திருத்தந்தையை வரவேற்கத் தயாராகும் பொம்பெய் நகரம் ! | Veritas Tamil

திருத்தந்தை அவர்களின் இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, காலை 10:30 மணிக்கு திருத்தலத்தின் முன் உள்ள சதுக்கத்தில் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெறும், அதனைத் தொடர்ந்து பொம்பெய் அன்னையிடம் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் மன்றாட்டும் இடம்பெறும்.

மே 8, வெள்ளியன்று, இத்தாலியின் நேபிள்ஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள நகரமான பொம்பெய் நகருக்கு வருகை தர இருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு அம்மறைமாவட்டதின்  பேராயர் தொம்மாசோ கப்புட்டோ அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

தமது பதவியேற்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தை, அந்நகர நம்பிக்கையாளர்களுக்குக் கிடைத்த தனித்துவமான கொடை  என்று கூறியுள்ள பேராயர் கப்புட்டோ  அவர்கள், மேலும் இது  செபம், ஒளி மற்றும் அமைதிக்கான இடமாக விளங்கும் அந்நகரத்தின் அடையாளத்தை வலுப்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறைந்த இடமே இருந்தபோதிலும் பெரும் அளவிலான நம்பிக்கையாளர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் திருத்தந்தையை சந்திக்க எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் பேராயர் கப்புட்டோ  அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நகரத்திற்கு ஏற்கனவே 1979 மற்றும் 2003-ல் புனித இரண்டாம் ஜான் பால், 2008-ல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மற்றும் 2015-ல் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும், அவர்களின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைகளைத் தொடர்ந்து, தற்போது திருத்தந்தையின் இந்தப் பயணம் அமைகிறது என்றும் கூறியுள்ள பேராயர் கப்புட்டோ அவர்கள், "இத்தகைய வருகைகள் நகரத்தில் நீங்கா முத்திரையைப் பதிக்கும்"  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை அவர்களின் இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, காலை 10:30 மணிக்கு திருத்தலத்தின் முன் உள்ள சதுக்கத்தில் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெறும், அதனைத் தொடர்ந்து பொம்பெய் அன்னையிடம் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் மன்றாட்டும் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து அறப்பணிகளில் ஈடுபடுபவர்களின் பிரதிநிதிகளை திருத்தந்தை சந்தித்த பிறகு நம்பிக்கையாளர்களுக்கு வாழ்த்துக் கூறி, நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைச் சந்திக்க உள்ளார். இந்த பயணத்தின் மற்றொரு சிறப்பு நிகழ்வாக 2025-ஆம்‌ ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்ட புனித பார்டோலோ லோங்கோவின் கல்லறையில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் செபிக்க உள்ளார்.

பொம்பெய் நகரத்திற்கு ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான பார்வையாளர்கள் வருகை புரிந்தாலும், இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சவால்களை அந்நகரம் எதிர்கொள்கிறது.

தனது வாழ்க்கையையே மனமாற்றம் மற்றும் நம்பிக்கையின் ஆற்றல்மிக்க சான்றாக எடுத்துரைத்த பேராயர் கப்புட்டோ அவர்கள், திருத்தந்தையின் இந்த வருகை நம்பிக்கையைப் புதுப்பித்து எதிர்நோக்கை வலுப்படுத்தும் மற்றும் தொண்டு உணர்வைத் தூண்டுவதாக அமையும் என்று கூறி தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

நன்றி வத்திக்கான் செய்தி 

Tamil Survey Popup Image