கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிதலே முதன்மை சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

11அக்டோபர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 27ஆம் வாரம் – சனி

யோவேல் 3: 12-21
லூக்கா  11: 27-28


கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிதலே முதன்மை சீடத்துவம்!

முதல் வாசகம்.

கடவுளுடைய விருப்பத்தின்படி செய்வதும் வாழ்வதும் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். அறுவடைக் காலத்தில் அறுவடை செய்பவரைப் போலச் செயல்பட்டு, பலன்தராதவற்றை நீக்கி,  பயனுள்ள விளைச்சலைக் கொண்டுவரவிருக்கும் ஆண்டவரின் வருகையை யோவேல் இறைவாக்கினர் அறிவிக்கிறார்.

இந்த யோவேல் இறைவாக்கினரின் உரையில், நல்ல பயிர்களுடன் சேர்ந்து வளரும் பயனற்ற பயிர்களால் பலன் ஏதுமில்லை. அறுவடை செய்பவர்  நல்ல தானியத்திலிருந்து களைகளையும் பதரையும் பிரிக்க வேண்டும். வரவிருக்கும் ஆண்டவர்  நீதிமான்களை தீயோரிடமிருந்து (களைகள்)  பிரத்தெடுப்பார் என்றும், அதே நேரத்தில் துன்மார்க்கரைக்  குப்பையாக எண்ணி  வெளியேற்றுவார் என்றும் முன்னறிவிக்கிறார். அப்போது, கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; வீண்மீன்கள் ஒளியை இழந்திருக்கும் என்கிறார்.

நியாயத்தீர்ப்புக்குப் பிறகு, புதுப்பித்தலின் ஏற்படும் உண்டு என்கிறார் யோவேல்.  ஆண்டவர், சீயோனில் (எருசலேம்) வசிப்பார் என்றும், எருசலேம் தூய்மைபெற்று இருக்கும் என்றும், அந்நியர்கள் இனி அதன் வழியாகக் கடந்து செல்லமாட்டார்கள் என்றும் அறிவிக்கிறார்.

இந்த வாசகப் பகுதியானது, ஆண்டவரின் நடுதீர்ப்பைப் பற்றி  கடுமையாகப் பேசினாலும், அது புதுப்பித்தலின் ஒரு பார்வையையும் முன்வைக்கிறது. எகிப்து மற்றும் ஏதோமின் பாழடைந்த நிலை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் யூதா மற்றும் எருசலேமின் பாவ நிலை மீட்டெடுக்கப்படும் என்றும்  கடவுளின் தீர்ப்பு தண்டனைக்குரியது மட்டுமல்ல, மீட்புக்குரியாது என்பதையும் நமக்குக் காட்டுகிறது.

நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு வல்லமையோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ஒரு பெண்மணி, “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றவர்” என்கின்றார். 

இறைவார்த்தையின் மேன்மையை ஆண்டவர் இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறார்.


சிந்தனைக்கு. 


இன்றைய நற்செய்தி முகவும் சுருக்கமான பகுதியாக உள்ளது.  ஆனால் அதன் செய்தி சக்தி வாய்ந்தது. மரியாவுக்கு, அவரது  தாய்மையைப் புகழ்ந்து கூட்டத்திலிருந்து ஒரு பாராட்டு எழுகிறது. ஆனால் இயேசு மெதுவாகப் புகழைத் திருப்பி விடுகிறார்: உண்மையான பாக்கியம்   கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிவதில் உள்ளது என்கிறார். 

இங்கே, இயேசு அன்னை மரியாவைச் சிறுமைப்படித்தியதாக சிலர் கருத்துக்கிறார்கள். உண்மையில் கூட்டத்தில் இருந்த அந்தப் பெண் நல்ல நோக்கத்துடன் மரியாவைப் போற்றினாள்.  அந்தப் புகழுரையைக் கேட்ட  இயேசு தன் அன்னையை நிராகரிக்கவோ அவமதிக்கவோ இல்லை.  அவளுடைய தாய்மை உண்மையானது, ஆனால் அவளுடைய ஆழமான மகத்துவம் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்பபடிந்ததில்தான் உள்ளது என்கிறார்.   

அதேபோல், நம்   பட்டங்கள், பதவிகளால் நம்மை நாமே உயர்தவர்களாகக் காட்டிக்கொள்ளலாம், கிறிஸ்தவப் பார்வையில் இது தவறு. கடவுளுடைய வார்த்தைக்கு நாம் மனமார்ந்த கீழ்ப்படிதலுடன் வாழ்கிறோமா? என்பதுதான் மிக முக்கியமானது என்று இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

முதல் வாசகத்தில் இறைவாக்கினர், யோவேல் ஆண்டவரின் நியாயத்தீர்ப்பைப் பற்றி எச்சரிக்கிறார், ஆனால் புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பின் காட்சிகளையும் வழங்குகிறார்.  கடவுள்   தீயவர்களைத் தண்டிக்கப் போவதாகச் சொல்வதுடன், அவருடைய மக்களாகிய இஸ்ரயேலுக்குப் புகலிடமாக இருக்கப் போவதாகவும், அவரகளுக்கு எல்லா நலன்களையும் அளிக்கப் போவதாகவும் இறைவாக்கினர் யோவேல்  கூறுகின்றார். ஆகவே, நாம் யார் என்பதல்ல, நாம் எத்தகைய வாழ்வு வாழ்கிறோம் என்பதே இன்றியமையாதது. 

ஆம், "கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு" பின்னர் "அதைக் கடைப்பிடித்தல்" என்ற இரண்டு காரியங்களைச் செய்பவர்களே உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் என்று இயேசு விமர்சிக்கிறார்.   இயேசுவின் இக்கூற்று நமக்கு ஒரு சவால் என்றால் மிகையாகாது.  நிறைவாக, கடவுளுடைய வார்த்தையைக் கேட்பது என்பது   கடவுள்  நம்மிடம் பேசி, நம் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகிறார் என்பதாகும்.  வாழ்வு தரும் வார்த்தை அவருடையது என்பதில் நம்பிக்கைகொள்வதில்  மகிழ்வுறுவோம். 

இறைவேண்டல்.

என் இரக்கமுள்ள ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் விட மாட்சிமிக்கவர்.  எனது வாழ்நாளில் என்றும் உமது வார்த்தைக்குச் செவிசாய்த்து, இதன்படி  வாழும் வரத்தை நல்குவீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452