மனிதர் காண்பதை அல்ல, கடவுள் காண்பதை நோக்குவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 21ஆம் வாரம் -புதன்
26 ஆகஸ்ட் 2026
2 தெசலோ 3: 6-10, 16-18
மத்தேயு 23: 27-32
மனிதர் காண்பதை அல்ல, கடவுள் காண்பதை நோக்குவோம்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைமக்கள் ஒழுங்காகவும் பொறுப்புடனும் வாழ வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். குறிப்பாக, இறைமக்கள் எனப்படும் கிறிஸ்தவர்கள் சோம்பித்திரியாமல், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து உழைக்க வேண்டும் என்கிறார். மேலும், அவர்கள் பிறருடைய உழைப்பை மட்டும் சார்ந்து வாழாமல், தங்கள் கைகளால் உழைத்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
தொடர்ந்து, “வேலை செய்ய விரும்பாதவன் உணவு உண்ணவும் வேண்டாம்” என்ற கடுமையான அறிவுரை மூலம் உழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார் பவுல். அதே நேரத்தில், ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை எப்போதும் அருள வேண்டும் என்று பவுல் மன்றாடுவதோடு, அனைவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளில் நிலைத்திருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு நேற்றைய தொடர்ச்சியாக, மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் அவர்களின் வெளிவேடத்தின் நிமித்தம் கடுமையாகக் கண்டிக்கிறார்.
அவர்கள் வெளிப்புறத்தில் நல்லவர்களாகவும் நீதிமான்களாகவும் தோன்றினாலும், உள்ளத்தில் தூய்மை இல்லாமல் இருந்தார்கள். இயேசு அவர்களை வெளியில் அழகாகத் தோன்றும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பிடுகிறார். அவர்களின் வெளிப்புற வாழ்க்கை நன்றாகத் தெரிந்தாலும், உள்ளத்தில் பொய்மையும் அநீதியும் நிறைந்திருந்தது.
அவர்கள் இறந்த இறைவாக்கினர்களுக்காக நினைவுச் சின்னங்கள் கட்டி, முன்னோர்கைளப் போல் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்கிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்கள் தங்கள் முன்னோர்களின் செயல்களையே ஒத்திருந்தன என்கிறார் ஆண்டவர். இதன் மூலம், வெளிப்புற பக்தியைவிட உள்ளத்தின் தூய்மையும் உண்மையான நீதியான வாழ்க்கையும் முக்கியம் என்பதை இயேசு கற்றுக்கொடுத்ததை மத்தேயு இங்கே பதிவுச் செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் வலியுறுத்தியதைப்போல, நம்பிக்கை என்பது வார்த்தைகளில் மட்டும் அல்ல; பொறுப்புடன் உழைத்து, ஒழுங்காக வாழ்ந்து, பிறருக்கு சுமையாக இல்லாமல் இருப்பதிலும் வெளிப்பட வேண்டும் என்றதை நினைவில் கொள்ள வேண்டும்.
நற்செய்தயில், மூன்றாவது நாளாகத் தொடர்ந்து, மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் இயேசு கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதியை நாம் வாசிக்கிறோம். அவருடைய கண்டிப்பான வார்த்தைகள்—குறிப்பாக அவற்றை முதன்முதலில் கேட்டவர்களுக்கு—அதிர்ச்சியூட்டுவதாகத் தோன்றலாம். ஆனால் நாம் அவற்றைக் கேட்டு அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக, தாழ்மையுடனும் திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நமது சொந்த ஆன்மிகப் பயணத்திற்குப் பொருத்திப் பார்த்து, நம்முடைய வாழ்க்கையிலும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய வேண்டும். நாம் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பாக உள்ளோமா? என்ற கேள்வி நம்மில் எழ வேண்டும்.
நாம் வெளியில் நல்லவர்களாகத் தோன்றுவது மட்டும் போதாது. நமது உள்ளமும் தூய்மையாகவும், நமது செயல்கள் உண்மையாகவும் இருக்க வேண்டும். பாசாங்கைத் தவிர்த்து, கடவுளுக்கு முன்பாக நேர்மையாக வாழ வேண்டும்.
தமிழில் நல்லதொரு பழமொழி உண்டு. அது, ‘கெட்டிக்காரனின் பொய்யும் புழுகும் எட்டு நாளைக்கு’என்பதாகும். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போன்ற பொய் சொல்பவர்கள் கெட்டிக்காரத்தனமாகச் சொல்வார்கள். அதில் பெரிய திறமை பெற்றிருப்பார்கள்! ஆனால் ஒரு நாள் அவர்கள் சொன்ன பொய்கள் வெளியே தெரிந்துவிடும். கல்லறையில் அடித்த வெள்ளை சுண்ணாம்பு எப்போதும் அதில் ஒட்டிக்கொண்டிராது.
நன்கு கவனித்தால், மத்தேயு நற்செய்தியில் இயேசு அனைவருக்குமாக ஆற்றிய இறுதிப் போதனை இதுவே. அவர் மனதை உலுக்கும் ஓர் எச்சரிக்கையுடன் அவரது இநுத பொது படிப்பினையை முடிக்கிறார்.
காலம் கடந்துவிடுவதற்கு முன்பே மக்களின் (நமது) இதயங்களை விழிப்படையச் செய்வதே அவர் கூறிய இறுதி வார்த்தைகளின் நோக்கமாக இருந்தது. அது அன்பு விடுக்கும் இறுதி வேண்டுகோள்; வழிதவறிச் சென்ற தமது ஆடுகளுக்காகக் கதறி அழைக்கும் ஒரு மேய்ப்பனின் குரல். அவரது இக்குரல் இன்று நமது செவிகளில் விழுந்தால், அதை நாம் உணர்ந்தால் அவரது அருள் நம்மிலும் நிலவும்.
இறைவேண்டல்.
அன்பான ஆண்டவரே, என் இதயத்தைத் திறந்தருளும். என் ஆன்மாவுக்காக நீர் விடுக்கும் அழைப்பிற்கு பதிலளிக்கத் தேவையான அருளை எனக்கு வழங்கும். நான் என்னில் கொண்டுள்ள வெளிவேடத்தைக் களிந்து, ஒருபோதும் உம்மைவிட்டு விலகிச் செல்லாமல், எப்போதும் உமது அருளின் இறக்கைகளின் பாதுகாப்பில் உறுதியாக நிலைத்திருக்கச் செய்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452
