பிலிப்பைன்ஸ் நாட்டின் குயேசான் நகரில் “மூன்று புனிதர்களின் ஆலயம்” திறக்கப்பட்டது ! | Veritas Tamil
2026 ஏப்ரல் 12 அன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் குயேசான் நகரில் உள்ள ரேடியோ வெரிடாஸ் ஆசியா (RVA) மத்திய அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட “மூன்று புனிதர்களின் ஆலயம்” ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்பட்டது. குபாவோ மறைமாவட்ட ஆயர் எலியாஸ் அயுபான் தலைமையில் நடைபெற்ற நன்றி திருப்பலியில் 200-க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருப்பலியை குபாவோ மறைமாவட்ட ஆயரும், பிலிப்பைன் ரேடியோ கல்வி மற்றும் தகவல் மையத்தின் (PREIC) துணைத்தலைவருமான ஆயர் எலியாஸ் எல். அயுபான் ஜூனியர் நடத்தினார். அவருடன் RVA பொது மேலாளர் அருட்தந்தை பெல்மார் ஃபியல் SVD, நிகழ்ச்சி இயக்குநர் அருட்தந்தை ஜான் மி ஷென் மற்றும் RVA மத்திய அலுவலகத்தில் பணியாற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர் .
வரவேற்பு உரையில் அருட்தந்தை பெல்மார் ஃபியல் SVD, RVA நிறுவப்பட்டு 57 ஆண்டுகள் நிறைவடையும் இந்த காலத்தில் ஆலயப் புதுப்பிப்பு நிறைவடைந்ததற்காக நன்றியைத் தெரிவித்தார்.
“15 ஆண்டுகளுக்கு மேலாக, இந்த ஆலயம் பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. சிறிய பழுது பார்க்கும் பணியாக தொடங்கியது இன்று முழுமையான புதுப்பிப்பாக மாறியுள்ளது.
இந்தப் பணிகள் தினசரி திருப்பலி அனுசரணையாளர்களின் தாராள உதவியால் சாத்தியமானது என்றும், அவர்கள் RVA-வின் ஆசியா முழுவதும் நடைபெறும் விசுவாச பணியைத் தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயர் எலியாஸ் அயுபான் அவர்கள் ஆலயத்தை ஆசீர்வதித்து, “அந்நியர்கள் வரவேற்கப்படுகிற இடம், தவறியவர்கள் கண்டுபிடிக்கப்படுகிற இடம், சோர்ந்தவர்கள் ஓய்வு பெறுகிற இடம்” ஆக இருக்க இறைவனின் அருளை வேண்டினார். பின்னர் ஆலயத்தை திருநீரால் தெளித்தார்.
மேலும் அவர் மறையுரை வழங்கியபோது , “இரக்கம் என்பது இறைவன் தரும் ஒன்று மட்டுமல்ல; அது இறைவனின் இயல்பே” என்று வலியுறுத்தினார். திருத்தந்தை பிரான்சிஸின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, “இறைவன் நம்மை மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வதில்லை; மன்னிப்பு கேட்பதில் நாம் தான் சோர்வடைகிறோம்” என்றார்.
தோமா அப்போஸ்தலர் உயிர்த்த இயேசுவை சந்தித்த நற்செய்தி நிகழ்வை குறிப்பிடும் போது, “உங்கள் காயங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டாம்; அவையே இறைவன் தனது அருளை வழங்கும் வழிகள்” என்றார்.
பிரசங்கத்திற்குப் பிறகு, இந்த ஆலயம் அதிகாரப்பூர்வமாக “RVA மூன்று புனிதர்களின் ஆலயம்” என அர்ப்பணிக்கப்பட்டது. இது நவீன கத்தோலிக்க சாட்சியத்தின் மூன்று பெரும் நபர்களான புனித பால் VI, புனித ஜான் பால் II மற்றும் மதர் தெரசாவை கௌரவிக்கிறது.
அருட்தந்தை ஜான் மி ஷென், இந்த அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி, “இந்த மூன்று புனிதர்களும் RVA-வை நேரில் பார்வையிட்டவர்கள். அவர்களின் பிரார்த்தனையிலும் சுவிசேஷ ஆவியிலும் இந்த நிறுவனம் வாழட்டும்” என்றார்.
பின்னர் மூன்று புனிதர்களின் புனிதப் பாகங்கள் (Relics) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆயர் அவற்றை ஆலயச் சுவரில் தயாரிக்கப்பட்ட சிறப்பு இடத்தில் நிறுவினார்.
திருப்பலிக்குப் பிறகு, பங்கேற்றவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. RVA வரலாறு மற்றும் ஆசியா முழுவதும் அதன் பணியைப் பற்றிய காணொளியும் திரையிடப்பட்டது. தினசரி திருப்பலி பங்கேற்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தனர்.
2029 ஆம் ஆண்டு RVA நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அடுத்த மூன்று ஆண்டுகள் மூன்று புனிதர்களுக்கு ஒவ்வொன்றாக அர்ப்பணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் உச்சமாக RVA வளாகத்தில் “மூன்று புனிதர்கள் தோட்டம்” உருவாக்கப்படும்.
இறுதியாக இன்று ரேடியோ வெரித்தாஸ் ஆசியா மூன்று புனிதர்களின் ஆலயம், ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் ஆன்மீக இதயமாக, நம்பிக்கை , பணி மற்றும் உலக திருஅவையுடன் ஒன்றிப்பட்டிருப்பதற்கான நிரந்தர சின்னமாக நிற்கிறது.