இறைவனால் வழிநடத்தப்படத் தன்னை அனுமதித்தவர் வணக்கத்திற்குரியவரான தக்குயிஸ்தோ

மார்ச் 22, சனிக்கிழமை நேபிள்சில் உள்ள தூய கிளாரா பேராலயத்தில் இறைஊழியர் Salvo D'Acquisto அவர்கள் (புனிதர் பட்ட நிலையின் இரண்டாம் நிலை) வணக்கத்திற்குரியவர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றிய புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ கூறினார்.இயேசுவைப் போல பிறருக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தவர் வணக்கத்திற்குரிய சால்வோ தக்குயிஸ்தோ என்றும், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” (லூக்கா 23:42) என்ற இறைவார்த்தைகளைத் தனது உள்ளத்தில் கேட்டு, உயிரைக் கையளித்த அவர், பேரின்ப வீட்டில் இயேசுவோடு இருப்பார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் மர்செல்லோ செமராரோ.
சால்வோ தக்குயிஸ்தோ அவர்களின் மூன்று இளமைத்துவம் என்ற தலைப்பின் கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்த கர்தினால் செமராரோ அவர்கள், தனது குடும்பத்தில், இராணுவத்தில், மக்களுக்கானப் பணியில், மூன்றாவதாக அவரது வீரத்துவம் நிறைந்த மரணத்தில், இறைவனின் திருவுளத்தில் நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்தவர் என்று சுட்டிக்காட்டி அவர் போல வாழ்ந்திடவும் வலியுறுத்தினார்.
நல்ல கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த வணக்கத்திற்குரியவரான சால்வோ தக்குயிஸ்தோ அவர்கள், வாழ்க்கையின் கடமைகளை எவ்வாறு கையாள்வது என்பதைத் தனது குடும்பத்தில் இருந்து கற்றுக்கொண்டார் என்றும், தனது பத்தொன்பதாவது வயது முதல் இறுதி நாள் வரை தந்தைக்குரிய அன்போடு, மனித சமூகத்திற்கான பணியில் இராணுவத்தில் வாழ்ந்து, உயிர் துறந்தவர் என்றும் கர்தினால் செமராரோ எடுத்துரைத்தார்.
தக்குயிஸ்தோ அவர்கள், நேர்மையுடனும், அர்ப்பண மனநிலையுடன் பணியாற்றுவதைக் தனது தந்தையிடமிருந்தும், அடுத்தவரை அன்பு செய்யவேண்டும் என்பதைத் தனது தாயிடமிருந்தும் கற்றுக்கொண்டார் என்றும், இருவரிடமிருந்தும் இறைத்திருவுளத்தில் நம்பிக்கைக்கொண்டு வாழ்வதைக் கற்றுக்கொண்டார் என்றும் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இறைவனால் வழிநடத்தப்படத் தன்னை அனுமதித்த வணக்கத்திற்குரியவரான தக்குயிஸ்தோ அவர்கள், தனது 19-வது வயதில் இராணுவத்தில் சேர்ந்து, மக்கள் பணிக்காக உழைக்கத் தன்னை அர்ப்பணித்தார் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
இராணுவ வாழ்க்கையும் போர்களும் சால்வோ தக்குயிஸ்தோ அவர்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை, மாறாக, தீவிரமாகவும் மாண்போடும் வாழ வழிவகுத்தன என்றும் தனது கடமைகளை அறிவாற்றல், விவேகம் மற்றும் மிகுந்த மனிதாபிமானத்துடன் செய்தார் என்றும், தனது நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை மற்றும் பக்திமுயற்சிகளில் கலந்துகொள்வதன் வழியாக உடன் பணியாற்றுபவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
எதிரிப் படைகளின் மூன்று துப்பாக்கிக் குண்டுகளால் தனது உடல் துளைக்கப்பட்டு உயிரிழந்த சால்வோ தக்குயிஸ்தோ அவர்கள், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்று இயேசு நல்ல கள்வனுக்குக் கூறிய வார்த்தைகளைத் தானும் கேட்டு தனது உயிரை மக்களுக்காகக் கையளித்தவர், தற்போது பேரின்ப வீட்டில் இயேசுவோடு இருப்பார் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.
Daily Program
