கத்தோலிக்கத் திருஅவையில் பெண்களுக்கான திருத்தொண்டர் பணி தற்போது சாத்தியமில்லை! | Veritas Tamil
கத்தோலிக்கத் திருஅவையில் பெண்களுக்கான திருத்தொண்டர் பணி தற்போது சாத்தியமில்லை!
கர்தினால் கியூசெப் பெட்ரோச்சி ஆணையம் அறிக்கை
வத்திக்கான், டிச. 06: கத்தோலிக்கத் திருஅவையில் பெண்களைத் திருத்தொண்டர்களாக நியமிப்பதற்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை என. இத்தாலியின் எல் அக்விலாவின் மேனாள் பேராயர் கர்தினால் கியூசெப் பெட்ரோச்சி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட இந்த ஆணையம், திருஅவையில் பெண்களைத் திருத்தொண்டர்களாக நியமிப்பது குறித்த ஆய்வு மேற்கொண்டு, அதற்கான அறிக்கையைக் கடந்த பிப்ரவரி மாதம் தயார் செய்திருந்தது. இந்நிலையில், இது குறித்து பல்வேறுகட்ட ஆய்வுகளை மேற்கொண்ட பெட்ரோச்சி தலைமையிலான ஆணையம், கடந்த செப்டம்பர் 18 -ஆம் தேதி 7 பக்கம் கொண்ட ஆய்வு அறிக்கையைத் தற்போதைய திருத்தந்தை லியோவிடம் ஒப்படைத்தது. இதனை அடுத்து அந்த அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிடுமாறு திருத்தந்தை லியோ அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிக்கை, "குருத்துவம் எனும் அருளடையாளத்தின் ஒரு படிநிலையாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற திருத்தொண்டர் படிநிலைக்குப் பெண்களை அனுமதிப்பதை நிராகரிக்கிறது; மேலும், குருத்துவ அருள்பொழிவுக்கான நியமன ஆணையைப்போல ஓர் உறுதியான தீர்ப்பை வரையறை செய்வது தற்போது சாத்தியமில்லை" என்று தெரிவித்திருக்கிறது.
வரலாற்று ஆய்வுகள் மற்றும் இறையியல் தேடல்களின் அடிப்படை ஆதாரங்களைப் பற்றிக் கேள்வி எழுப்பும் இவ்வாணையம், இவற்றின் பரஸ்பர செயலாக்கங்கள், குருத்துவ அருளடையாளத்தின் ஒரு படிநிலையாகப் புரிந்து கொள்ளப்படுகின்ற பெண்களை திருத்தொண்டர் படிநிலைக்குப் அனுமதிக்கும் திசையில் நகரும் சாத்தியத்தை
நிராகரிக்கின்றன. திரு விவிலியம், திரு அவையின் மரபு மற்றும் திரு அவையின் ஆசிரியம் (Magisterium ஒழுங்கு நிர்வாக ஆணையத்தின்) பார்வையில், இந்த மதிப்பீடு வலுவாக ஆய்வு செய்யப்பட்டதாகவும், இருப்பினும் இது தற்போது அருள்பணியாளர் நியமனத்தைப் போல ஓர் உறுதியான தீர்ப்பை உள்ளடக்கிய வரையறையை அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இதன் முதல் அமாலின் போது (2021), ஆணையம் "திருஅவை , வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் மற்றும் பல்வேறு வடிவங்களில், பெண்களைக் குறிக்கும் வகையில் திருத்தொண்டர் (டீக்கன்/டீக்களஸ்) என்ற பட்டத்தை அங்கீகரித்துள்ளது. இருப்பினும், அதற்குத் தனித்துவமான பொருள் இல்லை? என்று தீர்மானித்தது. இரண்டாவது செயல்பாட்டு அமர்வில் (ஜூலை 2022). இது குருத்துவப் படிநிலையில் திருத்தொண்டர் நிலைக்குப் பெண்களை அனுமதிப்பதை நோக்கிச் செல்வதற்கான சாத்தியத்தை நிராகரித்தது. ஆயினும், ஓர் உறுதியான தீர்ப்பை வழங்கவில்லை. இறுதி அமர்வில் (பிப்ரவரி 2025), பெறப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களையும் ஆணையம் ஆய்வு செய்து, இரண்டு இறையியல் நோக்கு நிலைகளுக்கு இடையில் ஒரு தீர்க்கமான இயங்கியல் "இருப்பதை உணர்ந்து, "இந்த நியமனம் ஊழியத்திற்காகவே தவிர, உரிமைக்கான சடங்கு நிலை அல்ல" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.