி உலகின் கதவினை திறந்து வைத்தவள். அடுத்தபடியாக அருள்தந்தை. பார்த்த சாரதி சே.ச. தோழனாக ஆசானாக தந்தையாக அண்ணனாக நின்று எங்களை வழிநடத்திச்செல்பவர். எங்களை முன்னேற்றி அழகு பார்ப்பவர். அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும் எனக்கு பக்க பலமாக உடன் பயணித்த தோழர்கள் அர்னால்டு, பிரவின், ஸ்டெபி, ஷெல்டன், ரஞ்சித் உள்ளிட்ட உடன் பயணித்த அனைத்து தோழர்களுக்கும், அனைத்திற்கும் மேலாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இறைவனுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.