அதிகாரத்துவத்தை விடுத்து ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க திருத்தந்தை அழைப்பு ! | Veritas Tamil
அரசியல் என்பது பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலட்சியமாக இருக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும்போது "அன்பின் மிக உயர்ந்த வடிவமாக" மாறுகிறது.
முரண்பாடுகளை விட ஒற்றுமையே மேலானது என்பதற்கு இணங்க, உண்மையான ஒற்றுமை என்பது வேறுபாடுகளைக் கடந்து, மனித மாண்பினைப் போற்றி, ஆக்கபூர்வமான ஒன்றைக் கட்டியெழுப்புவதாகும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 25, சனிக்கிழமையன்று, ஐரோப்பிய மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே போர்களைத் தடுப்பதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமல்ல; மாறாக, நம்மிடையே நிலவும் பொதுவான மனிதநேய, பண்பாட்டு மற்றும் ஆன்மீக விழுமியங்களை மீண்டும் கண்டடைவதற்காக உருவான ஒரு உன்னதத் திட்டமாகும் என்று கூறினார்.
தொடர்ந்து அரசியல் என்பது பொதுநலனை முன்னிறுத்திய ஒரு சிறந்த இலட்சியத்தை வழங்க வேண்டும் என்றும், அது அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும்போது, "அன்பின் மிக உயர்ந்த வடிவமாக போற்றப்படுகிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
அரசியல் என்பது ஒரு குறுகிய சித்தாந்தமாக மாறிவிடக்கூடாது; ஏனெனில் சித்தாந்தங்கள் எதார்த்தத்தைத் திசைதிருப்பிக் காலப்போக்கில் சுதந்திரத்தை நசுக்கிவிடும் என்றும், அரசியல் எப்போதும் தனிமனித மாண்பையும், மனிதர்களையுமே தனது மையமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்றும் திருத் தந்தை அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
உண்மையான அரசியல் என்பது மக்களுடன் நெருங்கி இருப்பதையும், அவர்களோடு உரையாடுவதையும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறிய திருத்தந்தை இது வெறும் உணர்ச்சிகளைத் தூண்டும் அரசியலுக்கும், மேல்தட்டு அதிகார அரசியலுக்கும் மாற்றானது என்று குறிப்பிட்டார்.
ஐரோப்பியக் கண்டத்தின் நலனுக்காக அவர்கள் மேற்கொண்டு வரும் அரும்பணிகளைப் பாராட்டிய திருத்தந்தை, இன்றைய கணினி மயமான உலகில், நம்பிக்கையை மீட்டெடுக்கவும் சமூகப் பிணைப்பை உருவாக்கவும் தனிமனிதர்களுக்கு இடையிலான நேரடி உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவது மிக முக்கியமாகும் என்றும் தனது கருத்தை திருத்தந்தை பதிவு செய்தார்.
கிறிஸ்தவ விழுமியங்களைப் பின்பற்றுபவர்கள், சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு நற்செய்தி வழியில் நடக்க வேண்டும் என்றும், சுயமரியாதையைப் பாதுகாக்கும் வேலை , குடும்ப நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற சமகாலப் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள்வதே இதன் நோக்கம் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, உண்மையான சுதந்திரம் என்பது உண்மையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்றும், அது மனிதனின் மனசாட்சிக்கும் மத உரிமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி தனது திருத்தூது ஆசீரை வழங்கி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
நன்றி வத்திக்கான் செய்தி