உண்மை அன்பு சந்தேகிக்காது; நன்மை செய்யும்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் இரண்டாம் வாரம்–புதன்
புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர்
2 சாமுவேல் 7: 4-5a, 12-14a, 16
உரோமையர் 4: 13, 16-18, 22 மத்தேயு 1: 16, 18-21, 24a
உண்மை அன்பு சந்தேகிக்காது; நன்மை செய்யும்!
முதல் வாசகம்.
இன்று நாம் மரியாளின் கணவர் தூய யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய முதல் வாசகமான 2 சாமுவேல் 7-ஆம் அதிகாரத்தில், தாவீதின் வழிமரபைத் தொடர உள்ளதாகக் கடவுள் அளித்த வாக்குறுதியைக் கேட்கிறோம். அந்த வழிமரபிலிருந்து ஒரு புதிய வழிதோன்றல் உருவாகும் என்றும் வழித்தோன்றலை தாவீதுக்குப்பின் அவர் உயர்த்தி, அவனது அரசை கடவுள் நிலைநாட்டுவார் என்றும், கடவுளுக்காக கோவில் கட்டவிருப்பவன் அவனே என்றும், என்றும் கடவுள் அவனுக்குத் தந்தையாக இருப்பார் என்றும் வாக்குறுதி அளிக்கிறார்.
2-ம் வாசகம்.
உரோமைருக்கு எழுதிய கடிதத்தின் இன்றையாப் பகுதியில், புனித பவுல், ஆபிரகாமின் நம்பிக்கையைப் பற்றியும், ஆபிரகாம் மற்றும் அவரது சந்ததியினர் மூலம் அனைத்து மக்களும் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றியும்நமக்கு நினைவூட்டுகிறார். ஆபிரகாமின் நம்பிக்கை நீதிமானாக வெளிப்படுத்தியது போல யோசேப்பின் நம்பிக்கையும் வாழ்வும் யோசேப்பை நீதிமானாகவும் நேர்மையாளராகவும் வெளிப்படுத்துகிறது.
நற்செய்தி.
மத்தேயு நற்செய்தியின் இன்றைய பதிவில், கன்னி மரியா கர்ப்பமாக இருப்பதை அறிய வந்த யோசேப்புக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையைப் பற்றிப் பேசுகிறது. சட்டத்தின்படி, யோசேப்பு மரியாளைக் கல்லெறிந்து கொல்ல வேண்டியிருந்தது. நீதியுள்ள, நேர்மையான நபராக இருந்து, மரியாளை ஒரு ஒழுக்கமான மற்றும் புனிதமான பெண் என்று உணர்ந்த யோசேப்பு, அவளை அமைதியாக அனுப்பிவிடவும், சட்டத்தின் கடுமையான தண்டனைக்கு ஆளாக்காமல் இருக்கவும் முடிவு செய்கிறார்.
இந்நிலையில், ஆண்டவரின் தூதரால் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் என்று யோசேப்புக்குத் தெரியப்படுத்துகிறார். மேலும் அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்ற செய்தியும் வெளிப்படுத்தப்படுகிறது. நிறைவாக, யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார் என்று மத்தேயு கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்று நாம் மரியாளின் கணவர் புனித யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். தாவீதின் வழிமரபில் தோன்றிய யோசேப்பு தன்னுடைய மனைவி மரியாவிற்கு ஒரு சிறந்த கணவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இக்காலத்தில் நீதிமன்றங்களுக்கும் திருமணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை மறுப்பதற்கில்லை. உயிருக்கு உயிராகக் காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள் கூட ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்குச் செல்வதை அறிகிறோம்.
யோசேப்பு தனக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்த மரியா திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருந்தது தெரியவந்ததும் அவளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று ஓடி தலைமறவாகவில்லை.
மரியாள் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டாள் என நினைத்து அவளைக் கல்லால் எறிந்துகொல்வதற்கு ஊர் பஞ்சாயித்தைக் கூட்டியிருக்கலாம். ஆனால், கடவுளின் செய்தியை நம்பி மரியாவை ஏற்கிறார். அவர் தாழ்ச்சியுள்ள கணவராக விளங்கினார். யோசேப்பு கடவுளின் மீட்புத்திட்டத்திற்கு அடிபணிந்து, நல்ல கணவராகவும் வளர்ப்புத் தந்தையாகத் திகழ்ந்தார்.
யோசேப்பின் வாழ்க்கை சவால்களாலும் சிரமங்களாலும் நிறைந்திருந்தது, ஆனால் அவர் தொடர்ந்து கடவுளின் திட்டத்தில் நம்பிக்கை வைத்து, குடும்பத்திற்குப் பாதுகாப்பான சூழலை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். கடவுள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், நீதிமான் என்ற உணர்வும்தான் இதற்குக் காரணம்.
யோசோப்பை ஒரு முன்மாதிரியாக மாற்றியது அவரது நம்பிக்கை. அது அவரை கடவுளின் பார்வையில் "நீதியான" ஒரு நபராக வாழ வழிநடத்துகிறது. அவர் கடவுளை முழுமையாக நம்பினார். மேலும் அவர் கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று அவர் முற்றிலும் உணர்ந்திருந்தார். யோசேப்பைப் பொறுத்தவரை, நம்பிக்கை என்பது கடவுளின் திட்டம் மனிதக் கண்ணோட்டத்தில் நமக்குப் புரியாதபோதும் அதை ஏற்றுக்கொள்வதாகும்.
யோசேப்பு "நீதிமான்" என்று சொல்வதன் மூலம், கடவுள் தனக்காகச் செய்ய விரும்பிய அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒருவராக அவர் இருந்தார் என்பதாக மறைநூல் கூறுகிறது. இவ்வுலகில்தான் அவர் நீதிமானாக விளங்கினார். ஆகவே, நம்மாலும் கடவுள் முன்னிலையில் நீதிமானாக விளங்க முடியும் என்பதற்கு புனித யோசேப்பு ஒரு முன்மாதிரி.
திருமண வாழ்வில் கணவன் மனைவி உறவில் புரிந்துணர்வும், தோழமையும் இன்றியமையாதவை. இன்று நாம் எடுத்தோம், கவிழ்த்தோம் என்றுதான் பல வேளைகளில் செயல்படுகிறோம். இன்றைக்கு பல தம்பதிகள் விவாகரத்து ஒன்றே சிறந்த முடிவென்று ‘தீடிர்’ முடிவெடுக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பொறுமையற்ற வேகம் தான். அத்தகைய பொறுமையின் இன்றியமையாத் தன்மையைப் புனித யோசேப்பு நமக்குக் கற்றுத் தருகிறார். கற்றறுக்கொள்வோம்.. ஏற்றுக்கொள்வோம்.
இறைவேண்டல்:
அன்பு இயேசுவே, உமது நல வாழ்வில் உம்மோடு உடனிருந்து, உமக்கும் உம் தாயாருக்கும் சிறந்தப் பாதுகாவலராக விளங்கிய புனித யோசேப்பு காட்டிய முன்மாதிரியில், நானும் நேர்மையாளராக வாழவும், பிறர்மீது நல்லெண்ணத்தில் வளரவும் அருள் தாரும். ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
