ஆசியாவில் சவால்கள் இருந்தாலும் உரையாடலுக்கான திருஅவையின் அர்ப்பணிப்பு தொடர வேண்டும்: கர்தினால் ஃபிலிப் நேரி பெர்ராவ் | FABC |Veritas Tamil

ஆசியாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் பகுதிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், அவை திருஅவையின் உரையாடல் மற்றும் நல்லிணக்கப் பணியை பலவீனப்படுத்தாமல், மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கிழக்கு ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவர் கர்தினால் பிலிப் நேரி ஃபெர்ராவ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 20, திங்களன்று, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தொடங்கிய FABC-யின் 12-வது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்க செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திருஅவை தனது வரலாறு முழுவதும் சவால்களுக்கு மத்தியிலேயே தனது மறைப்பணியை நிறைவேற்றி வந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

"ஆசியாவின் பல பகுதிகளில் திருஅவை இன்னும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிறது. இருப்பினும் அச்சத்திலோ தனிமைப்படுத்தலிலோ அல்ல, உறவுகளை உருவாக்கி, உரையாடலை ஊக்குவித்து, நல்லிணக்கத்தை வளர்ப்பதிலேயே திருஅவை தொடர்ந்து ஈடுபட வேண்டும்" என்று கோவா மற்றும் டாமன் பேராயரும் FABC தலைவருமான கர்தினால் பெர்ராவ் அவர்கள் தெரிவித்தார்.

மத, கலாச்சார, மொழி மற்றும் இனப் பன்முகத்தன்மை நிறைந்த ஆசியாவில், பிற மதத்தினருடனும், பிற கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடனும், திருஅவையை சந்தேகத்துடன் நோக்குபவர்களுடனும் கூட புரிந்துணர்வின் பாலங்களை அமைப்பது திருஅவையின் சிறப்பான அழைப்பாகும் என்றும் அவர் கூறினார்.

"வெளியே சென்று மக்களைச் சந்திக்கும் திருஅவையாக இருப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துகிறோம். நமது நம்பிக்கையைப் பகிராதவர்களுடனும், நம்மை சந்தேகத்துடன் நோக்குபவர்களுடனும் கூட புரிந்துணர்வின் பாலங்களை உருவாக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

"ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான திருப்பணியும்" என்ற கருப்பொருளில் ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறும் இந்தப் பேரவையில், FABC-யின் 22 உறுப்பினர் ஆயர் பேரவைகள் மற்றும் திருஅவை ஆட்சிப்பகுதிகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கர்தினால்மார்கள் மற்றும் ஆயர்கள் பங்கேற்றுள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில், ஆசியாவில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்களின் மேய்ப்புப்பணி சார்ந்த சவால்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த கர்தினால் பெர்ராவ் அவர்கள், இச்சூழல்கள் திருஅவையை மனமுடைக்கக் கூடாது என்றும், மாறாக உரையாடல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் வழியாக நற்செய்திக்குச் சான்று பகரும் அதன் அழைப்பை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இந்தப் பேரவையின் நாட்களில் பங்கேற்பாளர்கள் செபம், "ஆவியில் உரையாடல்" (Conversations in the Spirit), மாநிலக் கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டுத் திருவுளப் பகுத்தறிதல் ஆகியவற்றின் வழியாக, ஒன்றிணைந்த திருஅவை வாழ்வையும் ஆசியாவில் திருஅவையின் மறைப்பணியையும் வலுப்படுத்தும் நடைமுறை வழிகளை ஆராயவுள்ளனர்.

இறுதியாக, ஆசியாவில் திருஅவையின் நம்பகத்தன்மை என்பது கடினமான சூழல்களிலிருந்து விலகிச் செல்வதில் அல்ல; மாறாக, மக்களிடையே தொடர்ந்து இருப்பதிலும், புரிந்துணர்வை வளர்ப்பதிலும், பல்வகைமையும் பிளவுகளும் நிறைந்த சமூகங்களில் நம்பிக்கையின் பாலமாக விளங்குவதிலுமே உள்ளது என்று கர்தினால் பெர்ராவ் அவர்கள் வலியுறுத்தினார்.

Tamil Survey Popup Image