உலகம் முழுவதும் வலம் வரும் ”பிளாஸ்டிக் ஒடிஸி” கப்பல் | Veritas Tamil

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பை, பாட்டில் என்று இல்லாமல் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட பிளாஸ்டிக் சென்றுவிட்டது. இதனை தவிர்க்க, மாசுகளை குறைக்க பல்வேறு முன்னெடுப்புகள் நடந்து வந்தாலும் மறுபுறம் இதன் பயன்பாடு குறைவதில்லை.
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ”மிதக்கும் ஆய்வக கப்பல்” ஒன்று வலம் வருகிறது. பிளாஸ்டிக் ஒடிஸி என்ற அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
"பிளாஸ்டிக் ஒடிஸி" (Plastic Odyssey) என்ற 40 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் ஆய்வக கப்பல், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்து உலகம் முழுவதும் அதற்கான தீர்வை கண்டறிய மூன்று ஆண்டுகள் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த உலகளாவிய பயணத்தை அக்டோபர் 1 2022 ஆண்டு பிரான்சின் தெற்கில் உள்ள மார்சேயில் இருந்து தொடங்கியது. இந்தக் கப்பல் உலகம் முழுவதும் பயணம் செய்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை எப்படி பயனுள்ள வகையில் மாற்று பொருள்களாக வடிவமைக்க முடியும், பிளாஸ்டிகிற்கு மாற்று பொருட்கள் என்ன என்று உள்ளூர் மக்களிடம் காண்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இதுவரை 30 நாடுகள் பயணம் செய்த இந்த கப்பல் ஷாங்காங், தைவான், வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் மாற்று பொருள் குறித்தும் பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தனது 31வது பயணத்தை மேற்கொண்டுள்ள பிளாஸ்டிக் ஒடிஸி கப்பல் தற்போது சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மிதக்கும் ஆய்வக கப்பலின் உள்ளேயே பத்து இடங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்கின்றனர், பிளாஸ்டிக் கழிவுகளை முதலில் வகைப்படுத்துகின்றனர்.
இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக்கை துண்டாக்கின்றன. அதன் பின்னர் சுவிங்கம் போன்ற பேஸ்ட்களை உருக்கி அதனை ஒரு மாற்றுப் பொருளாக உருவாக்குகின்றனர். இவ்வாறு உருவாக்கிய சில பொருட்கள் அந்த கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளுக்கான ஓடு, தொட்டிகள், நாற்காலிகள் போன்ற கட்டுமான பொருட்களை இதன் மூலம் வடிவமைத்துள்ளனர்.
இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் வணிக கடற்கரை அதிகாரியான சைமன் கூறுகையில்,
இந்தியா பிரான்ஸை விட பத்து மடங்கு குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறது, அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் 7 கிலோ கிராம் வரை பயன்படுத்துவதாக கூறுகிறார்.ஒவ்வொரு நிமிடமும் குறைந்தது 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. இதில் 78% நிலம் மூலங்களிலிருந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களால், தூண்டப்பட்டு இந்த பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.
Daily Program
