கிறிஸ்துவைப் போல் வாழ இளைஞர்களுக்கு அழைப்பு! | Veritas tamil

 

அர்ஜென்டினா நாட்டின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற இளைஞர்களுடனான திருவிழிப்பு இறைவேண்டல் நிகழ்வில், இளைஞர்கள் அனைவரும் கிறிஸ்துவை நோக்கி, அவரோடு இணைந்து, அவரைப் போன்று வாழ வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்துள்ளார்.

நவம்பர் 10, செவ்வாய்க்கிழமையன்று, அர்ஜென்டினாவிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, புவனஸ் அயர்ஸ் நகரிலுள்ள “ஸ்பானியர் நினைவுச் சின்னம்” பகுதியில் நடைபெற்ற இளைஞர்களுடனான திருவிழிப்பு இறைவேண்டல் வழிபாட்டில் திருத்தந்தை பங்கேற்று உரையாற்றினார்.

தமது உரையில், இயேசு கூறிய “மண்ணுலகில் தீ மூட்டவே நான் வந்தேன்” (லூக்கா 12:49) என்ற விவிலிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை, மெழுகுதிரியின் சுடர் கிறிஸ்துவின் அன்பையும், தூய ஆவியாரின் செயல்பாட்டையும் நமக்கு நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார். இந்த அன்பின் நெருப்பு மனித இதயங்களைத் தூய்மைப்படுத்தி, பிறரிடம் அன்பு செலுத்தும் ஆற்றலை வழங்குகிறது என்றும் எடுத்துரைத்தார்.

தானியேல் இறைவாக்கினர் நூலில் இடம்பெறும் அனனியா, அசரியா, மிசாவேல் ஆகிய மூன்று இளைஞர்களின் துணிவை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நெருப்புச் சூளையில் தள்ளப்படும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், சிலைவழிபாட்டிற்கு அடிபணியாமல் இறைவனுக்கு மட்டுமே உண்மையாக இருந்த அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டினார். அதேபோன்று, இன்றைய இளைஞர்களும் பணம், புகழ், வெளித்தோற்றம், கட்டுப்பாடற்ற இன்ப நாட்டம் போன்றவற்றை வாழ்வின் இலக்குகளாகக் கருதாமல், தங்களுக்குக் கிடைத்துள்ள இறைமக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திய “அனைவரும், அனைவரும், அனைவரும்!” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, கிறிஸ்தவ வாழ்விற்கான மூன்று முக்கிய அழைப்புகளையும் திருத்தந்தை முன்வைத்தார்.

கிறிஸ்துவை நோக்கி வாழுங்கள்: ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பின்னணி, கேள்விகள், காயங்கள் எதுவாக இருந்தாலும், திருஅவையில் அவர்களுக்கு ஓர் இடம் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வாழ்வில் அனைத்தும் சரியாகும் வரை கிறிஸ்துவை நெருங்குவதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை என்றார். சக்கேயுவைத் தேடிச் சென்ற இயேசுவைப் போல, ஒவ்வொருவரையும் கிறிஸ்து அன்புடன் தேடி வருகிறார் என்றும், இறைவனைத் தேடுவோரையும் துன்புறுவோரையும் திருஅவை சமூகங்கள் அன்புடன் அரவணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்துவோடு இணைந்து வாழுங்கள்: நெருப்புச் சூளையில் இருந்த மூன்று இளைஞர்களைக் கடவுள் கைவிடாமல் பாதுகாத்ததை நினைவுபடுத்திய திருத்தந்தை, மனிதர்களின் துன்பங்களிலும் கிறிஸ்து உடனிருந்து அவர்களை விடுதலை செய்கிறார் என்று எடுத்துரைத்தார். இறைவனின் இரக்கத்தைப் பெற ஒப்புரவு அருளடையாளத்தை அணுகவும், இறைவேண்டல் செய்யவும், நற்செய்தியை வாசிக்கவும், நற்கருணை ஆண்டவரை நெருங்கிச் செல்லவும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்துவைப் போன்று வாழுங்கள்: இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்வை நினைவுகூர்ந்த திருத்தந்தை, பிறருக்குச் சேவை செய்வதன் வழியாகப் புனித வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்றார். பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல், வீடற்றவர்களுக்கு இல்லத்தின் கதவுகளைத் திறத்தல், நோயுற்றோரைச் சந்தித்தல், துன்புறுவோருக்கு ஆறுதல் அளித்தல் போன்ற இரக்கச் செயல்களின் வழியாக நற்செய்தியை வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், கிறிஸ்துவுடனான நட்பிலிருந்தே உண்மையான மகிழ்ச்சி பிறக்கிறது என்றும், அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இளைஞர்கள் தங்கள் நகரங்கள், ஊர்கள் மற்றும் சமூகங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். குறிப்பாக, இறைவனிடமிருந்து தூரமாக இருப்பதாக உணர்வோரிடம் சென்று, கிறிஸ்து அவர்களையும் அன்புடன் தேடி வருகிறார் என்பதைத் தங்களின் வாழ்வின் வழியாக எடுத்துக்காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிறைவாக, கிறிஸ்துவின் அன்பு என்னும் நெருப்பு ஒரு இதயத்திலிருந்து மற்றொரு இதயத்திற்குப் பரவட்டும் என்று வாழ்த்திய திருத்தந்தை, லூஜான் அன்னை மரியாவின் பரிந்துரையையும் வேண்டுதலையும் இளைஞர்களுக்காகக் கேட்டார்.

“அனைவரும் கிறிஸ்துவை நோக்கி, அனைவரும் கிறிஸ்துவோடு, அனைவரும் கிறிஸ்துவைப் போன்று!” என்ற மையச் செய்தியை வலியுறுத்திய திருத்தந்தை, இளைஞர்கள் அனைவரும் சென்று நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற அழைப்புடன் தமது உரையை நிறைவு செய்தார்.

Tamil Survey Popup Image