வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 03.07.2024

தலைப்பு செய்திகள்
- 15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்
- பிலிப்பீன்ஸில் வத்திக்கான் வெளியுறவுச் செயலரின் 5 நாள் பயணம்
- துயருறும் கென்ய இளையோருக்கு அந்நாட்டு ஆயர்களின் ஒருமைப்பாடு
- ஹெயிட்டி நாட்டிற்குள்ளேயே குழந்தைகள் புலம்பெயர்ந்தவர்களாக மாறுவதாக UNICEFன் அறிக்கை
—------------------------------------------------------------------------------------------------------------------
- அருளாளர் கார்லோ அகுதீஸ் உட்பட 15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 1 திங்கள் கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.ஜுலை 1 திங்கள் கிழமை காலை வத்திக்கான் திருத்தூது மாளிகையில் கூடிய கர்தினால்கள் அவையின் பொதுக்கூட்டத்தின்போது இந்த ஒப்புதல்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிரியாவின் தமாஸ்கஸ் பகுதியில் 1860 ஆம் ஆண்டு அருள்பணி Manuel Ruiz López, OFM, அவருடைய உடன் தோழர்கள் எழுவர், மூன்று உடன் சகோதரர்களான Abdel Moati, Francis, Raphael Massabki ஆகிய பதினொருவர் சிரியா போரில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர்.
மேலும் இத்தாலியைச் சார்ந்த அருளாளர் அருள்பணி Giuseppe Allamano, அருள்சகோதரி Elena Guerra, கனடா நாட்டைச் சார்ந்த அருள்சகோதரி Marie-Léonie Paradis மற்றும் இளம்அருளாளாரான கார்லோ அகுதீஸ் ஆகியோர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட உள்ளனர்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இந்த 14 அருளாளர்களும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட இருக்கின்றனர். அருளாளர் கார்லோ அகுதீஸ் புனிதராக உயர்த்தப்பட இருக்கும் நாளை, திருப்பீடமானது விரைவில் முடிவு செய்து அறிவிக்க உள்ளது.
—------------------------------------------------------------------------------------------------------------------
- நாடுகளுக்கான வத்திக்கான் வெளியுறவுத் துறையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டில் 5 நாள் பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் சிறப்பிக்கப்படும் திருத்தந்தையர் தினம் என்ற கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதோடு, அரசு உயர் அதிகாரிகளைச் சந்திப்பது, பிலிப்பீன்ஸ் ஆயர்களின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்பது போன்றவைகளிலும் கலந்துகொள்ளும் பேராயர் கல்லகர், இம்மாதம் 6ஆம் தேதி வத்திக்கான் திரும்புவார்.
ஜூலை மாதம் 2ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், வெளியுறவுத்துறைச் செயலர் என்ரிக் மனாலோ ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் வத்திக்கான் வெளியுறவுத்துறைச் செயலர், பேராயர் கல்லகர்.
ஜூலை 3ஆம் தேதி வட மிந்தனாவோ பகுதியிலுள்ள மலாய்பலாய் என்ற இடத்தில் நடக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள் அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பேராயர், அதற்கு அடுத்த நாள், அதாவது, ஜூலை 4ஆம் தேதி ஆயர்களுடன் இணைந்து மலாய்பலாயின் திருக்காட்சி துறவு மடத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.
—------------------------------------------------------------------------------------------------------------------
- கென்யா நாட்டில் வேலை வாய்ப்பின்மைகளாலும், கல்வி வசதிகளின்மையாலும், அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளாலும், இருண்ட வருங்காலத்தாலும் துயருறும் இளையோரின் பக்கத்தில் தாங்கள் நின்று அவர்களுக்கு ஆறுதலை வழங்க ஆவல் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அண்மை சில நாட்களாக அரசிற்கு எதிரான இளையோரின் போராட்டங்கள் இடம்பெறுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர முயலும் கென்ய இளையோரின் ஏக்கங்களைப் புரிந்துகொள்வதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் காவல்துறைக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளது மற்றும் எண்ணற்றோர் காயமடைந்துள்ளது மிகுந்த வேதனை தரும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் வன்முறை நடவடிக்கைகள் எவ்வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பதை எடுத்துரைக்கும் ஆயர்கள், இளையோரின் நியாயமான ஏக்கங்களோடு தாங்களும் இணைந்து பயணம் செய்ய ஆவல் கொள்வதாக மேலும் கூறியுள்ளனர்.
—------------------------------------------------------------------------------------------------------------------
- ஹெயிட்டி நாட்டில் ஆயுதம் தாங்கிய வன்முறைகளால் ஒரு நிமிடத்திற்கு ஒரு குழந்தை என்ற வகையில் புலம்பெயர்ந்தவர்களாக மாறுவதாக UNICEF என்னும் குழந்தைகளுக்கான அவசரகால நிதியமைப்பு எடுத்துரைக்கிறது.
ஹெயிட்டி நாட்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மார்ச் மாதத்திலிருந்து 60 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய வன்முறைகளால் ஹெயிட்டி நாட்டில் 6 இலட்சம் பேர் வரை நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளதாகவும், இதில் 3 இலட்சம் பேர் குழந்தைகள் எனவும் கூறும் யுனிசெப் அமைப்பு, அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும் எடுத்துரைக்கிறது.
குழந்தைகளும் இளம்பருவத்தினரும் தாக்குதலுக்கும், சுரண்டலுக்கும், பாலியல் அத்துமீறலுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் கூறும் இவ்வறிக்கை, பலர் தங்கள் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கிறது.குழந்தைகளுக்கு நல ஆதரவு, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் போன்றவை எட்டாக் கனியாக இருப்பதாகவும், அவர்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து இருப்பதாகவும், வன்முறைகளால் கல்வியை இடையில் நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் யுனிசெப்பின் அண்மை அறிக்கை தெரிவிக்கிறது.
—--------------------------------------------------------------------------------------------------------
Daily Program
