எனது தேர்வு போலியா? உண்மையா? | ஆர்.கே. சாமி | VeritasTamil

5 பிப்ரவரி 2024, திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்
இ.சட்டம் 30: 15-20
லூக்கா 9: 22-25
எனது தேர்வு போலியா? உண்மையா?
முதல் வாசகம்
நம் கடவுள் நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் விண்ணரசில் சேர்ப்பவர் அல்ல. அங்கே போகவிரும்புவதும் விரும்பாததும் நமது தேர்வுக்கு உட்பட்டது. முதல் வாசகத்தில், இஸ்ரயேலருககு முன்பாக கடவுள் இரு தெரிவுகளை வைக்கிறார். முதலாவது, கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரது மக்களாக வாழ்வது. மற்றொன்று அவரது கட்டளைகளைப் புறக்கணித்து விருப்பத்துக்கு வாழ்வது.
கடவுள் வாக்களித்த நாட்டை சென்றடைய மோசே இஸ்ரயேலரை பாலைநிலத்தில் வழிநடத்தி வருகிறார். வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டை அடையும் காலமும் நெருங்கிவிட்டது. ஆனால், அந்நாட்டுக்குள் அவர் காலடி வைக்கமாட்டார் என்பது அவருக்குத் தெரியும். இந்நிலையில், அவர் இஸ்ரயேலர் முன் ஒரு தேர்வை வைக்கிறார். ‘இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன்’ என்கிறார்.
1.முதலாவது தேர்வு வாழ்வுக்குரியவை: :
1.கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும்.
2.அவரைப் பின்பற்றி அவரது வழியில் நடக்க வேண்டும்.
3.அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
2.இரண்டாவது தேர்வு அழிவுக்குரியவை:
கடவுளை விட்டு விலகிச் செல்வதோ, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிதலோ கூடாது. அப்படி செய்தால் நிச்சயம் அழிந்து போவார்கள். வாக்களிக்கப்பட்ட கானானில் அவர்களது வாழ்நாள் நீடித்திருக்காது.
ஆகவே, கடவுள் மோசே வழி, இஸ்ரயேல் மக்களை, அவரையே பற்றிக்கொள்ளவும், அவரையே என்றும் சார்ந்து வாழவும் அழைக்கிறார். கடவுள் அவர்களை வற்புறுத்தவில்லை. முழு சுதந்திரம் கொடுத்தார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு அவர் எதிர்ப்பார்க்கும் உண்மை சீடத்துவத்தின் பொருளை எடுத்துரைக்கிறார். அவர் எதிர்கொள்ளவிருக்கும் துன்பத்திலும் பாடுகளிலும் பங்குகொள்ள தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவருடன் இணைந்து, அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்க விரும்புபவர்கள்அவருடன் ‘சிலுவையைச்' சுமக்கவும் துன்புறவும், இறக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று நினைவூட்டுகிறார். சிலுவையாக உலக வாழ்வா? என இரு தேர்வுகளை தம் திருத்தூதர்களுக்கு முன் வைக்கிறார்.
சிந்தனைக்கு.
இவ்வுலகம் கடவுளின் படைப்பு என்றபோதிலும், இங்கே அவரது ஆட்சி முழுமையாக இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. பெரும்பாலான மக்கள் அலகையின் பக்கம் இருக்கிறார்கள். அலகையின் வழிகாட்டுதலிலும் கட்டுப்பாட்டிலும் முடங்கிக்கிடக்கிறார்கள்.
இந்நிலையில், இத்தவக்காலத்தில் மோசேவுடன் பேசிய அதே கடவுள் இன்று, நமக்கு முன்பாகவும் இரு தேர்வுகளை வைக்கிறார். உண்மை வழிபாடா? போலி வழிபாடா? நமது பதில் என்ன? வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால் நிச்சயம் அழிந்து போவோம். நமக்கு வாக்களிக்கப்பட்ட நாடு என்பது நமது நிலைவாழ்வுக்குரிய புதிய எருசலேமாகிய விண்ணகம்.
இங்கே, நமது வழிபாட்டில் ‘போலி’ தன்மை இருந்தால், அது அலகைக்குரியது. ஏனெனில் நமது வழிபாடு ஆரவாரத்துக்குரியது அல்ல. பொற்கன்று வழிபாட்டை மோசே சாடினார். கடவுள் வெறுத்தார். எதை தேர்வுச் செய்ய வேண்டும். சிலுவையில் பலியாகி, உயிர்த்தெழுந்து, உலக முடிவுவரை நம்மோடு, நற்கருணையில் உடனிருக்கும் ஆண்டவரையா? அல்லது குருத்துவம் அற்ற ஆரவாரம் கொண்ட வேற்று வழிபாட்டையா? எது விண்ணக வாழ்வைப் பெற்றுத்தரும்?
இத்தவக்காலத்தில், நமது நம்பிக்கை அறிக்கையை (விசுவாசப் பிரமாணத்தை) ஆழந்து சிந்திக்கவும் அழைக்கப்படுகிறோம். கடவுள் அன்று மோசே வழியாக கட்டளைகளைத் தந்ததுபோல், நமக்கு இன்று இந்த நம்பிக்கை அறிக்கையைத் தந்துள்ளார். இதை அறிக்கையிடுவதில் மட்டுமல்ல அல்ல, அவற்றில் நம்பிக்கை வைத்து வாழ்வதில் வேரூன்றி இருக்க வேண்டும்.
நமது பிள்ளைகள், இந்த நம்பிக்கையில் ஆழந்திருக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக கோவிட்-19 தொற்றுக்குபிறகு நமது பிள்ளைகள் தொடர்ந்து திருப்பலியில் பங்கேற்பதை பெற்றொர்தான் உறுதி செய்ய வேண்டும். இது நம்மேல் சுமத்தப்பட்டிருக்கும் சிலுவை. ஆண்டவர் இன்று சிலுவையைச் சுமக்க அழைக்கிறார்.
பெற்றோர் நாம் கண்டிப்பாகவும் கவனமாகவும் இல்லையென்றால், தீயோனின் கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்குப் பிள்ளைகள் பலியாக நேரிடும். கண் கெட்டபின் சூரிய வணக்கத்தால் பயனேதும் கிட்டாது. அலகை இங்கும் அங்குமாக அலைமோதிக்கொண்டிருக்கிறான்.
இறைவேண்டல்.
நற்பேறு பெற்றவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர் என்று அறிவுறுத்திய ஆண்டவரே, நான் என்றும் உமது படிப்பினைக்குக் கீழ்ப்படிந்து, நற்கருணையில் உம்மை ஆராதித்து வாழவும், எனது குடும்பத்தை ஒரு குட்டி திருஅவையாகக் காக்கவும் அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program

- Reply
Permalink