இயற்கைப் பாதுகாப்பில் மதங்கள் ஒன்றிணைவு! | Veritas tamil

இந்தியாவின் கோவா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிலார் (Pilar) நகரில், நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற சமயங்களுக்கிடையேயான கலந்துரையாடலில், இயற்கைப் படைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு குறித்த தத்தமது சமய மரபுகளின் புரிதல்களை இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர்.

பிலார் சபையின் ஒருமைப்பாட்டு மன்றம் (Solidarity Forum of the Society of Pilar), சத்பாவ் (Sadbhav) மற்றும் இந்தியத் துறவறச் சபைகளின் கூட்டமைப்பின் (Conference of Religious India – CRI) கோவா மற்றும் டாமன் பிரிவுகளுடன் இணைந்து, பிலார் குருமடத்தில் அமைந்துள்ள அருளாளர் ஆல்பர்ட் அரங்கில் (Br Albert Hall) “சம்வாத் – இறையியல் பரிமாற்றத்திற்கான உரையாடல்” என்ற நிகழ்வை ஏற்பாடு செய்தது.

புனிதர் பட்டமளிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பிலார் சபையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய ஆக்னெலோ தெ சௌசா (Venerable Agnelo De’ Souza) அவர்களின் 99ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நவநாள் செபத்தின் முதல் நாளாக இந்நிகழ்வு அமைந்தது.

“படைப்பின் இறையியல், அதைப் பாதுகாக்கும் பொறுப்பு மற்றும் மனிதரின் கடமை” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இயற்கையுடனான மனிதகுலத்தின் உறவு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அனைவருக்கும் உள்ள பொதுவான பொறுப்பு ஆகியவை குறித்து மூன்று சமயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில், பொண்டா (Ponda) தாபோபூமியில் அமைந்துள்ள சுவாமி பிரம்மானந்த மகாவித்யாலயாவின் சமஸ்கிருதத் துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் சூர்யகாந்த் கவுடே (Satish Suryakant Gaude), கோர்டாலிமில் (Cortalim) அமைந்துள்ள மசூதி மெஹ்பூப் இ சுபானியின் இமாம் ஹபீஸ் அபுல் கலாம் கான் (Hafeez Abul Kalam Khan), சங்குவேமில் (Sanguem) அமைந்துள்ள மிராக்கிள்ஸ் உயர்நிலைப் பள்ளியின் மேலாளர் அருள்தந்தை மேத்தேயுஸ் பெர்னாண்டஸ் SFX ஆகியோர் பங்கேற்றனர். சத்பாவ் அமைப்பின் மையக் குழு உறுப்பினரான முனைவர் ஐடா ரோஸ் மில்லர் முகர்ஜி (Dr Ida Rose Miller Mukherjee) இக்கலந்துரையாடலை வழிநடத்தினார்.

இந்து சமயத்தின் பார்வை

இந்து சமயத்தின் சார்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் கவுடே, நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐந்து கூறுகளைக் குறிக்கும் பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உயிர்கள் வாழ்வதற்கு இவ்வைந்து கூறுகளும் அடிப்படையாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், மனிதர்கள் இயற்கைப் படைப்பிலிருந்து பிரிக்க முடியாதவர்கள் என்றும், தொழில்நுட்பத் தீர்வுகளை மட்டுமே சார்ந்திருக்காமல் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார். மேலும், பிரம்மா மற்றும் விஷ்ணு தொடர்பான இந்து சமய மரபுகளைக் குறிப்பிட்ட அவர், படைத்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று துணையான அடிப்படைக் கோட்பாடுகள் என்பதை விளக்கினார்.

இஸ்லாமிய சமயத்தின் பார்வை

இஸ்லாமிய சமயத்தின் சார்பில் உரையாற்றிய பேராசிரியர் கான், பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தமானது என்றும், அதைப் பராமரிக்கும் பொறுப்பு மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

குறிப்பாக, திருக்குர்ஆனின் அல்-பகரா (2:30) அதிகாரத்தில் இடம்பெறும் கலீஃபா (Khalifa) என்ற கருத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பூமியில் மனிதர்கள் இறைவனால் ஒப்படைக்கப்பட்ட பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டும் என்றார். இந்தப் பொறுப்பு இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு இடமளிப்பதில்லை என்றும் விளக்கினார்.

மேலும், திருக்குர்ஆனின் அர்-ரூம் (30:41) அதிகாரத்தை மேற்கோள்காட்டி, சுற்றுச்சூழல் அழிவுக்கும் மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் இடையிலுள்ள தொடர்பை எடுத்துரைத்தார். மாசுபாடு, காடுகளை அழித்தல் மற்றும் இயற்கை வளங்களைப் பொறுப்பின்றிப் பயன்படுத்துதல் போன்றவை அனைவரும் இணைந்து கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் என்று குறிப்பிட்டார். அன்றாட வாழ்வில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது போன்ற சிறிய செயல்களும் இம்முயற்சியில் முக்கியமானவை என்று வலியுறுத்தினார்.

கிறிஸ்தவ சமயத்தின் பார்வை

கிறிஸ்தவ சமயத்தின் சார்பில் உரையாற்றிய அருள்தந்தை மேத்தேயுஸ் பெர்னாண்டஸ், இயற்கைப் படைப்பு இறைவன் மனிதகுலத்திற்கு வழங்கிய கொடை என்றும், அதனைப் பொறுப்புணர்வுடன் பராமரிக்கும் கடமை மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'லவுதாத்தோ சி' (Laudato Si') திருமடலை மேற்கோள்காட்டிய அவர், மனித வாழ்வுக்கும் இயற்கைச் சூழலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் அழிவால் ஏழைகளும் நலிவுற்ற மக்களுமே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மரங்களைப் பாதுகாத்தல், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், உணவை வீணாக்குவதைத் தவிர்த்தல் போன்ற நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளிகள், பங்குத்தளங்கள் மற்றும் துறவறச் சமூகங்கள் வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அறிவியல், அரசியல், இறையியல் ஆகியவற்றின் பங்களிப்பு

நிறைவுரையாற்றிய முனைவர் முகர்ஜி, சுற்றுச்சூழல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அறிவியல், அரசியல் மற்றும் இறையியல் ஆகிய துறைகளின் பங்களிப்புகள் ஒன்றுக்கொன்று துணையாக அமைகின்றன என்று எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் நெருக்கடியை அறிவியல் விளக்குகிறது; அதற்கான தீர்வுகளை உருவாக்குவதில் அரசியல் பங்காற்றுகிறது; ஆனால், இயற்கைப் படைப்பைப் பாதுகாக்க வேண்டியதன் காரணத்தை இறையியல் மனிதகுலத்திற்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

பல்வேறு சமயங்களின் பார்வைகளை அறிந்துகொள்ளக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பங்கேற்பாளர்கள் வரவேற்றனர். தத்துவப் பயிலும் மாணவர் அருட்சகோதரர் ஸ்டீபன் CSSR மற்றும் பழைய கோவாவில் உள்ள இன்ஸ்டிடியூட் மேட்டர் தேய் (Institute Mater Dei) கல்வி நிறுவனத்தில் பயிலும் அருட்சகோதரி செல்வி FMM ஆகியோர் இச்சந்திப்பு தங்களுக்குப் புதிய புரிதலையும் வளமான அனுபவத்தையும் வழங்கியதாகத் தெரிவித்தனர்.

அருள்தந்தை வாலண்டைன் அல்போன்சோ SAC அவர்கள், சமயங்களுக்கிடையேயான சந்திப்புகள் இறையியல் கற்றலை நடைமுறை வாழ்வில் வெளிப்படும் பரிவாக மாற்ற உதவுகின்றன என்று கூறினார். மேலும், இத்தகைய சந்திப்புகள் முன்முடிவுகளையும் தப்பெண்ணங்களையும் களைந்து, குருமாணவர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் மக்களிடையே பாலங்களைக் கட்டுபவர்களாக உருவாக உதவுகின்றன என்றும் தெரிவித்தார். ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் இத்தகைய முயற்சிகள் அடிக்கடி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் பிலார் சபையின் சத்பாவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை எல்விஸ் பெர்னாண்டஸ் SFX வரவேற்றார். அருட்சகோதரர் அகஸ்டின் கோயல்ஹோ நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை ஜிஷா பொன்னச்சன் தொகுத்து வழங்கினார்.

Tamil Survey Popup Image