அரவணைக்கும் கரங்களால் அகிலம் வெல்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

17 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 11ஆம் வாரம் - திங்கள்
1 அரசர் 21: 1-16
மத்தேயு  5: 38-42

 
அரவணைக்கும் கரங்களால் அகிலம் வெல்வோம்!


முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், அரசர்  ஆகாப் என்பவர் ஒரு சமாரியன். திராட்சைத் தோட்டத்திற்கு சொந்தக்காரனான நாபோத்து ஒரு இஸ்ரயேலன். 
இந்நிலையில் அரசன் ஆகாபு தன் அரண்மனை அருகில் இருந்த நாபோத்துவின் திராட்சை தோட்டத்தை   அபகரிக்க எண்ணினான். அதை விலைக்கு வாங்கிக்கொள்ள விலை பேசினான். நாபோத்துவோ அது தன் மூதாதையர் சொத்து என்று விற்க மறுக்கவே, அதை சூழ்ச்சியால் பெற்றுதர ஆகாபுவின் பொல்லாத மனைவி யேசபேல் முற்படுகிறாள்.

அவள் தனக்கு வேண்டியவர்களை ஏற்பாடு செய்து, சூழ்ச்சியால் நாபோத்துமீது பொய்க் குற்றம் சாற்றி, அவனைக் கொன்றாள்.  இறுதியில் நிலம் அரசனுக்குச் சொந்தமானது. இவ்வாறு, யேசபேலின் அக்கிரமத்தால் நிலத்தை மட்டுமல்ல, அவனுடைய உயிரையும் நாபோத்து இழந்தான்.  


நற்செய்தி.


இயேசுவின் மலைப்பொழிவு இன்றும் தொடர்கிறது. இயேசு தம் சீடர்களிடம்  "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தீயவனை எதிர்க்காதே. யாராவது உங்கள் வலது கன்னத்தில் அடித்தால், மற்றொரு கன்னத்தையும் அவருக்குத் திருப்புங்கள். உங்கள் சட்டைக்காக யாராவது வழக்குத் தொடர்ந்தால், உங்கள் மேலங்கியையும் அவருக்குக் கொடுங்கள் என்று போதிக்கலானார்.

யாராவது உங்களை ஒரு மைல் தூரம் செல்ல வற்புறுத்தினால், அவருடன் இரண்டு மைல்கள் செல்லுங்கள். கேட்கும் எவருக்கும் கொடுங்கள், உங்களிடம் கடன் வாங்க விரும்புபவர்களை விட்டு விலகாதீர்கள்” என்று அகிம்சை வழிமுறையைக் கற்றுக்கொடுக்கிறார். 


சிந்தனைக்கு.


நற்செய்தி வாசகத்தை மேலோட்டமாக வாசித்தால்,  இயேசு தம் சீடர்களை    செயலற்றவர்களாகவும் கோழைகளாகவும்  இருக்கச் சொல்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

முதல் வாசகத்தில் .ஆகாபு மன்னனின்  மனைவி ஈசபேல்  ஓர் அப்பாவி நாபோத்துக்கு எதிராகப் பொய்ச்சான்றுகளை ஏற்பாடு செய்து,  அவனைக் கொன்றாள்.  நாபோத் செயலற்றவராகவே இருந்தான், இறந்தான். ஆகாபு – நாபோத்து தொடர்பான இந்த நிகழ்வு இன்றைக்கும் கூட நடந்து கொண்டுதான் இருக்கின்றது.   பொருளாசையால் மதிகொட்டுப்போனோர்  எண்ணிலடங்கா. ‘பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கு ஆணிவேர் (1திமொ 6:10) என்பார் புனித பவுல்.  

 ‘தீமை செய்வரை எதிர்க்க வேண்டாம், மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்கிறார் ஆண்டவர்.  ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துகொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்...” என்கிறார். இது ஒரு சமூகப் புரட்சி. 

கெடுவான் கேடு நினைப்பான் என்பதுபோல, அடுத்தவருக்கு எதிராகக் கெடுதல் நினைக்கும்போது, அந்த கேடு நம்மையே வந்து சேரும். ஒருவர்  நம்மை அடிக்கும்போது, பதிலுக்கு நாமும் கையை ஓங்கினால்  அது வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்பதை மறுப்பாரில்லை.  

இயேசுவின் அறிவுரையில் மற்றொரு சிறந்த பாடமும் நமக்குத் தரப்படுகிறது. ஒருவர் நம்மை கோபத்தில் அறைய முன்படும்போது உடனே  அடுத்த அறை வலக்கன்னத்தில் பதியுமாறு வலக்கன்னத்தைக் காட்டினால்,  அது எப்படிப்பட்ட கோபக்காரரையும் சிந்திக்கத்தூண்டும். அங்கே கோபம் தணிய வாய்ப்பு ஏற்படக்கூடும். மகாத்தமா காந்தி இந்த உண்மையை மலைப்பொழிவிலிருந்து கற்றுக்கொண்டார். நாமும் கற்றுத்தேற வேண்டும்.

சூழ்ச்சியால் ஒருவரை வீழ்த்த நினைப்பது வீரச்செயல் அல்ல. ஒரு முரடரை  அன்பால்   ஆட்கொண்டு மனமாற வைப்பதே  வீரச் செயல். நிறைவாக, பகைவர்களை நிபந்தனையின்றி மன்னிக்கவும், அவர்களை அன்பு செய்யவும் கற்றுக்கொள்வோமானால் நாமே சிறந்த சீடராவோம். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது நமக்கான பழமொழியாகாது. 

ஒருமுறை புனித அன்னை திரேசா தன் இல்லத்திற்காக உதவி கேட்டு ஒருவரிடம் கையேந்தும்போது, அவர் ‘இதோ எனது காணிக்கை’ என்று கூறி முகத்தில் காறி துப்பினாராம். அதை துடைத்துக்கொண்டே அன்னை திரேசா, இது எனக்கானது.  எனது இல்லத்திற்கு   ஏதாவது உதவி செய்யுங்கள் என்றபோது, முகத்தில் உமிழ்ந்தவர் முகம் வாடி, மன்னிப்பக்கேட்டு பின்னர் தாராளமாக நன்கொடைளித்தாராம். இன்றை நற்செய்திக்கு உயிர் கொடுத்தவர் புனித அன்னை திரேசா. 


இறைவேண்டல்.


இரக்கத்தின் ஆண்டவரே, இயேசுவே, நீர் தந்த அறிவுரைக்கேற்ப நான்,  தீமை செய்வோரை எதிர்த்து நில்லாமல், அன்பால் அரவணைக்கும் அருளைத் தருவீராக. ஆமென்.
 


 
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tags