அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை CCIDE நடத்தியது !| Veritas Tamil

2025 டிசம்பர் 13 அன்று, லாஹோரிலுள்ள புனித அந்தோணியார் பள்ளியில் CCIDE பாகிஸ்தான் ஏற்பாடு செய்த இடைமத கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மதத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானில் உள்ள இடைமத உரையாடல் மற்றும் சபை ஒற்றுமைக்கான கத்தோலிக்க ஆணையம் (CCIDE), 2025 டிசம்பர் 13 அன்று லாஹோரிலுள்ள புனித அந்தோணியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவித்தனர்.

மத ரீதியாகப் பல்வகைமையைக் கொண்ட பாகிஸ்தான் சமூகத்தில், நல்லிணக்கம் வளர்ப்பதும், இடைமத உறவுகளை வலுப்படுத்துவதும், அமைதியான இணைவாழ்விற்கான பொதுவான அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதும் இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முல்தான் மறைமாவட்ட ஆயரும், CCIDE தலைவர் அவருமான ஆயர் யூசஃப் சோஹன், நாடு முழுவதும் அன்பும் அமைதியும் கொண்ட செய்தியைப் பரப்புவதே ஆணையத்தின் பணியாகும் என்று வலியுறுத்தினார்.
“பாகிஸ்தானில் உள்ள அனைத்து மதத்தினரிடையிலும் அன்பும் அமைதியும் கொண்ட செய்தியைப் பரப்புவதே எங்கள் பணியாகும். இடைமத உரையாடலின் மூலம், அமைதியான இணைவாழ்வை உருவாக்கவும், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஐக்கியத்தை வலுப்படுத்தவும் நாம் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்,” என ஆயர் கூறினார்.

“பாகிஸ்தானிலுள்ள கத்தோலிக்க திருச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தியும், CCIDE தலைவராகவும், இந்த பணியை அதிகமாகப் பரப்புவதற்கு நான் உறுதியுடன் செயல்படுகிறேன்.”

வாடிகன் இரண்டாம் பேரவை வெளியிட்ட, கிறிஸ்தவமற்ற மதங்களுடன் உறவுகளைப் பற்றிய முக்கிய ஆவணமான ‘நோஸ்திரா ஏடாத்தே’ (Nostra Aetate) ஆவணத்தின் 60-ஆவது ஆண்டு நிறைவை ஆயர் சோஹன் நினைவுகூரினார். மேலும், இடைமத உரையாடலுக்கான வாடிகன் துறையின் தலைவர் கார்டினல் ஜார்ஜ் ஜேக்கப் கூவகாடு உடன் இணைந்து, திருத்தந்தை லியோ XIV, மத எல்லைகளைத் தாண்டி உறவுகளை ஆழப்படுத்த மத சமூகங்களை ஊக்குவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“மற்ற மதத்தினருடன் நல்லுறவு பேணுவது, சமூகத்திலும், நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் அமைதி, ஒற்றுமை, ஐக்கியம் மற்றும் சமூக நீதியை வளர்க்க உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், லாஹோர் அமைதி மையத்தின் இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் சன்னன் OP நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒற்றுமையின் உலகளாவிய தாக்கத்தை வலியுறுத்தினார்.

இறுதியாக“பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கிடையிலான ஒற்றுமை, உலகிற்கு ஒரு நேர்மறையான செய்தியை அனுப்புகிறது,” என்று அவர் கூறினார்.
“பல சவால்கள் இருந்தபோதிலும், பாகிஸ்தானில் நாம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்ப தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.”