அவதூறு பேசுவோருக்கு ஐயோ கேடு!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் மூன்றாம் வாரம் – வியாழன்
எரேமியா 7: 23-28
லூக்கா 11: 14-23
அவதூறு பேசுவோருக்கு ஐயோ கேடு!
முதல் வாசகம்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், “என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாக இருப்பீர்கள்” என்கின்றார். ஆனால், கடவுளின் குரல் செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தது.
கடவுளின் வேண்டுகொளைப் புறக்கணித்தனர். ஆகவே, கடவுள் எரேமியா இறைவாக்கினர் வழி, ‘கடவுள் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று என்றும் அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று’ என்றும் அறிவிக்க எரேமியா பணிக்கப்படுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார். மக்கள் அதைக்கண்டு வியந்து போகின்றனர்; ஆனால், பரிசேயர்களோ இயேசு பேய்களின் தலைவனான பெயல்செபூலைக் பேயை ஒட்டுவதாகப் புதியக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
இங்கே இரண்டு குற்றச்சாட்டுகள் இயேசுவின் மீது சுமத்தப்படுகிறது.
1. இயேசு ‘பெயல்செபூல்’ அதாவது பேய்களின் தலைவனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்.
2. இயேசு, பேய்களின் தலைவனைக் கொண்டுதான் பேய்களை ஓட்டுகிறார்.
மேறகண்ட இரு குற்றச்சாட்டுகளையும் செவிமடுத்த இயேசு, ஓர் உவமையின் வாயிலாக அவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கற்பிக்கிறார். சாத்தானுக்கும் அரசு உள்ளது. அப்படியென்றால், “சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனது அரசுக்கு எதிராகத் தானே பிளவுபடுதத்தும் வேலையைச் சாத்தான் செய்யுமா? என்று வினவுகிறார். ஏனெனில் பிளவுப்படும் எந்த அரசும் காலத்துக்கும் நிலைத்து நிற்காது. எனவே, சாத்தானின் கூட்டம் தன்னை தானே அழித்துக்கொள்ள விழையாது என்கிறார்.
தொடர்ந்து, காவலர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக்கொண்டு, கொள்ளையடித்தப் பொருள்களைப் பங்கிடுவர். என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்த மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார் என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் சில யூதத் தலைவர்கள், இயேசுவின் குணப்படுத்துதல் மற்றும் பேய்களை விரட்டியடித்தலுக்கு எதிராக எழுகிறார்கள். இயேசு பேய்களின் தலைவனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார் என்று குற்றஞ்சாற்றுகிறார்கள். ஒருவரைப் பற்றி அவதூறு பேசுதல், உண்மைக்கு எதிராகப் பேசுதல் போன்ற கொடூரமான, ஒழுக்கக்கேடான செயல் வேறு எதுவும் இல்லை.
தீயவர்கள் எப்போதும் தீயதையே நினைப்பார்கள், மக்களோ, பெரும்பாலும் நல்ல மற்றும் பாராட்டுக்குரியவற்றைக் கேட்பதை விட, கெட்ட மற்றும் இழிவானவற்றைக் கேட்க அதிகம் விரும்புவர். இது இயல்பான ஒன்று. யூதத் தலைவர்கள் சாத்தானின் பிடியிலிருந்து தனிநபர்களை விடுவிக்க இயேசுவுக்கு எங்கிருந்து ஆற்றலும் அதிகாரமும் கிடைக்கும்? அவர் சாத்தானுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்று கதைக் கட்டுகிறார்கள். இதுவும் இயல்பான ஒன்றுதான்.
ஆமாம், ஒரு விரல் நீட்டி அடுத்திருப்பவர் மீது அவதூறு சொல்லும் போது, மற்ற மூன்று விரல்களும் நம்மை நோக்கித்தானே இருக்கும். ஆகவே, பிறர்மீது உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாதது கூறுவதற்கு முன்னால், உண்மையை ஆராய்ந்துணர வேண்டும். ஏனெனில், நாம் உண்மைக்கு எதிராகச் செயல்படும்போது, சாத்தானை ஏற்றுக்கொள்கிறோம் அல்லது சாத்தானின் பக்கம் சேர்ந்துகொள்கிறோம் என்று பொருள்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறிய மற்றொரு கூற்றைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவர் “என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்” என்று முடிக்கிறார். நாம் அவரது உன்னத சீடர்கள் என்றால், நாம் எல்லா சூழலிலும் அவரோடு இணைந்திருக்க வேண்டும். சாத்தானுடனான போராட்டத்தில் கடவுள்தான் வெற்றி பெறுவார் என்பது நமக்குத் தெரியும். யோபு நூலின் வழியாக இந்த உண்மையை நாம் அறிகிறோம். தம் மனைவி உட்டபட அனைவரும் அவரைத் தூற்றியபோதும் இறுதிவரை கடவுள் பக்கம் நின்றார். அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்தார். நிறைவாக இறை ஆசீரைப் பெற்றார். அப்படியானால், நாம் ஏன் உலகின் பக்கம் நிற்க வேண்டும்?
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக, “என் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாக இருப்பீர்கள்” என்கின்றார் கடவுள். அவர் வாக்கு மாறாதவர். அவரது அன்பிலும் உறவிலும் நிலைத்திருந்தால் அவரில் உயிர்த்தெழுவோம்.
இறைவேண்டல்.
வலிமையின் நாயகரே இயேசுவே, சோதனைகளில் வீழ்ந்துவிடாதபடி என்னை வலிமைப்படுத்திக்கொள்ள அருள் தாரும் ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
