கிறிஸ்துவில் ஒன்றிணைந்த திருஅவை: புறக்கணிப்புகளைக் கடந்து அரவணைக்கும் அன்புப்பணி ! | Veritas Tamil

புதிய ஆயர்கள் அதிகாரத்தை நாடாமல், தாழ்மையுடன் விளிம்புநிலை மக்களைத் தேடிச் சென்று, இறைவனின் குடும்பத்தில் அனைவருக்கும் இடமுண்டு என்ற நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.

கிறிஸ்துவிடம் நெருங்கி வருவதன் மூலம், நாம் ஒரு வலிமையான மற்றும் அனைவரையும் வரவேற்கும் இல்லமாக மாறுகிறோம் என்றும், குறிப்பாக இந்த பாஸ்கா காலத்திலும், இன்று உரோமை மறைமாவட்டத்தின் நான்கு புதிய துணை ஆயர்களின் திருநிலைப்பாட்டை நாம் கொண்டாடும் வேளையிலும், இந்த மகிழ்ச்சியை நாம் ஆழமாக உணர்கிறோம் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 02, சனிக்கிழமையன்று, உரோமையில் உள்ள புனித யோவான் லாத்தரன் பெருங்கோவிலில் இடம்பெற்ற உரோமை மறைமாவட்டத்தின் துணை ஆயர்களாக நான்கு குருக்களை திருநிலைப்படுத்திய திருப்பலியில் மறையுரை ஆற்றியபோது திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஸ்தேபனோ ஸ்பரபானி, அலெஸாண்ட்ரோ செனோபி, ஆண்ட்ரியா கார்லெவாலே மற்றும் மார்கோ வாலெண்டி ஆகிய நால்வரும் புதிய துணை ஆயர்களாக திருநிலைபடுத்தப்பட்டனர்.  

கிறிஸ்துவை மையமாகக் கொண்டுள்ள இந்தத் திருஅவை, உலகளாவிய தன்மைக்கும் (Universality) பிறரன்புப்  பணிக்கும் (Charity) என ஒரு தனித்துவமான அழைப்பைப் பெற்றுள்ளது என்று மொழிந்த திருத்தந்தை, உயிர்த்தெழுந்த மற்றும் வாழ்கின்ற கிறிஸ்துவே இறைமக்களின் அடித்தளம் ஆவார் என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும், நாம் கிறிஸ்துவை நெருங்கிச் செல்லும்போது, ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும், நமது ஒற்றுமையில் ஆழமாகவும் வளர்கிறோம் என்றும், இந்த மறைப்பொருள் நம்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையுமே உருமாற்றுகிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

தூய ஆவியானவர் இந்த புதிய ஆயர்களை நற்செய்திப் பணிக்காக அருட்பொழிவு செய்கிறார் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒரு காலத்தில் புறக்கணிக்கப்பட்ட கிறிஸ்துவே, இப்போது மூலைக்கல்லாக மாறியுள்ளார் என்றும், "புறக்கணிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று அணைத்துக்கொண்ட அவர், தமது இரக்கத்தின் வழியாகத் தந்தையாம் கடவுளின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்தினார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த உலகில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள்  அல்ல மாறாக, நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் மற்றும் அளவற்ற மாண்பு கொண்டவர்கள் என்பதையே ஆண்டவரது வாழ்வு நமக்குக் காட்டுகிறது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

உலகம் எதை ஒதுக்குகிறதோ, அதையே கடவுள் தேர்ந்துகொள்கிறார் என்று குறிப் பிட்ட திருத்தந்தை, இயேசு அநீதியை எதிர்த்தார் மற்றும் ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் நிலைநாட்டினார் என்றும்,  அவர் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட போதும் இறுதிவரை உண்மையுள்ளவராகவே இருந்தார் என்றும் எடுத்துக்காட்டினார்.

சமூகத்தால் கைவிடப்பட்டவர்களைத் தேடிச் செல்வதோடு, இறைவனின் குடும்பத்தில் அனைவருக்கும் இடமுண்டு என்ற நற்செய்தியை கிறிஸ்து வழியாக அறிவிக்க இந்த புதிய ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர்கள் அதிகாரத்தைத் தேடாமல், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்துடன்   பணியாற்றவும்; அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்கம் ஆகியவற்றின் உருவகமாகத் திகழவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

மேலும் மற்றவர்களுக்குச் செவிமடுத்தல், மன்னிப்பு வழங்குதல் மற்றும் அனைவரையும் வரவேற்பதன் மூலம், அவர்கள் ஒரு வாழும் திருஅவையைக் கட்டியெழுப்புகிறார்கள் என்று கூறிய திருத்தந்தை, உரோமை நகருக்கு வருகை தரும் அனைவரும், அங்கிருக்கும் மக்களிடமும் ஆயர்களிடமும் திருஅவையின் அன்பான, தாய்மை நிறைந்த முகத்தைக் காண வேண்டும் என்றும், அத்தோடு நம்பிக்கையாலும் உண்மையாலும் அவர்கள் என்றும் வழிநடத்தப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என்று கூறி தனது மரையுரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

நன்றி வத்திக்கான் செய்தி