ஏப்ரல் முதல் ஜூலை வரை திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகள் ! | Veritas Tamil
திருத்தந்தையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களின் தலைவர் வெளியிட்டுள்ள இந்தக் கால அட்டவணையில் திருத்தந்தையின் அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தலைமையில் நிகழவிருக்கும் திருவழிபாட்டு விழாக்களுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது திருத்தந்தையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களின் தலைமை.
திருத்தந்தையின் இந்தக் கால அட்டவணையில் அவரது அனைத்துலகப் பயணங்கள், குருத்துவத் திருநிலைப்பாடுகள் மற்றும் திருஅவையின் முக்கியப் பெருவிழாக்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
முதலாவதாக ஏப்ரல் 13 முதல் 23 வரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு 10 நாட்கள் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார். அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் இந்தப் பயணம், அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்திற்குச் செல்லும் முதல் பயணமாகும்.
இந்தத் திருத்தூதுப்பயணத்திற்குப் பிறகு மீண்டும் உரோமைக்கு திரும்பும் திருத்தந்தை, ஏப்ரல் 26, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் எட்டுப் பேருக்குக் குருத்துவத் திருநிலைப்பாட்டினை வழங்கவுள்ளார்.
அதன்பிறகு மே மாதம், தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் ஆயர் திருநிலைப்பாடுகளை திருத்தந்தை தலைமையேற்று வழிநடத்துவார். திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரில் அமைந்துள்ள பொம்பெயி மாநகரில் உள்ள அன்னை மரியாள் திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்வார்
அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம், ஸ்பெயின் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக மத்ரித் மற்றும் பார்செலோனா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் திருத்தந்தை, அங்குள்ள திருக்குடும்பப் பேராலயத்தின் புதிய கோபுரத்தைத் திறந்து வைப்பார்.
அதன் பின்னர் இத்தாலியிலுள்ள பாவியா நகரத்திற்குச் செல்லும் திருத்தந்தை, பிறகு உரோமை நகரில் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுவார்.
இறுதியாக, ஜூலை 4, சனிக்கிழமையன்று, இத்தாலியின் மத்தியதரைக்கடலில் அமைந்துள்ள லம்பேதூசா தீவில் பங்கு சந்திப்பு ஒன்றை மேற்கொள்வார். ஐரோப்பாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோருக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் இத்தீவில், திருப்பலி நிறைவேற்றுவதுடன் திருத்தந்தையின் இந்தப் பயணங்கள் நிறைவடைகின்றன.
நன்றி வத்திக்கான் செய்தி