வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 01.07.2024
தலைப்பு செய்திகள்
- ஜூலை மாதம் முழுவதும்,பெரும்பாலான செயல்பாடுகளிலிருந்து திருத்தந்தை ஓய்வு.
- 2-வது ஒருங்கிணைந்த பயண அமர்விற்கான செயல்முறைக்காண தயாரிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
- ஆசிய நாடுகளில் குறையும் மதச் சுதந்திரம்!
- சூடானில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ள யுனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell
- தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: நீர்வள ஆதாரத் துறை தகவல்.
—------------------------------------------------------------------------------------------------------------------
- திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாதம் முழுவதும், புனித பேதுரு சதுக்கத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை மற்றும் பெரும்பாலான செயல்பாடுகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வார் என்று திருத்தந்தையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் பெரும்பாலான பணிகள் மற்றும் பார்வையாளர்கள் சந்திப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டுகளில் செய்ததுபோல, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை மட்டும் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது
மேலும், திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாள் மீண்டும் துவங்கும் என்றும், உரோமை நகரின் கடுமையான வெப்பத்தைக் கருத்தில்கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்வுகள் வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
—-----------------------------------------------------------------------------------------------------------------
- உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகத்தின் 15-வது பொதுச் சபை உறுப்பினர்கள், வரவிருக்கும் இரண்டாவது ஒருங்கிணைந்த பயண அமர்விற்கான Instrumentum laboris என்ற வரைவுத் தொகுப்பு தயாரிப்பைத் தொடரும் வேளை, திருத்தந்தையை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.
இவ்வாண்டில் இடம்பெற உள்ள இரண்டாவது உலக ஆயர் மாமன்ற தாயாரிப்புக் கூட்டத்திற்கு உதவும் வகையில் கடந்த ஒன்றரை வாரங்களாக 20 இறையியலாளர்கள் உரோம் நகரில் கூடி Instrumentum laboris என்ற வரைவுத் தொகுப்புத் தயாரிப்பு ஏட்டை, இறைமக்களின் பதிலுரைகளின் உதவியுடன் தயாரித்துள்ளனர்.
இந்தப் பணிகள் குறித்து விளக்கிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக் (Mario Grech) அவர்கள், ஒன்றிணைந்த பயணத்தின் முழு செயல்முறையையும் (entire synod) உயிரூட்டம் (animation) செய்த சுற்றறிக்கையின் கொள்கையுடன் தொடர்ந்து நிலைத்திருக்க, இந்தப் பரந்த அளவிலான ஆலோசனையை நாங்கள் மேற்கொள்ள விரும்புகிறோம் என்று கூறினார்.
வரவிருக்கும் நாள்களில், பரந்த அளவிலான மதிப்பாய்வில் இருந்து வரைவுத் தொகுப்பு (Instrumentum laboris) தயாரிப்பு ஏட்டின் புதிய பதிப்பு வரைவு செய்யப்படும் என்றும், அந்த வரைவு, இறுதி ஒப்புதலுக்காகத் திருத்தந்தைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், பொதுச் சபையின் (Ordinary Council) ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—------------------------------------------------------------------------------------------------------------------
- 2023-ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மதச் சுதந்திர அறிக்கையை ஜூன் 27, இவ்வியாழனன்று வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவர்கள், இன்று உலகெங்கிலும் உள்ள ஒரு சில அரசுகள் தனிநபர்களைக் குறிவைத்தும், வழிபாட்டுத் தலங்களை மூடியும், ஒரு சில சமூக மக்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தும், மக்களின் மத நம்பிக்கைகளின் காரணமாக அவர்களை சிறைபடுத்தியும் துன்புறுத்துவதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறுபான்மைச் சமூகங்கள் மீது திணிக்கப்படும் மதமாற்றத் தடைச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சுக்கள், மக்களின் இல்லங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்படுவது போன்றவை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பிளிங்கன் அவர்கள், உணவின் அடிப்படையில் இசுலாம் சமயத்தவர் கொல்லப்படுவது மற்றும், கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் தாக்குவது உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்களும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் பிளிங்கன்.மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, இனக் குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறைகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், ஏறக்குறைய 250 வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், 60,000-க்கும் அதிகமானோர் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இவ்வறிக்கை, ஆசிய நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காள தேசம் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் மதச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் கவலை தெரிவிக்கிறது.
—------------------------------------------------------------------------------------------------------------------
- சூடானில் ஏறக்குறைய ஒரு கோடியே 10 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஜூன் 26, இவ்வெள்ளியன்று, இத்தாலியின் திறிஸ்தேவில் நடைபெற்ற G7 இத்தாலி 2024 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார் யுனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell
மோதலில் இருந்து தப்பி வந்த குழந்தைகள் நிறைந்த சூடானின் யுனிசெஃப் மையத்தை தான் பார்வையிட்டதாகவும், உடைகள், வீடுகள், நண்பர்கள் மற்றும் பள்ளிகள் என அனைத்தையும் அவர்கள் இழந்துவிட்டதாகவும் உரைத்துள்ள Russell அவர்கள், "நாங்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறோம், நாங்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறோம்" என்று அங்கிருந்த பல பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.
உலகளாவிய சமூகமாக, நாம் இந்தப் பெண்களையும், இன்னும் இலட்சக்கணக்கான குழந்தைகளையும் அவர்களின் உலகமாகத் தவறிவிட்டோம் என்று கவலை தெரிவித்துள்ள Russell அவர்கள், இன்று 25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்றும், இவர்களில் 10 கோடி குழந்தைகள் ஆப்பிரிக்காவில் உள்ளனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
—---------------------------------------------------------------------------------------------------------------
- தமிழகத்தில் கடந்த ஏப்ரலைவிட, மே மாதத்தில் கடலூர், தருமபுரி,தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் சென்னை தவிர இதர 37 மாவட்டங்களிலும் பெய்யும் மழை அடிப்படையில் நிலத்தடிநீர்மட்டத்தை நீர்வள ஆதாரத் துறைகணக்கிடுகிறது. மாநிலத்தில் உள்ள 3,200-க்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகள் (கண்காணிப்பு கிணறுகள்), 1,400-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் மாவட்ட வாரியாக கடலூரில் 0.54 மீட்டர், தருமபுரியில் 0.51 மீட்டர், தஞ்சாவூரில் 0.19 மீ.,மயிலாடுதுறையில் 0.13 மீ., கிருஷ்ணகிரியில் 0.11 மீ., கள்ளக்குறிச்சியில் 0.08 மீ., திருப்பத்தூரில் 0.08 மீ.நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மற்ற 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிகபட்சமாக திருநெல்வேலியில் நிலத்தடிநீர்மட்டம் 1.28 மீ. உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்து, மயிலாடுதுறையில் 1.04 மீ. உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த ஆண்டு போலவே1.9 மீ. என்ற அளவில் உள்ளது.நாகப்பட்டினத்தில் 0.27 மீ., ராமநாதபுரத்தில் 0.36 மீ., தூத்துக்குடியில் 0.81 மீ., விருதுநகரில் 0.69மீ., தென்காசியில் 0.37 மீ. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.