திருமணம் “ஒரு இலட்சியமல்ல; ஆண்-பெண் இடையிலான உண்மையான அன்பின் அளவுகோல்”! | Veritas Tamil

2025 ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை, குடும்பங்கள், குழந்தைகள், மூத்தோர் மற்றும் முதியோருக்கான யூபிலி திருவிழாவுக்காக திரண்டிருந்த மக்களிடம், புனித பீட்டர் சதுக்கத்தில்  திருத்தந்தை புன்னகையுடன் காட்சியளித்தார்.

திருமணம் “ஒரு இலட்சியமல்ல; ஆண் மற்றும் பெண் இடையிலான உண்மையான அன்பின் அளவுகோல்” என்றும், குடும்பங்கள் “மனிதகுலத்தின் எதிர்காலத்தின் தாலாட்டு” என்றும் போப் பதினான்காம்  லியோ அறிவித்தார். 2025 நம்பிக்கையின் யூபிலி ஆண்டின் ஒரு பகுதியாக, குடும்பங்கள், குழந்தைகள், மூத்தோர் மற்றும் முதியோருக்கான யூபிலி திருவிழாவை முன்னிட்டு, புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருப்பலி கொண்டாடியபோது அவர் இதை வலியுறுத்தினார்.

ரோமில் சூரியஒளி பொழிந்த காலை நேரத்தில், சுமார் 120 நாடுகளிலிருந்து வந்த குடும்பங்களை நோக்கி உரையாற்றிய திருத்தந்தை, கடைசி இரவுணவின் போது இயேசு செய்த ஜெபத்தை அடிப்படையாகக் கொண்டு, கடவுளின் மீட்புத் திட்டத்தில் குடும்ப உறவுகளின் அடிப்படைப் பங்கை வலியுறுத்தினார்.

 “பிறந்த உடனேயே நாம் வாழ பிறரின் உதவி தேவைப்பட்டது; தனியாக விட்டிருந்தால் நாம் உயிர்வாழ முடியாது. உடலும் ஆன்மாவும் கவனித்து ஒருவர் நம்மை காத்தார். மனித அன்பும் பரஸ்பர அக்கறையும் கொண்ட, சுதந்திரமும் விடுதலையும் தரும் உறவினால் தான் நாம் அனைவரும் இன்று உயிருடன் இருக்கிறோம்.”

திருப்பலிக்கு முன், போப்புமொபைலில் புனித பீட்டர் சதுக்கத்தைச் சுற்றி வந்த திருத்தந்தை, குழந்தைகளை ஆசீர்வதித்து, இந்த முக்கியமான யூபிலி நிகழ்விற்காக ரோமுக்குப் பயணித்த குடும்பங்களை வாழ்த்தினார்.

உண்மையான அன்பின் அளவுகோலாக திருமணம்

 திருமணம் “ஒரு இலட்சியமல்ல; ஆண்-பெண் இடையிலான உண்மையான அன்பின் அளவுகோல்; முழுமையானதும், நம்பிக்கையுடனும், கனிவூட்டும் (பழம் தரும்) அன்பு” என  திருத்தந்தை வலியுறுத்தினார். 1968 ஆம் ஆண்டு வெளியான போப் பால் VI அவர்களின் Humanae Vitae எனும் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி, தாம்பத்திய அன்பு “உங்களை ஒரே மாம்சமாக மாற்றி, கடவுளின் உருவில் உயிரின் வரத்தை வழங்கச் செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

இன்றைய உலகுக்கான முன்மாதிரிகளாக பல திருமண தம்பதிகளை அவர் எடுத்துக்காட்டினார். அதில், குழந்தை இயேசுவின் திரேசாவின் பெற்றோர்களான புனித லூயி மற்றும் புனித செலீ மார்ட்டின் ஆகியோரும் அடங்குவர். மேலும், இரண்டாம் உலகப் போரின்போது “அன்பிலும் மறைச்சாட்சியிலும் ஒன்றுபட்ட” போலந்தைச் சேர்ந்த உல்மா குடும்பத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“திருமண வாழ்வின் சிறந்த சாட்சிகளாக இவர்களை முன்வைப்பதன் மூலம், கடவுளின் அன்பை அறிந்து ஏற்றுக்கொள்ளவும், உறவுகளையும் சமூகங்களையும் சிதைக்கும் சக்திகளை அதன் ஒன்றுபடுத்தும், சமரசப்படுத்தும் வல்லமையால் தோற்கடிக்கவும், இன்றைய உலகிற்கு திருமண உடன்படிக்கை அவசியம் என்பதை திருச்சபை அறிவிக்கிறது,” என்று திருத்தந்தை கூறினார்.

 

குடும்பங்களுக்கு நடைமுறை அறிவுரைகள்

இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்த பல தலைமுறைகளுக்குப் திருத்தந்தை குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கினார்.
பெற்றோரிடம், “உங்கள் பிள்ளைகளுக்குத் தூய்மையின் முன்மாதிரியாக இருங்கள்; அவர்கள் நடக்க வேண்டியபடி நீங்களே நடந்து காட்டுங்கள்; கீழ்ப்படிதலின் மூலம் சுதந்திரத்தில் அவர்களை கல்வி கற்பியுங்கள்; அவர்களில் உள்ள நன்மையை எப்போதும் கண்டு, அதை வளர்க்கும் வழிகளைத் தேடுங்கள்” என்று அவர் அறிவுறுத்தினார்.

குழந்தைகளுக்கு, “உங்கள் பெற்றோருக்கு நன்றியுணர்வைக் காட்டுங்கள்” என்று கூறிய திருத்தந்தை, “ஒவ்வொரு நாளும் ‘நன்றி’ என்று சொல்வதே தந்தையையும் தாயையும் மதிக்கும் முதல் வழி” என குறிப்பிட்டார்.

மூத்தோர்களுக்கும் முதியோருக்கும், “வயதுடன் வரும் பணிவும் பொறுமையும் கொண்டு, ஞானத்துடனும் கருணையுடனும் உங்கள் அன்பினரை கவனியுங்கள்” என்று அவர் பரிந்துரைத்தார்.

குடும்பத்தின் வழியாக நம்பிக்கை பரம்பரைப் பரம்பரையாக கடத்தப்படுகிறது என்பதை வலியுறுத்திய போப், “குடும்பத்தில், வாழ்க்கையுடன் சேர்ந்து நம்பிக்கையும் பரிமாறப்படுகிறது. அது குடும்ப மேசையில் பகிரப்படும் உணவைப் போலவும், நம் இதயங்களில் இருக்கும் அன்பைப் போலவும் பகிரப்படுகிறது” என்றார்.

உலக அமைதிக்கான ஜெபம்

திருப்பலிக்குப் பின், போப் லியோ XIV ரெஜினா கோயிலி ஜெபத்தை வழிநடத்தி, போர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களை நினைவுகூர்ந்தார்.

“தூய கன்னி மரியா குடும்பங்களை ஆசீர்வதித்து, அவர்களின் சிரமங்களில் அவர்களைத் தாங்கட்டும். குறிப்பாக மத்திய கிழக்கு, உக்ரைன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் போர்களால் பாதிக்கப்படுபவர்களை நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், 1945 ஆம் ஆண்டு சோவியத் படையினரால் கொல்லப்பட்ட, புனித கேத்தரின் கன்னி மற்றும் மறைச்சாட்சியின் சபையைச் சேர்ந்த ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்தோஃபோரா க்லோம்‌ஃபாஸ் மற்றும் அவருடன் இருந்த 14 துறவியரின் மகிமைப்படுத்துதலையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரான வெறுப்பும் அச்சமும் நிறைந்த சூழலிலும், அவர்கள் நோயாளிகளையும்  சேவிப்பதைத் தொடர்ந்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றைய கொண்டாட்டத்தில் பல குழந்தைகளை வரவேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் தனிப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போப், அவர்களை “புதிய நம்பிக்கையின் ஊற்றுகள்” என்று அழைத்தார். மூத்தோர்களையும் முதியோரையும், “இளம் தலைமுறைகளுக்கான உண்மையான நம்பிக்கையின் மாதிரிகளும் ஊக்கமளிப்பவர்களும்” என்று அவர் புகழ்ந்தார்.

இந்த செய்தி, 2025 ஜூன் 1, ஞாயிற்றுக்கிழமை, புனித லூயி மற்றும் புனித செலீ மார்ட்டின் குறித்த விவரங்களும் இணைப்பும் திருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டது