25 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பின் புனித கார்லோ அகுடிஸ் ஆலயத்திற்கு நிலம்! | Veritas Tamil
பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் மறைமாவட்டம், 2026 அக்டோபர் 2ஆம் தேதி, புனித கார்லோ அகுடிஸ் கத்தோலிக்க ஆலயம் கட்டுவதற்காக 1,375 சதுர யார்டு நிலத்தை மந்திரித்து அர்ப்பணித்துள்ளது. சட்டவிரோத ஆக்கிரமிப்பால் இழந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காக அப்பகுதி கத்தோலிக்க மக்கள் 25 ஆண்டுகளாக மேற்கொண்ட போராட்டத்திற்கு இது ஒரு முக்கியமான வெற்றியாக அமைந்துள்ளது.
2025ஆம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்ட இத்தாலிய இளைஞரான புனித கார்லோ அகுடிஸ் அவர்களின் பெயரால் இந்த ஆலயம் அமையவுள்ளது. இவர் முதல் மில்லினியத் தலைமுறை புனிதர் என்று பரவலாக அறியப்படுகிறார்.
இந்த நிலம், காரித்தாஸ் பாகிஸ்தான் ஹைதராபாத் அமைப்பின் நிதியுதவியுடன் வாங்கப்பட்டது. இதற்காகப் பெறப்பட்ட கடன் தொகையும் பின்னர் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது.
தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான ஹைதராபாத்தில் அமைந்துள்ள சலாம்தி கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கம், கிறிஸ்தவக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடியிருப்பு, நில உரிமை மற்றும் நீண்டகாலச் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த நிலம் ஹைதராபாத்திலுள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் பங்கின் துணை நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகரித்து வரும் கிறிஸ்தவ மக்களின் ஆன்மிக மற்றும் மேய்ப்புப்பணித் தேவைகளை நிறைவேற்றும் வகையில், இங்கு தனிப் பங்கினை நிறுவ மறைமாவட்டம் திட்டமிட்டுள்ளது.

நிலத்தை மந்திரித்து அர்ப்பணிக்கும் விழா, ஹைதராபாத் ஆயர் சாம்சன் சுகர்தீன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்புடன் தொடங்கியது. வானவேடிக்கைகள், மலர் மாலைகள் மற்றும் பாரம்பரிய சிந்தி அஜ்ரக் துணி, தொப்பி ஆகியவற்றை வழங்கி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதி, நம்பிக்கை மற்றும் விடுதலையின் அடையாளங்களாக வெள்ளைப் புறாக்களும் பறக்கவிடப்பட்டன.
திருவழிபாட்டு முறையின்போது, ஆயர் சுகர்தீன் நிலத்தைச் சுற்றி வந்து புனித நீரைத் தெளித்து, எதிர்காலத்தில் இறைவனை வழிபடும் இடமாக அமையவுள்ள அந்த நிலத்தை மந்திரித்தார். மறைமாவட்டக் குருக்கள், அருள்சகோதரிகள் மற்றும் உள்ளூர் பங்குமக்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மேலும், எதிர்காலத்தில் எழுப்பப்படவுள்ள புனித கார்லோ அகுடிஸ் கத்தோலிக்க ஆலயத்தின் நினைவுப் பலகையையும் ஆயர் திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஆயர் சுகர்தீன், இளம் புனிதர் கார்லோ அகுடிஸ் அவர்களின் ஆன்மிக வாழ்வை எடுத்துரைத்தார். அவர் கத்தோலிக்க இளைஞர்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்களது அன்றாட வாழ்வில் நம்பிக்கை, புதுமை மற்றும் பிறருக்கான சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாழ வேண்டும் என்றும் அவர் ஊக்கமளித்தார்.
மேலும், நிலத்தை மீட்பதற்காக 25 ஆண்டுகளாகப் பொறுமையுடன் போராடிய சமூகத்தினரையும் ஆயர் பாராட்டினார். கிறிஸ்தவ மக்களுக்குப் பாதுகாப்பான வீடுகளையும் வழிபாட்டிற்கான நிலத்தையும் உறுதிசெய்வது, அவர்களின் மாண்பையும் சமூகப் பொருளாதார நலனையும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பு என அவர் எடுத்துரைத்தார்.
வீட்டுவசதிச் சங்கத்தின் இணைச் செயலாளரும் நிகழ்வின் முக்கிய ஏற்பாட்டாளருமான இக்பால் கில், இந்த முயற்சிக்குப் பங்களித்த திருஅவைத் தலைவர்களுக்கும் பிற ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். நிலத்தை மீட்டெடுத்து, குடியிருப்புக்கும் வழிபாட்டிற்கும் இடம் உறுதிசெய்தது சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்க சாதனை என்றும், இது கிறிஸ்தவக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான குடியிருப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

சலாம்தி கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கத்தின் தலைவர் இம்மானுவேல் ஜாவைத் பேசுகையில், பாதுகாப்பான நில உரிமையும் தனியான வழிபாட்டுத் தலமும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கும் அடுத்த தலைமுறையின் மாண்புமிக்க எதிர்காலத்திற்கும் இன்றியமையாதவை என்று தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் கேனிஸ் டி'சூசாவும் ஆயர், காரித்தாஸ் பாகிஸ்தான் ஹைதராபாத் அமைப்பு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு மற்றும் உள்ளூர் சமூகத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புக்கும் முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
நிலம் மந்திரித்து அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிலையில், புனித கார்லோ அகுடிஸ் கத்தோலிக்க ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் விழாவுடன் தொடங்கும் எனத் திருஅவைத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ஹைதராபாத் மறைமாவட்டக் கத்தோலிக்க மக்களின் நீண்டகாலக் கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
