தெற்கு லெபனோனில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தையின் செய்தி ! | Veritas Tamil

ஆண்டவர் உயிர்த்தெழுந்த நாளை இன்று நாம் மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். வலியும் வேதனையும் உங்களைச் சூழ்ந்திருந்தாலும், உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு பேரானந்தத்தை உணருங்கள். ஏனெனில், இயேசு இறப்பை வென்று மாட்சிமை பெற்றுள்ளார்.அது விண்ணிலிருந்து வரும் ஓர் மகிழ்ச்சி, அதை உங்களிடமிருந்து எவராலும் பறிக்க முடியாது.


ஆண்டவர் உயிர்த்தெழுந்த நாளை இன்று நாம் மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். வலியும் வேதனையும் உங்களைச் சூழ்ந்திருந்தாலும், உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு பேரானந்தத்தை உணருங்கள் என்றும், ஏனெனில், இயேசு இறப்பை வென்று மாட்சிமை பெற்றுள்ளார், அது விண்ணிலிருந்து வரும் ஓர் மகிழ்ச்சி, அதை உங்களிடமிருந்து எதனாலும் பறிக்க முடியாது என்றும்  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடபட்டு, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு லெபனானின் கிறிஸ்தவ கிராமமான டெபெல் (Debel) குடியிருப்பாளர்களுக்கு அனுப்பபட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி அத்தியாவசியத் தேவைகள் இன்றி அவதிப்படும் மக்கள் சோர்ந்து போக வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும்,  ஊரை விட்டு வெளியேற முடியாத நிலையில், கடும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஆறுதல் செய்தியாகவும் அமைந்துள்ளது.

திருத்தந்தையின் திருத்தூதரகத் தூதுவர் பேராயர் பாவ்லோ போர்ஜியா அவர்கள், லெபனோனில் உயிர்ப்பு பெருவிழாவன்று  மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், போர்ச் சூழல் காரணமாக 40 டன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களின் பயணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த உதவித் திட்டத்தை ஐநா அமைதிப்படை (UNIFIL) மற்றும் காரித்தாஸ் போன்ற அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு பேராயர் பாவ்லோ போர்ஜியா அவர்கள், நேரில் செல்ல முடியாத நிலையில், ஐநா தளத்தில் இருந்தவாறே லெபனான் ஊடகங்கள் வழியாக திருத்தந்தையின் செய்தி கிராம மக்களுக்கு ஒலிபரப்பப்படுவதைக் கண்டார்.

குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும், நம்பிக்கையாளர்கள் புனித வாரத்தையும் உயிர்ப்புப் பெருவிழாவையும் ஆழமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் கொண்டாடினர். தடுத்து நிறுத்தப்பட்ட இந்த உதவித் திட்டம் குறித்து லெபனோன் மரோனைட் கத்தோலிக்க  திருஅவையின் முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutrous Ra’i அவர்கள் தனது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு வலிமிகுந்த அநீதி இது என்றும் குறிப்பிட்டார்.

சால்வடோர் செர்னுசியோ – வத்திக்கான் நகரம்

நன்றி வத்திக்கான் செய்தி