இந்திய கர்தினால் டெலெஸ்போர் டோப்போ மறைவு || வேரித்தாஸ் செய்திகள்

இந்திய கர்தினால்  டெலெஸ்போர் பிளாசிடஸ் டோப்போ இந்தியாவின் முதல் பழங்குடியின கர்தினால், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி முன்னாள் பேராயர் (84), அக்டோபர் 4, 2023 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணிக்கு ராஞ்சி, மாந்தர், கான்ஸ்டன்ட் லீவன்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வயது தொடர்பான நோய்களால் அதே மருத்துவமனையில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார்., மேலும் இறுதிச் சடங்குகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

1978 முதல் 1984 வரை தும்கா ஆயராக  பணியாற்றிய பிறகு, 1985 முதல் 2018 வரை ராஞ்சி பேராயராக பணியாற்றினார்.

மேலும் இரண்டு முறை (2001-2004 மற்றும் 2011-2013) கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) தலைவராக பணியாற்றியுள்ளார்.

2004 முதல் 2008 வரை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) தலைவராகப் பணியாற்றினார்.

அக்டோபர் 15, 1939 இல், அவர் கும்லா மாவட்டத்தில் உள்ள செயின்பூர் பங்கில்  உள்ள ஒரு சிறிய தொலைதூர கிராமமான ஜார்கானில் பிறந்தார்.

அவர் திரு. ஆம்ப்ரோஸ் டோப்போ மற்றும் சோபியா சால்க்சோ ஆகியோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவரின் பெற்றோருக்கு 10 குழந்தைகள் ஆவர்.

இவருடைய ஏழ்மையான விவசாய தொழில் செய்து வந்த காரணத்தினாலே இவரை கிராமத்தில் இருந்த ஒரு சிறு பள்ளியில் சேர்த்தனர். நன்றாக படித்த கர்தினால் அவர்கள் அருகில் எந்த கிராமத்திலும் மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் பல மைல் தூரம் நடந்து சென்று மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்.

அந்த நாட்களில், பெல்ஜிய இயேசு சபை துறவிகள்  அவரது கிராமத்திற்கு வருகை தந்தனர்.பெல்ஜிய இயேசு சபை துறவிகளை  பார்த்த கணத்தில், அவர் நினைத்தார்: அவர்கள் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வெளியேறி, ஏழு கடல்களைக் கடந்து, கடக்க முடியாத காடுகளையும் பள்ளத்தாக்குகளையும் கடந்து, நற்செய்தியைப் பறைசாற்ற முடிந்தால் ,நான் ஏன் அந்த பணியை செய்யக்கூடாது என்று கேள்வி அவருள் எழுந்தது. அந்த கேள்வியின் விளைவால் குருவாக வேண்டும் என்று குருமடத்தில் சேர்ந்தார்.

அவர் ராஞ்சியில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை  பட்டம் பெற்றார், அதன்பின்னர்   ராஞ்சி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றார்.

பின்னர், அவர் ராஞ்சியில் தத்துவவியல் பட்டமும், ரோமில் உள்ள பாப்பரசர் பல்கலைக்கழகத்தில் இறையியல் பட்டமும் பெற்றார்.   அதன்பின்னர்  மே 8, 1969 இல் சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டு அங்கு தனது பணியை தொடங்கினார்.

அவர் ஒரு இளம் குருவாக  இந்தியாவுக்குத் திரும்பினார் மற்றும் டார்பாவில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக  நியமிக்கப்பட்டார், மேலும் அவர் விரைவில் பள்ளியின் தற்காலிக முதல்வராக ஆனார்.

1976 ஆம் ஆண்டில் டோர்பாவில்  லீவன்ஸ் தொழில் மையம் ஒன்றை  நிறுவினார், பின்னர் அதன் இயக்குநராகவும், அப்போதைய ராஞ்சி பேராயராக இருந்த பேராயர் பயஸ் கெர்கெட்டாவின் குருமடத்தில்  பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

ஜூன் 8, 1978 இல், அவர் தும்காவின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆண்டவருடைய  வழியை ஆயத்தப்படுத்துங்கள்" என்ற பொன்மொழியைத் தனது பணிவாழ்விற்கு தெரிந்துகொண்டார்.

துதானி புனித தெரசா பெண்கள் பள்ளியில் மறைந்த பேராயர் பயஸ் கெர்கெட்டா அவர்களால் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தும்கா ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

புனித  இரண்டாம் ஜான் பால் அவரை நவம்பர் 8, 1984 இல் ராஞ்சியின் இணை பேராயராக பரிந்துரைத்தார், மேலும் ஆகஸ்ட் 7, 1985 இல், அவர் ராஞ்சியின் பேராயராக நியமிக்கப்பட்டார் மற்றும் ஆகஸ்ட் 25, 1985 இல் பேராயராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

அக்டோபர் 21, 2003 அன்று, புனித  இரண்டாம் ஜான் பால், பேராயர் டோப்போவை கர்தினால்கள் பேரவை நிலைக்கு   உயர்த்தினார், ஜார்க்கண்டின் செழித்து வளர்ந்து வரும் மலைவாழ் மக்களின் திருஅவை இவர் வழியாக மிக பெரிய நிலையை எட்டியது. இவர் ஒருவருக்கு மட்டுமே முதல் மற்றும் ஆசிய நாட்டில் வாழும் ஒரு  பழங்குடியினருக்கு இத்தகைய சிறப்புமிக்க திருஅவை  பதவி வழங்கப்பட்டது.

ஏப்ரல் 2005 இல், அவர் திருத்தந்தை பதினாறாம்  பெனடிக்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால்கள் பேரவையில் உறுப்பினராக இருந்தார், அதே நேரத்தில் மார்ச் 2013 இல், திருத்தந்தை  பிரான்சிஸைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் பேரவையில் உறுப்பினராக இருந்தார் என்பது இவரின் சிறப்பு மற்றும் நம் நாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

நவம்பர் 28 முதல் டிசம்பர் 4, 2016 வரை., இலங்கையின் கொழும்பில் உள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் (FABC) XI முழுமையான பேரவையின் சிறப்புத் தூதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால்  நியமிக்கப்பட்டார்.

ஜார்க்கண்டில் அவரது சிறந்த சமூகப் பணிக்காக, கர்தினால்  டோப்போவுக்கு 2002 இல் ஜார்கண்ட் ரத்தன் விருது வழங்கப்பட்டது.

புனித நற்கருணை மீது அவருக்கு இருந்த பற்றும், இயேசுவின் திரு இருதயத்தின் மீது கொண்ட பக்தியும், அன்னை மரியாவின் மீது கொண்ட பாசமான பற்றுதலும் அவருடைய உறுதியான மற்றும் தீராத ஆளுமையின் ஆதாரங்களாகும்.

இவரின் இத்தனை ஆண்டு கால வாழ்க்கைக்கு ஆணிவேராக இருந்தது இவருடைய ஜெப வாழ்க்கையும், இவரின் தன்னலமற்ற சேவை , மற்றும் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவருடைய துறவற வாழ்வு.

54 ஆண்டுகள் ஒரு குருவாகவும் , 44 ஆண்டுகள் ஆயராக, பேராயராக , 19 ஆண்டுகள் கர்தினாலாக , கத்தோலிக்க திருஅவையில் பல நிலைகளில் பயணம் செய்த நமது கர்தினால் அவர்கள் இப்பொழுது இறைவனின் கரங்களில் தவழ விண்ணக பயணம் சென்றுள்ளார்.

ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி சார்பாக கர்தினால் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.


-அருள்பணி வி.ஜான்சன் SdC
https://www.rvasia.org/asian-news/indian-cardinal-telesphore-toppo-passes-away