கடவுள் புறக்கணிப்பு சுய புறக்கணிப்பு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

16  ஜனவரி 2026
பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி

1 சாமுவேல் 8: 4-7, 10-22a
மாற்கு 2: 1-12

 
கடவுள் புறக்கணிப்பு சுய புறக்கணிப்பு!
  

முதல் வாசகம்.

 
இந்தப் பகுதியில், இஸ்ரயேல் மக்கள் தங்களை நல்ல முறையில் வழிநடத்தி வரும்  சாமுவேலை அணுகி, அவருக்கு  வயதாகிவிட்டதாகவும்,  அவருடைய மகன்கள் அவருடைய வழிகளைப் பின்பற்றவில்லை என்றும் முறையிடுகிறார்கள்.  இறுதியில்,   "மற்ற எல்லா இனத்தாரைப் போலவும்" தங்களை ஆளவும் நீதி வழங்கவும் ஓர் அரசன்  வேண்டும் என்று சாமுவேலுவிடம் விண்ணப்பிக்கிறார்கள்.

சாமுவேல் அவர்களின் வேண்டுகோளால் அதிருப்தி அடைந்து, அதைப் பற்றி கடவுளிடம் முறையிடுகிறார். சாமுவேல் கடவுளின் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கிறார். ஓர் அரசர் இருந்தால் அவனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்து கடவுள் எடுத்துரைத்ததை   மக்களுக்குத் தெரிவிக்கிறார்.  மக்களோ சாமுவேலின் குரலுக்குச் செவிகொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஓர் அரசன் வேண்டும் என்று விடாபிடியாக வற்புறுத்தவே, ஆண்டவர் சாமுவேலிடம்   “அவர்கள் குரலுக்குச் செவிகொடுத்து, அவர்கள்மீது ஓர் அரசனை ஆளச் செய்” என்றார். 

  
நற்செய்தி.

  
இன்றைய  நற்செய்தியில், இயேசு கப்பர்நாகூமில் ஒரு வீட்டில் கூட்ட நெரிசலில் கற்பித்துக் கொண்டிருக்கிறார், அதனால் மக்கள் வாசல் வழியாக உள்ளே  நுழைய இயலாத சூழல் ஏற்படுகிறது.  நான்கு பேர் ஒரு முடக்குவாதக்கார நண்பரை தூக்கி வருகிறரகள். ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக அவர்களால் இயேசுவை நெருங்க  முடியவில்லை. எனவே அவர்கள் கூரையின் மீது ஏறி, ஒரு திறப்பை ஏற்படுத்தி, அந்த நண்பரை இயேசுவின் முன் இறக்குகிறார்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையின் நிமித்தம்  “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

அங்கே அமர்ந்திருக்கும் சில மறைநூல் அறிஞர்கள் தங்களுக்குள்   "இந்த மனிதன் யார், இவர்  பாவங்கள்  மன்னிக்கிறாரே? கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்!" என்று மனதிற்குள் நினைக்க, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்தவராக   அவர்களிடம் சவால் விடுகிறார், "உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" அல்லது "எழுந்து நட" என்று என்ன சொல்வதல் எது எளிது என்று கேட்கிறார். நிறைவாக, மக்களோ, “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் என்று மாற்கு நிறைவுச் செய்கிறார்.

சிந்தனைக்கு.

 
முடக்குவாதக்காரனின் நான்கு நண்பர்களும் இயேசுவில கொண்ட நம்பிக்கையை செயலில்  காட்டுகிறார்கள் - அவர்கள் தங்கள் நண்பரை இயேசுவிடம் கொண்டு வருவதற்கு அதிக முயற்சி செய்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை குணமடைய வழிவகுக்கிறது. இவரகளின் இந்த முயற்சி நமக்கு இன்று பெரும் சவாலாக அமைகிறது. 

நோயுற்றோரை அல்லது துன்புறுவோரை கிறிஸ்துவிடம் கொண்டு வர நாம் எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருக்கிறோம்?

முதல் வாசகத்தில் இஸ்ரயேலர் கடவுளில் அல்ல, மாறாக தாங்கள் விரும்பும் அரசனில் நம்பிக்கை வைக்க இஸ்ரயேலர்  விழைகிறார்கள். நற்செய்தியில், தங்களில் அல்ல, இயேசுவில் நம்பிக்கை வைத்து நான்கு நண்பர்களும் விடாமுயற்சியோடு செயல்படுகிறார். 

உண்மையான குணப்படுத்துதல், மன்னிப்பு மற்றும் உடல் ரீதியான குணமளிப்புக்கு கடவுளின் தயவு இன்றியமையாதது ஆண்டவரின் குணமளிப்பானது மனிதரின ஒரு பகுதியை மட்டுமல்ல அது முழுமனித வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. இயேசு நம்மை முழுமையாக விடுவிக்கும் ஆற்றல் கொண்டவர். எனவே, முற்காலத்தைப்போல்,  வறுமையில் வாடுவோருக்கு அரிசி, மாவு போன்ற பொருள்களைக் கொடுப்பதில் திருஅவை  மன நிறைவு கொள்ள இயலாது.  மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீன்பிடிக்கும் கருவிகளைத் தந்து, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே, முழுமனித மீட்பாகும். 

பாவங்களை மன்னிக்கும் இயேசுவின் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்  கேள்வி கேட்கும்போது, இயேசு வெறும் அற்புதங்களைச் செய்பவர் மட்டுமல்ல - அவர் கடவுளின் மகன் என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். நாம் அவர்களாக இருக்க முடியாது. அவர்கள் உயிர்த்த இயேசுவின் காலத்தில் வாழாதவர்கள்.  நாம் உயிர்த்து, விண்ணகத்திற்கு எழுந்தருளி, அங்கே தந்தையின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் இயேசுவை அறிந்தவர்கள். 


இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் ஆண்டவரே அவர்களுக்கு அரசராய் இருந்து, எதிரிகளிடமிருந்து அவர்களுக்கு வெற்றியை அளித்தார் (1சாமு 7:10) என்று அறிகிறோம். ஆனால், காலப்போக்கில், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக,  நன்றிகெட்ட அவர்கள் ஆண்டவரைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்கென அரசர்களை நியமித்துக்கொண்டதால் அதற்கான தண்டனையை அனுபவித்தார்கள். பாபிலோக்கும் அடிமையானார்கள். அசீரியர்களால்  தாக்கப்பட்டு நாட்டை இழந்தனர், பின்னர் கிரேக்கர், உரோமையர் போன்ற அன்னியர்களால் ஆளப்பட்டனர். கடவுளைப் புறக்கணித்தோர் நிம்மதி இழப்பர் என்பது தெளிவு. அவ்வாறே. எச்சூழலிலும் கடவுள் கரம் பற்றுவோர் வாழ்வுப் பெறுவர் என்பது திண்ணம்.  வாழ்வு தரும் வாரத்தை அவரிடமே உள்ளது. ‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு’ (பிலி 4:13) என்கிறார்  புனித பவுல்.  இவரது வார்த்தை வெறும் வார்த்தைகள் அல்ல. நம்பிக்கை கொள்வோருக்கு அவரது வார்த்தைகளே வாழ்வு என்பதில் நம்பிக்கைக் கொண்டு வாழ்வோம்.

இறைவேண்டல். 

 
 ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்றுரைத்த ஆண்டவரே, உமது தயவும் இரக்கமும் எம்மில் நிலைத்திருக்க அருள்புரிவீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452