திருப்பங்களும் சாத்தியங்களும்! | Judit Lucas | VeriatsTamil
உலகமே கணினிமயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் குழந்தைகளும், ஏன் பெரியவர்களும் கூட அதிக நேரம் செலவிடுவது கணினி, மடிக்கணினி, தொலைபேசி போன்ற பொருட்களுடனே. 1974 ஆம் ஆண்டு எர்னோ ரூபிக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட ரூபிக்ஸ் கியூப், மின்னணு சாதனங்களில் அதிக நேரத்தை செலவிடுவோருக்கான ஒரு மாற்று வழி என்றே கூறலாம். ரூபிக்ஸ் க்யூப் என்பது ஒரு விளையாட்டுப் பொருளைப் போன்றது. ஒரு கியூபில் 6 பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கமும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒவ்வொரு நிறம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த விளையாட்டின் அடிப்படை யாதெனில், ஒவ்வொரு நிறத்தையும் ஒரே பக்கம் சேர்க்க வேண்டும்.
இப்படி இருக்க, அந்த ரூபிக்ஸ் கியூப் பல திருப்பங்களை எதிர்கொள்ளும். அதேபோல்தான் நமது குடும்பங்களிலும் பல நிறப்பட்ட மனிதர்களை நாம் நம் வாழ்வில் சந்திக்க நேரிடும். பல நிகழ்வுகள் நடக்கக்கூடும். அதன் காரணமாக பல திருப்பங்களை நாம் சந்திக்க நேரிடும். ஆனால், நாம் வாழும் குடும்ப வாழ்வின் இலக்கு, குடும்பத்தில் நிலவும் ஒற்றுமையே (ஒழுங்கு). இந்த ரூபிக்ஸ் கியூபில் இருந்து குடும்ப வாழ்விற்கான சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
1. ஒழுங்கை உருவாக்குவதை விட குழப்பத்தை உருவாக்குவது எளிது
புதிதாக வாங்கப்படும் ரூபிக்ஸ் கியூபில் அனைத்து நிறங்களும் ஒன்று சேர்க்கப்பட்டே இருக்கும். அதை அவ்வாறே வைத்தால் அழகாகத்தான் இருக்கும். ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லை. அதனை எடுத்துத் திருப்பத் திருப்பத் தான் சுவாரஸ்யம் உண்டாகும். இது ஒரு பக்கம் இருக்க, அந்த கியூபில் உள்ள நிறங்களை எவ்வாறு பழைய நிலைக்கு கொண்டுவருவது என்ற குழப்பம் ஏற்படும். அதேபோல நம் குடும்பங்களிலும் ஆரம்ப நிலை மிக அழகானதாகவும் ஒழுங்கு முறையுடனும் இருக்கும். சில நாட்களுக்குப் பிறகு குழப்பம் என்பது சுலபமாக உட்புகுந்துவிடும். அதன்பிறகு பல திருப்பங்கள் நேரிடும். எனினும் அந்தத் திருப்பங்களுக்கான முடிவு, குடும்பத்தில் ஒற்றுமை (ஒழுங்கு) என்பதே ஆகும்.
2. எல்லா குழப்பங்களையும் ஒரே நேரத்தில் தீர்க்க முடியாது
ஒரு ரூபிக்ஸ் கியூபில் உள்ள அனைத்து பக்கங்களையும் ஒரே நேரத்தில் திருப்ப முடியாது. ஒவ்வொருநிலையில் தான் வண்ணங்கள் மாற மாற ஒழுங்கான நிலை உருவாகும். அதேபோல குடும்பங்களில் எழும் குழப்பங்கள் ஒரே நேரத்தில் தீர வேண்டும் என்று நினைத்தால் அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.
எப்படிப்பட்ட குழப்பத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. எவ்வகையான திருப்பங்களை எதிர்கொண்டால் அந்தத் குழப்பம் தீரும் என்ற திசையை நோக்கிக் குடும்ப வாழ்வில் முன்னோக்கிச் செல்வோம். ரூபிக்ஸ் கியூபில் கண்டிடாத தீர்வுகளும் குடும்பங்களில் சாத்தியமாகும்!