இயேசுவின் துணிச்சலான இறையாட்சிப்பணி! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

பொதுக்காலம், வாரம் 30 வியாழன்    மறையுரை 30.10.2025
மு.வா: உரோ: 8: 31b-39
ப.பா:  திபா 109: 21-22. 26-27. 30-31
ந.வா: லூக்: 13: 31-35

 இயேசுவின் துணிச்சலான இறையாட்சிப்பணி!

கிறிஸ்தவ வாழ்வு என்பது எளிதான வாழ்வு அல்ல; அது ஒரு சாட்சிய வாழ்வு. உண்மையாக இயேசுவுக்கு சாட்சியம் பகிர வேண்டுமெனில் துணிச்சல் வேண்டும். இயேசு செய்த மூன்றாண்டு இறையாட்சி பணிகளில் அவர் சந்திக்காத சவால்களும் துன்பங்களும் இடையூறுகளும் இல்லை.  ஆனால் அவர் எல்லாவற்றையும் துணிச்சலோடு செய்தார்.  

இன்றைய நற்செய்தியில்  "பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, 'இங்கிருந்து போய்விடும்;
ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்' என்று கூறினர்'' (லூக்கா 13:31). இதை கேட்ட இயேசு சற்றும் பயப்படாமல் துணிச்சலோடு தன் பணியை செய்தார்.  இயேசு சொன்ன பதில் "இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்" என்று கூறினார்.  இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் இயேசுவின் துணிச்சலை.  நாம் நற்செய்தி மதிப்பீட்டுகளின் படி வாழும் பொழுது ஏராளமான பிரச்சனைகள் வரும். அவதூறு பேச்சுக்களும் விமர்சனங்களும் இடையூறுகளும் தடைகளும் துன்பங்களும் சோதனைகளும் சவால்களும் நிச்சயமாக வரும்.  

இயேசு எவ்வாறு துணிச்சலோடு அவற்றை எதிர்கொண்டாரோ அதேபோல நாமும் எதிர்கொள்ள அழைக்கப்படுகிறோம். அதற்கு அடிப்படையாக தேவைப்படுவது ஆழமான ஜெப வாழ்வு.  இயேசு இறைமகனாக இருந்த போதிலும் ஜெப வாழ்வின் வழியாக தந்தையின் திட்டத்தை அறிந்து தன் வாழ்வை வாழ்ந்தார்.  எனவே தான் துணிச்சலோடு நற்செய்தியின் விழுமியங்களை  வாழ்வாக்க முடிந்தது. நம்முடைய  கிறிஸ்தவ பயணத்தில் வருகின்ற அனைத்து பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டுமானால் ஆழமாக இறைவனோடு ஜெபத்தின் வழியாக இணைந்திருக்க வேண்டும்.  

இரண்டாவதாக இயேசுவைப் போல நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும்.  இயேசு தன் மூன்றாண்டு இறையாட்சி பணியில் போதனைகளின் வழியாகவும் வல்ல செயல்களின் வழியாகவும் நல்ல செயல்பாடுகளின் வழியாகவும் சிறப்பான பணியை செய்தார். எனவே தான் இயேசுவால் தாக்கங்களை உருவாக்க முடிந்தது. நம்முடைய வாழ்க்கையிலும் நல்லவற்றை சிந்தித்து நல்லவற்றை செய்து நல்லவற்றை நோக்கி பயணிக்கும் பொழுது நாமும் இயேசுவை போல துணிச்சலோடு பணி செய்ய முடியும்.  

எனவே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே நன்மை செய்வதற்கு ஒருபோதும் பயப்படக்கூடாது.  உண்மையை பேசுவதற்கு ஒருபோதும் தயங்க கூடாது.  நீதியையும் நேர்மையையும் நிலை நாட்டுவதற்கு ஒரு போதும் மனம் தளரக்கூடாது.  கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து உண்மையோடு வாழ வேண்டும்.  அதனால் வருகின்ற துன்பங்களை பொருட்டாக கருதாமல் துணிச்சலோடுஏற்றுகொண்டு நம்பிக்கை பயணத்தை எதிர்நோக்கின் திருப்பயணிகளாக யூபிலி ஆண்டில் பயணிக்கிற போது , நாமும் இயேசுவைப் போல மாற முடியும். இயேசுவின் பாதையில் பயணிக்கவும் துணிச்சலோடு நற்செய்தி அறிவிக்கவும் புறப்பட தயாரா?  

 இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே!  எங்களுடைய  கிறிஸ்தவ நம்பிக்கை பயணத்தில் உம் மகன் இயேசு கிறிஸ்துவை போல, துணிவோடு பயணிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் உமது  தூய ஆவியாரின் அருட்பொழிவைத் தாரும்.  ஆமென்.