விக்கலும் காரணமும். | Veritas Tamil

 விக்கல்

பதினான்கு வேகங்களுள் (ஏப்பம், வாயு, அபான வாயு, தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், இருமல், பெருமூச்சு, தூக்கம், வாந்தி, கண்ணீர், விந்து, மூச்சு) விக்கலும் ஒன்று. சித்த மருத்துவம் விக்கல் ஏற்படுவதை ஒரு தனி நோயாகக் குறிப்பிடுகிறது.

விக்கல் ஏற்படக் காரணம்

செரியாமை

அவசர அவசரமாகக் கெட்டியான உணவுப் பொருள்களை உண்பது.

வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே உள்ள உதரவிதானத்தில் ஏற்படும் பிரச்சினை. அதிகக் காரம், அதிக இனிப்பு, மாவுச்சத்து மிகுந்துள்ள உணவு வகைகளை உண்பது.வயிற்றில் அளவுக்கு அதிக வாயு சேர்ந்து இருந்தாலும், வயிறு புண்ணாகி இருந்தாலும், விக்கல் தோன்றும்.

மருத்துவம்

விக்கல் வரும் சமயத்தில், அந்த ஆளுடைய கவனத்தைத் திடீரென வேறு ஒரு விடயத்தில் திசை திருப்பினால், விக்கல் நிற்கும் என்பது வழக்கு.

விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக்காற்றை உள்ளிருத்திப் பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் விக்கலைப் போக்கலாம்.

மூக்கு மற்றும் வாயை, கையால் அடைத்துக் கொண்டு, முடிந்தளவு மூச்சை அடக்கி வைத்திருந்து வெளியிட, விக்கல் உடனே நிற்கும்.

துளசி இலையை வாயிலிட்டு மென்று விழுங்க, விக்கல் தணியும்

தாமரைக் கொட்டையை உடைத்து, அதன் உள்ளே இருக்கும் பருப்பைத் தூள் செய்து, அரைக் கரண்டி எடுத்து, தேனில் கலந்துண்ண, விக்கல் தீரும்.


 சிறிது பெருங்காயத்தைப் பொரித்து, தூள் செய்து, ஒரு கிராம் எடுத்து, மோர் அல்லது தண்ணீரில் அருந்தலாம்.

ஏலரிசியினைத் தூள் செய்து, இரண்டு சிட்டிகை எடுத்து, வெற்றிலையில் வைத்து, மென்று சாப்பிட, விக்கல் தணியும்.

ஒரு ஏலக்காயுடன் சர்க்கரை சேர்த்து மென்று விழுங்க, விக்கல் தீரும்.

ஒரு அவுன்ஸ் சுக்கு எடுத்து, தோல் நீக்கி, பொடி செய்து கொள்ளவும். அதனுடன் ஓர் அச்சு வெல்லம் சேர்த்து, நன்கு அம்மியில் அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, வாயிலிட்டுச் சுவைத்து உமிழ்நீரைச் சிறிது சிறிதாக அருந்த விக்கல் தணியும்.

விக்கலுக்கு மயிலிறகு சூரணம்

"எட்டுத் திப்பிலி யீரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண விக்கலும் விட்டுப் போகும் விடாவிடிற் போத்தகம் சுட்டுப் போடுநான் தேரனு மல்லனே".

தேரையர் சித்தர்

திப்பிலி 8 கிராம், சீரகம் 10 கிராம் எடுத்து, தனித் தனியே வறுத்து, சேர்த்து சூரணித்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து, தேன் கலந்துண்ண, விக்கல் தீரும். தீராவிடில் இதனுடன் மயிலிறகினைக் கருக்கிய பொடி இரண்டு சிட்டிகை சேர்த்து, தேன் கலந்துண்ண, எப்படிப்பட்ட விக்கலும் முழுமையாகக் குணமாகும் என்று தேரையர் சித்தர் கூறுகிறார்.

பெரியவர்கள் சிலர் தொடர் விக்கல், ஏப்பத்தினால் உடல் சோர்வுற்று பெரும் வேதனைப்படுவர். அவர்களுக்கு இந்தச் சூரணம் மிகுந்த பயனளிக்கும்.