கோடையின் குதூகலம்! | பகுதி-1 | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

அன்பு மாணவச் செல்வங்களே, பள்ளி மணிச்சத்தம் ஓய்ந்து, அதிகாலை அவசரங்கள் இன்றி, வீட்டுப்பாடம் என்ற சுமையைத் தூக்கி எறிந்துவிட்டு, நீண்ட பகல் பொழுதுகளை உங்கள் விருப்பப்படி கழிக்கக் காத்திருக்கும் இந்தக் கோடைக் காலம் ஒரு மந்திர மாயக் கண்ணாடி போன்றது. இந்தக் கோடை விடுமுறை என்பது வெறும் 'பள்ளிக்குச் செல்லாத நாள்கள் மட்டுமல்ல, உங்கள் ஆளுமையை வடிவமைக்கும் மனத்திற்குப் புத்துயிர் அளிக்கும் மிக முக்கியமான ஒரு காலகட்டமாகும். உங்கள்

மனதிற்கு ஒரு 'ரீசெட்' (Reset) பொத்தான்!

கடந்த ஒன்பது மாதங்களாகத் தேர்வுகள், வகுப்பறைப் போட்டிகள், அதிகாலை எழுதல் என உங்கள் மூளை இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்தது. அமெரிக்க உளவியல் சங்கத்தின் (APA) ஆய்வின்படி, ஒன்பது வயது சிறுவர்கள் கூட பள்ளிப் பாடங்களின் காரணமாக அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஓர் இயந்திரம் தொடர்ந்து ஓடினால் சூடாவது போல, உங்கள் மனமும் ஓய்வின்றி இயங்கினால் சோர்வடைந்துவிடும்.

இந்தக் கோடை விடுமுறை உங்கள் மனத்திற்கு ஒரு 'ரீசெட்" பொத்தானாகச் செயல்படுகிறது. இலக்குகளற்ற விளையாட்டுகள், கற்பனை உலகைச் சுற்றும் கனவுகள் ஆகியவற்றிற்கு இடமளிக்கும் போது, உங்கள் மூளை மீண்டும் புத்துணர்வு பெறுகிறது. இந்த மன அமைதி என்பது வீணான நேரமல்ல; மாறாக, வருங்காலக் கற்றலுக்கு உங்கள் மூளையைத் தயார்படுத்தும் ஒரு முதலீடாகும்.

இயற்கையோடு இயைந்த விளையாட்டு

இன்றைய மின்னணு உலகில் திரைகளுக்கு முன்னால் நாம் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. ஆனால், கோடை என்பது வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதற்கான காலமல்ல. மிதிவண்டி ஓட்டுதல், மலையேற்றம், நீச்சல் போன்ற வெளிப்புறச் செயல்பாடுகள் உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் D சத்தை வழங்குவதோடு. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றன. இன்றைய சூழலில், மிகக் குறைந்த விழுக்காடு சிறுவர்களே போதிய உடற்பயிற்சி செய்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரத்தை மாற்றவும், உடல் பகுமன் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவும் இந்த விடுமுறை உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகும்.
கோடையின் குதூகுலம்; குறையாது மனநலம்!


குடும்ப உறவுகளின் சங்கமம்

பள்ளி நாள்களில் உங்கள் பெற்றோரோடு திநானமாகப் போக கூட நேரம் கிடைப்பதில்லை அல்லவா? இந்தக் கோடை விடுமுறை அந்தக் குறையை நீக்கப் போகிறது. பெற்றோருடன் சேர்ந்து சமைப்பது. பூங்காவிற்குச் செல்வது அல்லது ஒரு நீண்ட பயணம் மேற்கொள்வது போன்ற தருணங்கள் உங்கள் குடும்ப உறவைப் பலப்படுத்தும் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, வலுவான குடும்ப உறவுகள் கொண்ட குழந்தைகள் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறனையும், - அதிக தன்னம்பிக்கையையும் பெறுகிறார்கள்.