நிலைப்பெயராத அன்புறவில் நிலைத்திருப்போம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

23 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 20ஆம் வாரம் – சனி
ரூத்து 2: 1-3, 8-11; 4: 13-17
மத்தேயு 23: 1-12
நிலைப்பெயராத அன்புறவில் நிலைத்திருப்போம்!
முதல் வாசகம்.
ரூத்தும் நவோமியும் (மருமகளும் மாமியாரும்) கணவர்கள் இழந்தவர்கள். திருச்சட்டத்தினபடி அவர்களை சமூகம் பராமரிக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் உயர்வாக மதிக்கப்படவில்லை. வயல்களின் அறுவடை முடிந்து, ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் கதிர்களை மற்ற புறக்கணிக்கப்பட்டவர்களும், ஏழைகளும் பொறுக்கிச் செல்ல திருட்டத்தில் அனுமதி இருந்ததால், வயிற்றுப்பிழைப்புக்குச் சிறிக்கிடக்கும் கதிர்கைளப் பொறுக்கிவர ரூத் வயலுக்குச் செல்கிறாள். அப்போது, போவாசு எனும் நில உரிமையாளரைச் சந்திக்க நேரிடுகிறது.
போவாசு, ரூத்திடம், “உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்” என்றார்.
பின்னர், போவாசும் ரூத்தும் (புறவினத்துப் பெண்) திருமணம் செய்துகொண்டு ஓபேத் என்ற மகனைப் பெற்றெடுக்கிறார்கள். ஒபேத்து நகோமியின் பேரக்குழந்தையாகக் கருதப்படுகிறார்.
ஆண்டவரிடம் திரும்புபவர்களை கடவுள் ஆசீர்வதிக்கிறார். நகோமியும் அவளுடைய மருமகள் ரூத்தும் கடவுளை நம்புகிறார்கள், கடவுள் அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குகிறார்கள், மேலும் அவர்கள் வருங்கால அரசரான தாவீதின் மூதாதையர்களாகவும், மெசியாவின் மூதாதையர்களாகவும் கடவுளால் தேர்வுச் செய்யப்படுகிறார்கள்.
நற்செய்தி.
நற்செய்தியில், சில மறைநூல் அறிஞர்களின் சூழ்ச்சி எண்ணத்தை இயேசு அறிந்திருக்கிறார். அவர்களின் பதவி மற்றும் அதிகாரத்தின் காரணமாக அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற தோற்றத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் திருச்சட்டத்தின் கடுமையான விளக்கத்தை மக்கள் மீது திணிக்கின்றனர், ஆனால் அன்றாட வாழ்வாதாரத்திற்குப் போராடுபவர்களுக்கு உதவ அவர்கள் தயாராக இல்லை என்றும், தங்கள் சமயத்தின் ஆடம்பரமான ஆடை, அடையாளங்களை அணிந்துகொள்வதன் மூலம் தங்கள் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்.
அவர் தொடர்ந்து, தலைவர்களின் அதிகாரத்தை மதிக்க வேண்டும் என்று இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார், ஆனால் அவர்கள் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கிறார். பெருமையாக நடந்து கொள்வதற்கும், பட்டம் பதவிகளைத் தேடுவதற்கு எதிராகவும் அவர் எச்சரிக்கிறார்.
ஆண்டவராகிய கடவுள் மட்டுமே உண்மையான அதிகாரம் கொண்ட தலைவர் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்றும், மற்ற அனைவரும் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் போதிக்கிறார்.
சிந்தனைக்கு.
பெரும்பாலான மறைநூல் பகுதிகளைப் போலவே இன்றைய வாசகங்களும் நமக்கு சவாலாக அமைககின்றன. மற்றவர்கள் மீதான மதிப்புமிகு எண்ணத்தையும் செயல்பாட்டையும் நாம் என்றும் மனதில் கொண்டு, மதிப்புக்கொடுத்து வாழ வேண்டும். முதல் வாசகத்தில் மாமியார் மெச்சிய மருமகளையும், மருமகள் மெச்சிய மருமகளையும் அறிந்தோம். கடவுள் அவர்களை மெசியாவாகிய இயேசுவுக்கு மூதாதையர்களாக உயர்த்தினார். இதில் ரூத் ஒரு புறவினத்து (மோவாபிய) பெண் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவருக்குப் பணியும் எவர் மீதும் கடவுள் வேற்றுமை பாராட்டுவதில்லை.
மற்றவர்களிடம் நாம் பழகும்போது, கடவுள் பயம் மற்றும் அன்பாக இருக்க வேண்டிய அவசியத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். இயேசு கடவுளின் மகனாக இருந்தாலும், அவர் சிறப்பு மரியாதையையும் சலுகைகளையும் யாரிடமிருந்தும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, இயேசுவின் சீடர்கள் சமூகத்தில் சிறப்பு மதிப்பும் மரியாதையும் எதிர்ப்பார்ப்பது கூடாது.
முடிந்தவரை மற்றவர்களுக்கு மிகவும் பணிவாக சேவை செய்யும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை, மிகவும் உயர்ந்த வாழ்க்கை ஆகும். இதைத்தான் இயேசு இன்று வலியுறுத்திக் கூறுகிறார். மேலும், இன்றைய நற்செய்தியில்,’ நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்’ என்கிறார் ஆண்டவர். இந்த பகுதியை வலியுறுத்தியே, பிரிந்த சகோதர சபையினர் கத்தோலிக்கர்கள் ‘அருள்பணியாளர்களை’ பாதர் என்று அழைப்பதைக் குறைகூறி வருவதுண்டு. இயேசுவின், ‘இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்’ என்பதை நேரடி பொருளில் எடுத்துக்கொண்டால், நம்மை ஈன்றெடுத்த தந்தையே வேறு எப்படி அழைப்பது?
‘பிள்ளைக்குத் தந்தை ஒருவன். நம் எல்லாருக்கும் தந்தை இறைவன்’ என்று இந்து சமயமும் படிப்பிக்கிறது. நாம் ஒரு குலமக்கள் என்பதை இயேசு இங்கே பதிய வைக்கிறார். கடவுள் என்றும் நமது ஆனமீகத் தந்தை. பவுல் அடிகள் கூட கொரிந்தியருக்கு எழுதய முதல் திருமுகத்தில் (4:15) தம்மை ஆன்மீகத் தந்தை எனக் கூறிக்கொள்வார். மற்றும், 1 தீமோ 1:18-ல் அவர் தீமோத்தேயுவை தனது ஆன்மீக மகன் என்றும் குறிப்பிட்டார், இது ஆன்மீக தந்தை-மகன் உறவை வெளிப்படுத்துகிறது. மக்களை விசுவாசத்திற்குக் கொண்டுவருவதில் பவுல் வகித்த பங்கைக் குறிக்கும் ஓர் உருவகக் குறிப்பாக ‘தந்தை’ எனும் சொல்லைப் பயன்படுத்தினார். மேலும், ஸ்தேவானும் “சகோதரரே, தந்தையரே, கேளுங்கள்’ என்று அழைப்புவிடுத்ததை எண்ணிப் பார்க்க வேண்டும் (திப 7:2). அவ்வாறே, நாமும் நமது குருவானவர்களைத் “தந்தை’ (பாதர்) என்று அன்போடும், நம்பிக்கையோடும் அழைக்கிறோம்.
கடவுளின் திருவுளப்படி வாழ முற்படுபவர்களை, கடவுளை தந்தை என்று அழைப்பவர்களை அவர் எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக கடவுள் அருளும் ஆசீர்வாதங்கள் வெளிப்படுத்துகின்றன.
இறைவேண்டல்.
அன்பு இயேசுவே, எங்கள் அன்புறவில் நாங்கள் நிலைப்பெயராது, நிலைத்திருக்கச் செய்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
