தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகிறார் | ஆர்.கே. சாமி | Veritas Tamil

9 ஜூலை 2025
பொதுக்காலம் 14 ஆம் வாரம் – புதன்
தொடக்க நூல் 41: 55-57; 42: 5-7, 17-24
மத்தேயு 10: 1-7
‘தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகிறார்.’
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகத்தில், யாரை (யோசேப்பை) மிதியானியரிடம் விலைக்கு விற்றார்களோ, அவரையே பஞ்சக் காலத்தில் அவரது சகோதரர்கள் அணுகிச் செல்லுமாறு கடவுள் செய்கின்றார். ஆம் இன்றைய வாசகம், யோசேப்புக்கும் அவரை அடிமைத்தனத்திற்கு விற்ற அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சந்திப்பாகும். பஞ்சத்தின் காரணமாக எகிப்திற்கு உணவு பொருள் வாங்க சென்ற யாக்கோப்பின் இதர பிள்ளைகளால் அவர்கள் விற்ற யோசேப்புவை அடையாளம் காணவில்லை, ஏனென்றால் இப்போது அவர் ஒரு அடிமை அல்ல, பார்வோனுக்கு அடுத்தபடியாக உயர்த்தப்பட்டிருக்கிறார்.
எகிப்திற்கு வந்த அவரது சகோதரர்கள் மத்தியில் யோசேப்பின் உடன் பிறந்த தம்பி பெஞ்சமின் காணப்படவில்லை. எனவே, அவர் தனது தம்பியைப் பார்க்க விரும்புகிறார்.
யோசேப்பை அவரது சகோதரர்கள் அடிமைத்தனத்தில் விற்ற பிறகு, அவரை மீண்டும் உயிருடன் பார்ப்பார்கள் என்று நினைக்கவில்லை. யோசேப்பு கண்ட கனவு நிறைவேறாது என்று எண்ணியிருந்தனர்.
கடவுள் யோசேப்பின் நிலையை மாற்றினார். எகிப்தின் ஆட்சியாளரான யோசேப்பு தானியங்களைச் சேமித்து அதன் விநியோகத்தை மேற்பார்வையிட்டார். நீண்ட காலத்திற்கு முன்பு அவரை அடிமைத்தனத்திற்கு விற்ற அவரது சகோதரர்கள் தானியங்களை வாங்க வந்தார்கள், யோசேப்பு அவர்களது சகோதரர் என்று அறியாமலேயே அவர் முன் வணங்கினார்கள்.
யோசேப்பு அவர்களை அடையாளம் கண்டுகொண்டார், ஆனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் அவர்களை கடுமையாக நடத்தினார், மூன்று நாட்கள் அவர்களைக் காவலில் வைத்து, பின்னர் அவர்களைச் சோதித்தார்: அவர்களில் ஒரு சகோதரர் எகிப்தில் கைதியாக இருக்க வேண்டும், மீதமுள்ளவர்கள் பொருட்களுடன் திரும்ப சென்று தங்கள் இளைய சகோதரர் பெஞ்சமினை அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிட்டார். இறுதியில் யோசேப்பு தன் சகோதரர்களுக்கு பெரும் ஆசீர்வாதமாக அமைந்தார்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு பன்னிருவரைத் தம் பணிக்காக அழைக்கின்றார். இந்தப் பன்னிருவரும் மெத்தப் படித்தவர்களோ அல்லது வசதி படைத்தவர்களோ அல்லர்; சாதாரணமானவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் இயேசு தம் அதிகாரத்தை அளித்து, அவர்கள் பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் செய்கின்றார் என்று மத்தேயு பன்னிருவர்களின் பெயர் பட்டியலோடு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இயேசுவின் திருத்தூதர்களாக விளங்க வேண்டுமெனில், மூன்று நிலைகளில் அவர்கள் உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. அவை:
1. இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. இயேசுவோடு அவர்கள் தங்கிக் கற்றிருக்க வேண்டும்.
3. நற்செய்தயை அறிவிக்க இயேசுவால் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு, மூன்று ஆண்டுகாலம் பயிற்றுவித்தப்பின், இயேசு தம் சீடர்களுக்குப் பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் அதிகாரம் கொடுத்து, அவர்களை விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்க அனுப்புகிறார்.
இன்றைய வாசகங்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, கடவுளின் திட்டத்தின் எளிமையும், அதே நேரத்தில் அதன் அற்புதமும் என்னைத் தொட்டது என்றால் மிகையாகாது. கானான் மற்றும் எகிப்து பகுதிகளில் பஞ்சம் ஏற்படும்போது, ஓர் அடிமை எகிப்தின் இரண்டாவது உயர் அதிகாரியாகி, எகிப்தியர்களுக்கு மட்டுமல்ல, இஸ்ரயேல் மக்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பில் இருப்பார் என்று எவரும் கனவு கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அதுதான் நிகழ்ந்தது.
கடவுள் ஓர் அடிமையை, (தம் சொந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்ட மனிதனை) ஒரு நாட்டின் குறைந்தபட்சம் இரண்டாவது தலைவராக மாற்ற முடிந்தென்றால், நற்செய்தி அறிவிக்கும் பணியில் கடவுள் நம்மையும் ஒரு பயனுள்ள கருவியாக மாற்ற முடியும் என்பதில் ஐயமில்லை.
ஒருவகையில், இயேசுவும் ஒரு திருத்தூதர்தான். ஏனென்றால் அவரும் கடவுளால் அனுப்பப்பட்டார் (மாற்கு 9:37). மேலும் கடவுளின் அரசை அறிவிக்க அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இப்போது அதே மரபில் இயேசு 12 திருத்தூதர்களைத் தேர்வுச் செய்து, பயிற்றுவித்து அனுப்புகிறார். ஆம், இன்று நாம் இயேசுவின் நற்செய்தி பணியாளர்களாக இருக்கிறோம் என்றால், அது முற்றிலும் கடவுளின் தேர்வாகும்.
ஆனால், இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும் பகுதியினர் ‘அனுப்பப்பட்டவர்களாக’ செயல்படுவதில்லை. உலகப்பற்று நம்மில் பலரின் கவனத்தைச் சிதறடிக்கிறது. இந்தப் போக்குகள் மாற வேண்டும். திருஅவையில் உள்ள பொதுநிலையினர், நற்செய்தி மதிப்புகளை சமூகத்தில் புகுத்த அவர்களது வாழ்க்கை முறையால் அழைக்கப்படுகிறார்கள். ஆம், கிறிஸ்தவர்கள் உலகத்தில் இருக்க அழைக்கப்படுகிறார்கள், ஆனால் உலகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க அழைக்கப்படுவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ எனும் தத்துவ வரிகளுக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் திருமுழுக்கால் அழைக்கப்பட்டவர்கள், உறுதிபூசுதலால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை அறிந்துணர்ந்தால், உலகத்தில் நற்செய்தி அறிவிப்புப் பணியில் போராடி வெல்ல முடியும்.
கிறிஸ்துவத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது இன்றியமையாதது. கிறிஸ்தவத்தைச் சட்டத்திட்டங்கள் நிறைந்த ஒரு அமைப்பாகப் பிறருக்குக் காட்டுவதைவிட அன்பும், இரக்கமும், அடைக்கலமும், அரவணைப்பும், ஒப்புரவும் கொண்ட ஓர் இல்லமாக நமது வாழ்வால் வெளிப்படுத்துபவர்களாக நாம் மாறினால், யோசேப்புவைப் போல நாமும் உயர்த்தப்படுவோம். ஆம், தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகிறார்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது தெய்வீகக் கரங்களில் சிறந்த கருவியாக நான் விளங்க என்னை திடப்படுத்த உமது தூய ஆவியாரை தொடர்ந்து என்னில் பொழிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
