காலநிலை மாற்றத்தால் பற்றியெரியும் ஹவாய் தீவு || Veritas Tamil

ஐக்கிய நாடுகளின் சபை 2022ம் ஆண்டு சுற்றுசூழலுக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் பல பகுதிகளில் காட்டுத்தீ  ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இதனால் இயற்கை மற்றும் சுற்றுசூழல் உடைமைகள் பல்லுயிர் மற்றும் மனித குலத்திற்கு மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று அந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் லஹைனா. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் காடுகளுக்கும் அழகிய தீவுகளுக்கும் பெயர் பெற்றது இந்த மாகாணம். ஆனால் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ம் தேதி ஏற்பட்ட காட்டு தீ பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுத்தீயின் விளைவாக சுமார்  2,200 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது,லஹைனா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 93 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்ததால்  சுமார் 13,000 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். 

ஹவாய் தீவின் வரலாற்றில் இந்த சம்பவம் மிகப்பெரிய இயற்கை பேரழிவாக மாறியுள்ளது. இதனால் ஏற்பட்ட விளைவுகளும் மிக மோசமாகவே உள்ளது. இருப்பினும் காட்டுத்தீ ஏற்பட என்ன காரணம் என்று இதுவரை சரியான காரணம் மர்மமாகவே இருக்கிறது.

இருப்பினும், பல காலநிலை விஞ்ஞானிகள்  மற்றும்  சூழலியல் வல்லுநர்கள் கூற்றுப்படி காட்டுத் தீ, அதிக அளவு  வெப்பநிலை, வறட்சி நிலைகள் மற்றும் டோரா சூறாவளியின் அதிவேகக் காற்று ஆகியவற்றால் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

உலகெங்கிலும் ஏற்படும் காட்டுத்தீ  பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது, அதில் மனித காரணிகள் முக்கியமானவை. அமெரிக்க வன துறையினரின் ஆய்வுகளின்படி , சுமார் 85 சதவீத காட்டுத் தீ அல்லது காட்டுத்தீ சம்பவங்கள் வேண்டுமென்றே மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன என்று கூறுகின்றனர்.

இந்த ஹவாய் தீவுக்கூட்டம் பல ஆண்டுகளாக குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பம் கொண்ட தீவாக மாறியுள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக இந்த பகுதியில் அதிக வறட்சி நிலவி வந்துள்ளது இதன் காரணமாக ஈரப்பதம் குறைந்து தீ ஏற்பட காரணமாகியுள்ளது.மேலும் அதிக வெப்பநிலை தொடர்வதால் தொடர்ந்து இந்த காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது

உலக அளவில் ஏற்படும் காலநிலை மாற்றம்  காரணமாக வளிமண்டலம் வெப்பமடைகிறது இதன் காரணமாக மழை பருவம் கடந்து பெய்கிறது அல்லது மழையே  இல்லாமல் போய்விடுகிறது.  உலகளவில், சூறாவளி, புயல்கள், வெப்ப அலைகள், வறட்சிகள், வெப்ப தீவுகள், மண் மலட்டுத்தன்மை, வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்ற நிகழ்வுகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை நம்முடைய செயல்களே உருவாக்குகின்றன.

இதன் விளைவாக, காலநிலை மாற்றத்தை மிகுந்த தீவிரத்துடன் கையாள்வதும், நிலையான பாதையை தீவிரமாகத் தழுவுவதற்கு தனிநபர்களை ஊக்குவிப்பதும், அதன் மூலம் எதிர்கால பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து  கட்டுப்படுத்துவது அவசியம். 

காட்டுத்தீயின் தாக்கத்தைத் தணிக்க, தடுப்பு, தயார்நிலை, பதில் மற்றும் மீட்பு உத்திகளை உள்ளடக்கிய பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது.

பெரும்பாலான காட்டுத்தீகள் மனித செயல்பாடுகளாலும் அவற்றுடன் தொடர்புடைய நடத்தைகளாலும் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, இதுபோன்ற பேரழிவுகளின் எதிர்மறையான விளைவுகள் குறித்து உள்ளூர் மக்களுக்கும் சமூகங்களுக்கும் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். 

இயற்கையை தொடர்ந்து பேணிகாத்திடும்போது நாம் வாழும் இந்த பூமி நலமாய் சுழலும்.

 

_அருள்பணி வி.ஜான்சன்

(Source from Down To Earth)