பொறுமை மேலானது, கோபம் அல்ல. | ஆர்கே. சாமி | Veritas Tamil

பொறுமை மேலானது, கோபம் அல்ல.

17 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 11 ஆம் வாரம் –செவ்வாய்
2 கொரி 8: 1-9
மத்தேயு  5: 43-48
 
 
பொறுமை மேலானது, கோபம் அல்ல. 

 முதல் வாசகம்.

எருசலேமுக்கு தங்கள் நன்கொடையை  அனுப்பிய மாசிதோனியர்களின் ஊக்கமளிப்பை பவுல் அடிகள்  புகழ்ந்து பேசுகிறார். மேலும் கொரிந்தியர்களின் நல்லெண்ணத்தைக் கவர்வதற்கு மாசிதோனியர்களின் நன்கொடை பணியை  உதாரணமாகக் காட்டுகிறார். மாசிதோனியர்களோ  அவர்களின் நன்கொடையைக் கடவுளுக்கான கொடையாகவே கருதினர்.

மேலும், மாசிதோனியர்களின் நல்ல மனதைச் சுட்டிக்காட்டி ’அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்’ என்று குறிப்பிட்டு எழுதுகிறார். அத்துடன், மாசிதோனியர்கள் போன்று, கொரிந்தியரும் எருசலேம் திருஅவைக்கு  வழங்குவது சிறப்பு என்றும், நன்கொடைகளை திரட்டுவதற்கு தீத்துவை கொரிந்துக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிட்டு எழுதுகிறார். நிறைவாக, அறப்பணியிலும் கொரிந்தியரும் முழுமையாய் ஈடுபடவேண்டும். என்று கேட்டுக்கொள்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தனது மலைப்பொழிவை தொடர்கிறார்.  மோசேயின் சட்டங்களைப் பின்பற்றுபவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதை விட அவரது சீடர்களின் நடைமுறையை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறார். நாம் நமது அண்டை வீட்டாரை (சக விசுவாசிகள்) அன்பு செய்வதை மட்டுமல்லாமல், நம்மைத் துன்புறுத்துபவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்று போதிக்கிறார். இதில், ‘உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?’ என்றும் ‘பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?’ என்ற கேள்விகளை  முன் வைக்கிறார்.

நிறைவாக, தந்தையாம் கடவுளோடு நம்மை ஒப்பிட்டு,   விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல சீடர்களும் நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்குபோது.  கிறிஸ்தவர்களாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய  தரநிலைகள் அல்லது மதிப்பீடுகள் மிக உயர்ந்தவை என்பதை உணர்கிறேன். கடவுள்   நிறைவுள்ளவராக இருப்பதுபோல நாமும் நிறைவை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம்.  கடவுளை நோக்கிய நிறைவு என்பது, ஒருவரது வாழ்க்கையில் கடவுளுடனான உறவில் முழுமையான மனநிறைவையும், திருப்தியையும் அடையும் நிலையை வெளிப்படுத்துவதாகும்.

கடவுளின் நிறைவைத்தேடுவோருக்கு இயேசு காட்டும் வழியே   “உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்பதாகும்.  இயேசுவின் கூற்றுப்படி. நமது பகைவரிணம் அன்பு கூர்ந்து, நம்மை துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல் செய்யும்போது நாம் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆகிறோம்.

நமக்குத் தீமை செய்தவரை பழிக்குப்பழி வாங்கும் உணர்வுதான் நம்மிடையே மலிந்துள்ளது.  அதனைத் தாண்டி மற்றவர்களைப் புரிந்துக் கொண்டு, சகிப்புத்தன்மையுடன் வாழ முற்படும்போது, நாம் இயேசுவின் உற்ற சீடராகிறோம். நாம் இயேசுவின் சீடர்கள் என்பது நமது சகிப்புத்தன்மையில் பொதிந்துள்ளது. பொறுமை என்பது பொறுத்துப்போவது மட்டுமல்ல, பொறுத்திருக்கிற நேரத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதையும் அது உட்படுத்துகிறது. ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டும்போது, நமது பொறுமை வெளிப்படுகிறது. நமது பொறுமை அடுத்தவர் கோபத்தைத் தணிக்கும். 

உண்மையில், இயேசுவின் செய்தியை சற்று ஆழமாக சிந்திப்போமானால், நாம் பகைவரை அன்பு செய்வதால் முதலில், கடவுடைய மக்களாகின்றோம் என்பது தெளிவாகிறது.  நாம் மற்றவர்களை விட மேலானவர்கள் என்றும்,  நாம் விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாக இருப்போம் என்றும் அறிய வருகிறோம். 

முதல் வாசகத்தில், வறுமையால் துன்புன்றும் எருசலேம் கிறிஸ்தவ சமூகத்திற்காக பவுல் மாசிதோனியாவிலும் கொரிந்துவிலும் பவுல் நன்கொடை கேட்டு பயணித்தார். அவருக்கு இங்கெல்லாம் பல எதிர்ப்புகள் இருந்தும் வறியோருக்காக கையேந்தினார்.  அவர்  எந்த சூழ்நிலையிலும் கடவுளைச்  சார்ந்து இருந்தார். அவ்வாறே நமது வாழ்வு கடவுளின் நிறைவை நோக்கிய பயணமாக அமைய வேண்டும்.

கடவுளின்  மக்களாக வாழ விருப்பமில்லாது  "தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர்’ (யோவான் 12 :25)  என்பதுதான் உண்மை.

 இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது தூய ஆவியாரின் வழிகாட்டுதலால், உமது நிறைவான அருளை நான் நாள்தோறும் அனுபவிக்கவும், பிறரை மன்னிப்பதன்  மூலம் உமதருளை  பிறரோடு பகிரவும்  எனக்கு உதவுவீராக. ஆமென்
   
    
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452