எளியோரைத் தேடி அழைப்பவர் நம் ஆண்டவர்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

17 ஜனவரி 2026
பொதுக்காலம் முதல் வாரம் – சனி

1 சாமுவேல் 9: 1-4, 17-19; 10: 1a
மாற்கு 2: 13-17


எளியோரைத் தேடி  அழைப்பவர் நம் ஆண்டவர்!
 
முதல் வாசகம்.

இஸ்ரயேல் மக்கள் தங்கெளுகென்று அரசர் தேவை என்று முறையிட்டதன் காரணமாக கடவுள் அவர்களுக்கு  முதல் அரசராக  சவுல் என்பவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை இந்தப் பகுதி விவரிக்கிறது:

சவுலின் பின்னணி: 

யாக்கோப்பின் 12 மகன்களில் ஒருவரான  பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.  இவரது தந்தையான கீசு ஒரு சிறந்த போர் வீரர்.   அவர் ஒர் அழகான மற்றும் கவர்ச்சியன இளைஞன். 

தொலைந்து போன கழுதைகளைத் தேடுதல்: 

சவுலின் தந்தைக்குச் சொந்தமான கழுதைகள் காணாமல் போவதிலிருந்து கதை தொடங்குகிறது. கீசு தனது மகன் சவுலை ஒரு வேலைக்காரனுடன் அவற்றைத் தேட அனுப்புகிறார். அவர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறார்கள், ஆனால் கழுதைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தெய்வீக நியமனம்: 

சவுலும் அவருடைய ஊழியரும் தேடுகையில்,  சாமுவேல், சவுலைக் கண்டு, இஸ்ரவேலை வழிநடத்த கடவுள் தேர்ந்தெடுத்தவர் என்று அவரை அங்கீகரிக்கிறார். கடவுளின் மக்களை ஆளும் மனிதன் சவுல்தான் என்று கடவுள் சாமுவேலிடம் கூறுகிறார்.

முதல் அரசராக  அருள்பொழிவு :

 பின்னர், சாமுவேல் சவுலை எண்ணெயால் அருள்பொழிவு செய்கிறார், இது கடவுளின் அங்கீகாரத்தையும் சவுலை இஸ்ரயேலரின் அரசராகவுப்   நியமித்ததையும் குறிக்கிறது.  இவ்வாறு கடவுள் ஆட்சியிலிருந்தோர் உலக அரசரின் ஆட்சிக்கு மாறினர்.
 

நற்செய்தி.

  
நற்செய்யில், இயேசுவின் காலத்தில் உரோமையருக்காக வரி வசூலித்த லேவியின் (மத்தேயு) நேரடி அழைப்பை மாற்கு நற்செய்தியாளர் விவரிக்கிறார். இவருக்கு முன்பாக சீமோன் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு (செபதேயுவின் மகன்), யோவான், பிலிப்பு, பர்த்தொலோமியு, தோமா, சின்ன யாக்கோபு போன்றவர்கள் இயேசுவின சீடராக அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களது குழுவில் லேவி எனும் மத்தேயுவும் இணைக்கப்படுகிறார். 

லேவி உரோமையருக்கு வரி வசூலிப்பவர் என்பதால், சமூக ரீதியாக வெறுக்கப்பட்டவர் மற்றும் ஆன்மீக ரீதியாக ஒதுக்கப்பட்டவர் ஆவார், ஆனாலும் இயேசு தனது நற்பெயருக்கு அப்பால் பார்த்து, "என்னைப் பின்செல் " என்று வெறுமனே கூறுகிறார். பல சீடர்களின் அழைப்புகளைப் போலவே, இது மனித தகுதியின் அடிப்படையில் அல்ல, மாறாக கடவுளின் அருளின் அடிப்படையிலான ஓர் அழைப்பாக உள்ளது.

இயேசுவின் கால கலாச்சாரத்தில்,   வரி வசூலிப்பவர்களுடனும் பாவிகளுடனும் பாவிகளுடனும்  விருந்துண்பது  தூய்மையற்றதாகக் கருதப்பட்ட சூழலில், பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர். இயேசு, தயங்காமல்   “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்று மாற்கு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.


நற்செய்தியில் இயேசு அழைத்த லேவி அல்லது மத்தேயு என்பவர் மக்கள் பார்வையில் ஒரு பாவி. ஆனால், இயேசுவின் பார்வையில் நல்லவர் வல்லவர்.  இவர்தான் இயேசுவுக்குப் பின்  இயேசுவைப் பற்றிய நற்செய்தியை பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக எழுதினார். முதல் அதிகாரத்திலேயே, இயேசு தாவீதின் வழிமரபில் வந்த மெசியா என்பதை உறுதிப்படுத்தும் செய்தியையும்,    இயேசுவின்  தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார் எனும் செய்தியைத் தெளிவுப்பட வெளியிட்டவர்.  

இன்றைய நற்செய்தியில்,  இயேசு "நீதிமான்களை அல்ல, பாவிகளை அழைக்க வந்தார்" என்பதிலிலருந்து அவரால் அழைக்கப்பட்ட நாமும் உத்தவமர்கள் அல்ல,  யாரும் நீதிமான்கள் அல்ல மாறாக,  நாம் அனைவரும் பாவிகள் என்பது தெளிவாகிறது.  இந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் மனோபக்குவம் நமக்குத் தேவை.  எனவே, பிறரை நோக்கி விரல் நீட்டி குற்றவாளி அல்லது பாவி என்று குற்றம் கூறும் தன்மையை முதலில் நம்மில் இருந்து நீக்க வேண்டும். விசாரித்து நீதியின் பக்கம் குரல்கொடுக்க வேண்டும்.  தீயதைச் சுட்டிக்காட்டக்கூடாது என்பதல்ல. தீயதைச் சுட்டிக்காட்டும் துணிவும் சீடத்துவத்திற்கு இன்றியமையாதது. 


லேவி அழைக்கப்பட்ட போது, ஏற்கனவே அழைக்கப்பட்ட சீடர்கள் லேவியை ஒரு பாவி என்று ஒதுக்கவில்லை. அவர்கள் தான் முதலில் அழைக்கப்பட்டவர்கள் என்று தற்பெருமை கொள்ளவில்லை.  தற்பெருமை உண்மையைச்  சிதைத்து, நமது பலவீனங்களை மூடிமறைக்க ஏதுவாக அமையும்.  இரண்டாவதாக, தற்பெருமையின் காரணத்தால்   நாம் பெரும்பாலும் நமது குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தவறுகிறோம்.  


முதல் வாசகத்தில் கழுதையைத் தேடி அலைந்த சவுலைத்தான்  கடவுள் ஓர் இனத்தின் அரசராக அருள்பொழிவுச் செய்தார். எளியவரே கடவுளுக்குத் தேவையானவர்கள் என்பதை அறிகிறோம். ‘ஏழையரின் உள்ளத்தோர் (எளியவர்) பேறுபெற்றோர் ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது’ (மத் 5:3) என்று முழக்கமிட்டார் இயேசு.

உண்மையில் நம்மை அழைத்த ஆண்டவர் ஒரு தெய்வீக மருத்துவர். நாம் அவருடைய குணப்படுத்துதலுக்கும் தொடுதலுக்கும் உரிய பலவீன  நோயாளிகள் எனும் மனத்தாழ்மையுடன் திருஅவை பணிகளில் ஈடுபட வேண்டும். ஏற்றத்தாழ்வு பாராட்டுவது நம்மில் ஆகாது. அது ஒரு புற்றுநோய். நம்மை அழிக்காமல் விடாது.  ஆகவே, எளிய வாழ்வுக்கான மனமாற்றத்திறகாகக் கடவுளின் தொடுதலை நம்பியிருக்க வேண்டும். மனமாற்றத்தைச் செயலில் வெளிப்படுத்த வேண்டும்.  அழைப்பை ஏற்ற லேவி இயேசுவையும் அவருடைய சீடர்களையும் தனது வீட்டிற்கு விருந்துக்கு வரவேற்றார் அல்லவா?

இறைவேண்டல். 

 
என்னை தொட்டழைத்த ஆண்டவரே, எனது  தெய்வீக மருத்துவரே, உமது தயவால்  என்னை வழிநடத்துவீராக. ஆமென்.  

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452